நாம்தாம் அண்ணாமலையின் சாட்டையடிப் போராட்டத்தைப் பார்த்து சிரிக்கிறோம். நமக்கு அவர் மீம் மெட்டீரியல். ஆனால் வடக்கத்தியர்களுக்கு இதன் பின்னணி, அர்த்தம் புரியாது. அவர்கள் இதை மிக சீரியஸாக பார்த்து நெருப்பைப் பறக்கவிடுவார்கள். குறிப்பாக தில்லியில் ஷாவும் மோடியும் மிகவும் இம்பிரெஸ் ஆகிவிடுவார். நாம் இமயமலை, கங்கா தீரத்தில் வீடியோ ஷூட் பண்ணியிருக்கிறோம், இவர் சாட்டையால் அடிப்பது, தலைகீழாக குதிப்பது என என்னென்னமோ பண்ணுகிறாரே என்று மூக்கில் விரலை வைப்பார். எத்தனையோ தலைவர்களை தமிழ்நாட்டுத் தலைமைக்கு அனுப்புகிறோம், இவர் யாரும் பண்ணாத வித்தையெல்லாம் காட்டுகிறாரே என்று வியந்து போவார். அண்ணாமலையின் தேசிய மைலேஜ் நிச்சயமாக ஏறும்.
என்னிடம் கேட்டால் இதை அவர் வாராவாரம் செய்யவேண்டும் - மலை மீதிருந்து குதிக்கவேண்டும், யானையை தன் உடல்மேல் நடக்கவிட வேண்டும், பல்லால் லாரியைக் கட்டி இழுக்கவேண்டும். இப்படி எவ்வளவோ செய்யலாம். ஜாலியாக இருக்கும். தில்லியிலும் தலைவர்கள் ராகுல் காந்தியை எதிர்த்து ஆயிரம் ஆணிகளைத் தின்பது, கார் பேட்டரியை முழுங்குவது, ஆயிரம் டியூப் லைட்களை மெல்லாமலே கடிக்காமலே முழுசாக முழுங்குவது, பத்தாயிரம் காண்டம்களை சவைத்துத் துப்புவது போன்ற போராட்டங்களைச் செய்யவேண்டும். நாட்டு மக்கள் பொருளாதார வீக்கத்தின், ஏழ்மையின், வேலையில்லா திண்டாட்டத்தின் நெருக்கடியில் இருந்து ஆசுவாசம் பெற்று ஜாலியாக இருக்க முடியும்.
அரசியலில் உண்மையான பின்நவீன முன்னோடி என்றால் அண்ணாமலைதான். அவரை பாஜகவினர் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் எனது என் வேண்டுகோள்.