2025க்குள் இரண்டு நாவல்களை முடிக்கும் நம்பிக்கை இருக்கிறது - ஒன்று "கறுப்பு தினம்". இன்னொன்று "ஒரு முடிவற்ற துப்பறியும் கதை". அபுனைவில் "ஆண் ஏன் அடிமையானான்?" எனும் புத்தகம் ஒன்றும் 2025க்கான என் திட்டத்தில் இருக்கிறது.
இந்த ஆண்டு நான் செய்த தவறு பணம் குறித்த கவலைகளை என்னைத் தின்ன அனுமதித்தது. என்னதான் முயன்றாலும் சில விசயங்களை மாற்ற முடியாது எனும்போது நம் கட்டுக்குள் இருக்கும் எழுத்தில் அதிக கவனம் அளித்து உணர்வுகளைக் குவிப்பது கூடுதல் நிறைவை, மகிழ்ச்சியைத் தரும். என்னால் இன்னொருவராக இருக்க முடியாது. 2025இல் நான் என் நிலையில் திருப்தியாக மகிழ்வாக இருக்க முயல்வேன். இந்த வாழ்வு நான் பிறந்ததில் இருந்தே ஏவப்ப்பட்ட அம்பு. அதன் திசையை நான் இப்போது குறுக்கிட்டு மாற்றமுடியாது. இது எதை நோக்கிப் போகிறதோ அங்கேயே போய்ச் சேரட்டும்.
2024ஐ உற்சாகமாக மாற்றிய பல்லவிக்கு, என் கட்டுரைகளைப் பதிப்பித்த சுதீர் செந்தில் அண்ணனுக்கு, மனுஷ்யபுத்திரனுக்கு, என் நாவலை இந்தாண்டு பதிப்பிக்கும் ஜீரோ டிகிரி பதிப்பக காயத்ரி, ராம்ஜிக்கு நன்றி. "நிழல் பொம்மை" நாவலைப் படித்து உரையாடப் போகும் வாசக நண்பர்களுக்கும், ஏற்கனவே படித்து கருத்தைத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.
பிரியத்துக்குரிய நண்பர்கள் எல்லாருக்கு அன்பு.