பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்பதில் இருந்து அரசு வழுவிக்கொள்ள அவரவர் தேவைக்கேற்ப பாடங்களைத் தேர்வு பண்ணும் 'உணவக மெனுகார்ட்' நடைமுறை வரும், பல்வேறு பாடத்திட்டங்கள், கஸ்டமைஸ்ட் பாடத்திட்டங்கள் வரும். 12 வயதுக்கு மேல் தொழில் செய்து கல்வி கற்கும் சூழல் ஊக்கப்படுத்தப்படும்.
இந்த களேபரத்தின் இடையே, மாணவர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய கட்டாய மொழிக் கொள்கைகள் சாத்தியமாகாது. மாணவர்கள் தமக்குத் தேவையெனக் கருதும் மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது மாறிக்கொண்டே வரும். பெங்களூரில் பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு கன்னடாவில் வாசிக்கத் தெரியாது. எதிர்காலத்தில் இந்தி, சமஸ்கிருதம், உள்ளூர் மொழி எதையும் படிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தைக் கூட செயலியே நமக்காக எழுதும் எனும்போது அதையும் முறையாகப் படிக்க மாட்டார்கள். முழுக்க மாறுபட்ட வினோதமான மேலோட்டமான சமூகம் ஒன்று உருவாகும். இப்போதைய தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினாலே இப்போக்கின் சாயலை உணர முடியும்.
சி.பி.எஸ்.ஸி கல்வித்திட்டம் பற்றி அண்ணாமலை சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஒரே மாறுபாடு சி.பி.எஸ்ஸியே எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது என்பது. ஒன்றிய அரசின் பண்பாட்டு தேசியம் தற்காலிக மேகமூட்டம் மட்டுமே. உ.தா., புதிய கல்விக்கொள்கைக்குப் பிறகு முதலாமாண்டு மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடம் இருக்கும். மாநில மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும்படி பு.க.கொ பெயருக்கு கூறினாலும் அதற்கு எதிராகவே உள்ளது. திறன்சார் கல்வி, வேலை உத்தரவாதம் அளிக்கும் கல்வி எனும் பெயரில் மொழியை, பண்பாட்டுப் பாடங்களை அது ஒழித்து வருகிறது. இந்தியா முழுக்க எத்தனை மொழியாசிரியர்கள் இப்போது உள்ளார்கள், எத்தனை பேர்களை அரசு புதிதாக வேலையில் அமர்த்துகிறது எனக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். இன்று தம் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கவே பெற்றோர்கள் பெரும்பாடு பட்டாக வேண்டும்
பாஜகவும் திமுகவும் மோதிக்கொள்வது ஒரு தற்காலிக முரண்பாட்டுக்காகவே. கல்வியை தனியாரிடம் முழுமையாகக் கொடுக்காமல் அரசே அதில் பங்குதாரராக இருந்தால் மட்டுமே இம்மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்து கொள்கை வகுக்க முடியும். மொழிக்கொள்கைக்கு முன்பு அதற்குத் தோதான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இப்போதைக்கு கவனம் திருப்பும் விவாதம் மட்டுமே இது.