என்னுடைய நூல்கள் இரண்டும் இப்புத்தகக் கண்காட்சியில் தாமதமாகவே வருவதால் நானும் தாமதமாகவே வருவேன் என நினைக்கிறேன். வந்தால் நாலு படைப்பாளிகளையும் சில வாசகர்களையும் காண்பது உற்சாகமூட்டும்தான். ஆனால் வருடாவருடம் பேருந்தில் அலுங்கிக் குலுங்கி நசுங்குவது போல சின்ன பெட்டிக்குள் உறங்கிக்கொண்டு வரவேண்டும், எதாவதொரு பாடாவதி லாட்ஜில் தங்கவேண்டும் என்று நினைத்தாலே கசப்பாக இருக்கிறது. விடுப்பெடுக்க வேறு நிறைய எத்தனம் தேவை. அலுப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய?
கடந்த சில மாதங்களில் மட்டுமே இரண்டு புத்தக விழாக்கள் பெங்களூரில் நடந்துவிட்டன. என்னையோ என் வயதையொத்த பிற பெங்களூர் வாழ் எழுத்தாளர்களையோ ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கவில்லை. வருடாவருடம் ஒரே குழுவைத்தான் அழைப்பார்கள். நாங்கள் இந்த நகரத்தில் இன்னொரு இருபதாண்டுகள் வாழ்ந்தால் எங்களைத் தொடர்ந்து அழைப்பார்கள், அப்போது எழுதும் இளைஞர்களை விட்டுவிடுவார்கள். சரி மூத்த எழுத்தாளர்களிலும் பலதரப்பட்டவர்களை அழைக்க மாட்டார்கள். ஒரே தெருக்காரர்கள் திரும்பத் திரும்ப அப்பகுதியில் நடக்கும் கல்யாணத்துக்குப் போவதைப் போலவே நடக்கும். மூன்று சட்டைப் பேண்டுகளை பெட்டியில் பேக் செய்து கிளம்பினால் ஒரே படைப்பாளியே இரண்டு வாரங்களில் மூன்று நான்கு விழாக்களில் பங்கேற்று ஒரே மாதிரிப் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட முடியும். இவர்கள் கூப்பிட்டால் அதைப் பார்த்து அவர்கள் அழைப்பார்கள், அவர்கள் அழைப்பதால் இவர்கள் கூப்பிடுவார்கள். கவுண்டமணி ஒரு படத்தில் மாடியில் ஒரு மனைவியையும் கீழ்த்தளத்தில் மற்றொரு மனைவியையும் வைத்துக்கொண்டு அங்கிங்கே தாவி படாதபாடு படுவதைப் போல ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களும் எவ்வளவுதான் செய்வார்கள்! ஒருங்கிணைப்பாளர்களைத்தான் சொல்லவேண்டும்.
இலக்கியத் திருவிழாக்கள் தமிழைப் பொறுத்தமட்டில் எழுத்தை அல்ல வயதையும் தொடர்புகளையும் சார்ந்து படைப்பாளிகளை அழைக்கும் விவகாரமாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் குழுக்களைக் கட்டமைத்து அரசியல் செய்து தொடர்புகளால் எல்லா இடங்களிலும் அழைக்கப்படுபவர்கள் "போய் உன் தகுதியை வளர்த்துக் கொள், அழைக்கவில்லை என்று புலம்பாதே" என்று எகத்தாளம் செய்கிறார்கள். இவர்கள் காலில் விழுந்தும் இடம்பிடிக்கும் தகுதியே வேண்டாம்.
மேலும், இந்த சனியன்கள் மீது வரவர கோபமே வரமாட்டேன் என்கிறது. ஒரு படத்தில் கவுண்டமணி காதுகேளாத ஒருவரிடம் பேச முயன்று பர்ஸைப் பார்த்தீங்களா என்று கேட்டு ஆட்டோக்காரரா என்று புரிந்துகொள்ளப்பட்டு வாழ்க்கை வெறுத்துப் போய் "காது கேட்காதா காதே இல்ல டாக்டர்" என்பாரே அப்படித்தான் இதுவும் வேடிக்கையாகி விட்டது. இவர்களிடம் நான் ஒரு எழுத்தாளர் என்றால் "என்ன ஏரோபிளேனில் போகணுமா?" என்று தமாஷ் பண்ணுவார்கள். இலக்கிய வாசிப்பென்றால் ஒன்றிரண்டு வெப்சைட்டுகளை வாசிப்பதும் குழு அரசியல் செய்வதும் தான் எனத் தீவிரமாக நம்புகிறார்கள். அதைத் தாண்டி ஒன்றுமே தெரியாது.
அதனால் சென்னை புத்தக விழாவில் பதிப்பாளரின் அரங்கில் போய் அமர்வதே வாசகர்களைச் சந்திக்க ஒரே வழியாக உள்ளது. அங்கே யாரும் அழைக்கவும் தேவையில்லை, தடுக்கவும் போவதில்லை.