பல்கலைக்கழக மானியக் குழு ugc care list எனும் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதில் வரும் இதழ்களின் பட்டியலுக்குள் ஆய்வாளர்களும் விரிவுரையாளர்களும் கட்டுரைகளைப் பிரசுரித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று முன்பு கூறியது. இப்போது அப்பட்டியல் தேவையில்லை, தகுதியான இதழ்களை சம்மந்தபட்ட கல்வி நிறுவனங்களே தேர்வு பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறது. இதை கல்வியாளர்களின் சுதந்திரத்துக்கான முக்கியமான படி என்கிறது. ஆனால் நிஜத்தில் இது இருமுனை கத்தி - அரசுதவி பெறும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் தம் விருப்படி இதழ்களில் பிரசுரிக்க, பதவி உயர்வு பெற, அங்கு ஆய்வு பெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்களும் சுலபத்தில் பட்டம் பெற இது உதவும். ஆனால் தனியார் பல்கலைக்கழங்களில் வேலை செய்யும் விரிவுரையாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இது தலையில் விழும் பெரிய இடி - ஏற்கனவே அங்கு நிர்வாகங்கள் எந்த இந்திய இதழ்களில் ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பதையும் ஏற்பதில்லை. Scopus, web of science ஆகிய எல்சிவியர் போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் வெளியிடும் தரப்பட்டியலில் உள்ள இதழ்களில் பிரசுரித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. இது மானுடவியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், இந்திய ஆய்வாளர்களுக்கும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது - ஒரு கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரமாக இரண்டாண்டுகள் வரை ஆகின்றன. நிர்வாகங்கள் பொதுவாக இந்த இதழ்களில் 2-4 கட்டுரைகளாவது வெளியிடாவிட்டால் வேலைநீக்கம் செய்வதாக மிரட்டுகின்றன. வேலையைப் பாதுகாப்பது பெரிய பிரயத்தனமே தேவைப்படுகிறது. இந்த பிரசுரம் பொதுவாக அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் சுலபம் - தரவுகள் சார்ந்த கட்டுரைகள் உடனடியாக வந்துவிடும். ஆனால் இலக்கியம், தத்துவம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளை இந்த இதழ்கள் அலட்சியமாக நிராகரிக்கும். மேலும் நாம் அமெரிக்காவில், இங்கிலாந்தில் இருந்து கட்டுரை அனுப்பினால் கிடைக்கும் பிரசுர வாய்ப்பு ஆசிய நாடுகளில் இருந்து அனுப்பினால் இருக்காது - இதழாசிரியர்கள் வெள்ளையர்களாகையால் நம்மைத் துச்சமாகவே பார்ப்பர். இன்னொரு பக்கம் ஆறு மாதத்துக்குள் பிரசுரிக்க 60,000-2 லட்சம் வரை பிரசுர கட்டணமாக இந்த இதழ்கள் கேட்கின்றன. தனியாரில் வேலை செய்பவர்கள் இரண்டு கட்டுரைகளுக்கு சராசரியாக ஒன்றரை, ரெண்டு லட்சங்கள் செலவழிக்கும் நிலையிலா இருப்பார்கள்? அந்த பணமிருந்தால் ஆட்டோ வாங்கி ஓட்டிப்பிழைக்கலாம்.
சில தனியார் உயர்கல்வி நிறுவனங்களோ NAACஇல் அதிக புள்ளிகள் பெறுவதற்காகவும் சர்வதேச தனியார் தரவரிசையில் முன்னிலைக்கு வருவதற்காகபும் சில முகவர்களுக்குப் பணம் கொடுத்து தமது பேராசிரியர்களுக்கு தலா இரண்டு scopus ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்றுவிட்டர்கள். சில தனியார் பேராசிரியர் நண்பர்கள் தம் பெயரில் தாமே எழுதாத கட்டுரைகள் வந்ததைக் கண்டு இது கனவா நனவா எனக் குழப்பமானார்கள். அதுதம் நிர்வாகத்தின் கைங்கரியமே எனத் தெரிந்தபின்னர்தான் நிதானமானார்கள். இன்னும் சில நிறுவனங்களிலோ ஒரு துறைக்குள் இருந்து 8-10 பேர்கள் பிரசுரக் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் - ஆளுக்கு 10,000-20,000 போட்டு சக-எழுத்தாளர் எனத் தம் பெயரை வரவழைத்து வேலையைக் காப்பாற்றுகிறார்கள். யாராவது ஒருவர் மொத்த கட்டுரையையும் எழுதினால் அவருக்கான பங்கை பெருமளவில் குறைத்து மற்றவர்கள் அதிகப் பணம் செலுத்துகிறார்கள். இந்த ஊழல் ஏன் நடக்கிறது? ஆய்வுக்கட்டுரை எழுதும் திறனும் அனுபவமும் இருந்தாலும் பிரசுரிக்கவே முடியாத அளவுக்கு நிபந்தனைகளை உண்டு பண்ணுவதால், வேலை போகும் நெருக்கடி வருவதால் ஊழல் தோன்றுகிறது.
இதில் தமிழாசிரியர்கள் உள்ளிட்ட இந்திய மொழி ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபமானது - Scopus, web of science தர வரிசைப்பட்டியலில் அவர்களுடைய மொழிக்கான இதழ்கள் மணலில் மயிர் போலத்தான் கிடைக்கும். ஒரேயடியாக அவர்களுடைய எல்லா வாய்ப்புகளையும் மறுத்து ஒடுக்குவதாக இந்த பிரசுர நிபந்தனை உள்ளது. அண்மையில் தனியார் பல்கலையொன்றில் வேலை செய்யும் எழுத்தாளர் நண்பரிடம் பேசியபோது இதைப்பற்றி ரொம்ப நேரம் புலம்பினார். அவர் காலச்சுவடு மாதிரி மானியக்குழுவின் தரவரிசையில் உள்ள இதழ்களில் பிரசுரித்து சமாளித்து வந்தார். இப்போது மானியக் குழு தன் பட்டியலைக் கைவிட்டபின் அவரைப் போன்றவர்கள் சுடுகாட்டில் நின்று தன் மனைவி, குழந்தையைப் பார்த்த ஹரிசநதிரனைப் போலாகிவிடுவார்கள்.
முன்பு மானியக் குழுவின் பட்டியல் இருந்தபோது சில கல்லூரிகள், பல்கலைகளாவது இந்திய இதழ்களில் வரும் கட்டுரைகளை ஏற்றுவந்தார்கள். இனிமேல் எல்லாருமே ஒரே குரலில் scopus, web of science மட்டுமே வேண்டும் என்பார்கள். யோசித்துப் பாருங்கள் - இந்த தரவரிசைப் பட்டியலில் வரும் மானுடவியல் துறைக்கான இதழ்களில் சில நூறுக்குள்தான் இருக்கும். இந்தியாவில் உள்ள 5-6 லட்சம் தனியார் பேராசிரியர்கள் இந்த சிறிய பட்டியலுக்குள் மொத்தமாகப் பிரசுரிக்க வேண்டுமெனில், அதுவும் இனவாத துவேசத்துடன் வெள்ளையர்கள் நம்மை பார்த்ததுமே நிராகரிக்கும்போது எவ்வளவு கொடுமையாக இருக்கும். மேலும், இது இந்த தரவரிசைப் பட்டியலுக்குள் வரும் இதழ்களை மொத்தமாக தரமற்றவை எனும் உணர்வை, பொதுப்பிம்பத்தை ஏற்படுத்துகிறது - யோசித்துப் பாருங்கள்: இரண்டு தரவரிசை நிறுவனங்களுமே சில தனியார் நிறுவனங்களுடையவை. இந்நிறுவனங்கள் தமக்கான இதழ்களை நடத்துகிறார்கள். இந்த இதழ்களில் சுலபத்தில் பட்டியலுக்குள் வருகின்றன. அவர்களுக்கு பிரசுரக் கட்டணம் நூறு கோடிக்கு மேல் வருடத்திற்கு வருகிறது என்று அண்மையில் ஒரு கட்டுரையில் படித்தேன். இது நம் காலத்தின் மகத்தான ஊழல்களில் ஒன்று.
இந்திய அரசு ஒருபக்கம் இந்திய அறிவுத்துறைகள், பண்பாட்டுத் துறைகளை முன்னெடுப்போம், இந்திய அறிவுப் புல ஆய்வுகள் எனத் தம்பட்டம் அடிக்கிறது, இன்னொரு பக்கம், வெளிநாட்டு இதழ்களில் வருவன மட்டுமே தரமான ஆய்வுக் கட்டுரைகள் என்கிறது. இப்படி முரண்பாட்டு மூட்டையாக அது உள்ளது.
மானியக் குழுவைப் பொறுத்தமட்டில் அரசு ஊழியர்களைத் தவிர மற்றவர்களை அது மனிதர்களாகவே மதிப்பதில்லை. தனியார் ஊழியர்கள் செத்தாலும் அது எங்களுக்குப் பொருட்டில்லை எனும் மனப்பான்மை கொண்டவர்கள் மானியக் குழுவின் நிர்வாகிகள். அவர்கள் தனியார் விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வலியுறுத்த மாட்டார்கள், அதிகபட்ச வேலை நேரத்தை வலியுறுத்த மாட்டார்கள், அவர்களுடைய NAAC எனும் குழு அவ்வபோது வந்து தனியார் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கட்டமைப்பு வசதியும் கிடைக்கிறதா என்று மட்டும் ஆய்வு செய்வார்கள், ஆனால் அங்கு மாடு மாதிரி வேலை செய்யும் விரிவுரையாளர்களுக்கு அடிப்படை வசதி, நல்ல சம்பளம், ஓய்வு, ஆய்வுக்கான அவகாசம் உள்ளதா என்று விசாரிக்கக் கூட மாட்டார்கள். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பால் உற்பத்தி நிலையத்தில் பால் தரமாக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள், பசுமாடுகள் சுத்தமாக ஆரோக்கியமாக வைக்கப்பட்டுள்ளனவா என்று விசாரிக்க மாட்டார்கள் அல்லவா அப்படித்தான் மானியக் குழுவும் இருக்கும். (போதாதற்கு ஒவ்வொரு கல்லூரி, பல்கலையிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியே அவர்களுக்கு 4-5 நட்சத்திரங்களை இந்த NAAC குழுவினர் அளிப்பார்கள். இந்தியா முழுக்க உள்ள நிறுவனங்களிடம் இருந்து எத்தனை நூறு கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள் என ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள்.)
பொதுவாக உயர் கல்வியை மெல்லமெல்ல முழுமையாக தனியார் வசம் தள்ளிவிட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் தீர்மானம். எப்படியும் அடுத்த அரைநூற்றாண்டுக்குள் இங்கு அரசு கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ இருக்காது. போதுமான அளவுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வந்ததும், தன்னாட்சி தனியார் கல்லூரிகள் பெருகியதும், மாணவர் சேர்க்கைப் போதாமையையும், சமூகத்தில் பொதுவாக அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அரசு இப்போதுள்ள அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஒவ்வொன்றாக மூடும். அதன்பிறகு ஒட்டுமொத்த உயர்கல்வி அமைப்பும் தனியார் சார்ந்ததாகும். அப்போது விரிவுரையார்களின் சம்பளம் ஓலா ஓட்டுநர்களின் ஊதியமாகவும் மாணவர்களின் வருடாந்திர கட்டணம் 30-40 லட்சமெனும் கணக்கில் இருக்கும். இப்போது அரசுக் கல்லூரிகள் உள்ளதால் ஓரளவுக்கேனும் கட்டணத்திலும் ஊதியத்திலும் ஒப்பீட்டளவில் கட்டுப்பாடும் சமநிலையும் உள்ளது. அதாவது கட்டணத்தை அரசு வசூலிப்பதில் இருந்து பத்து மடங்கும், சம்பளத்தை நான்கில் ஒரு மடங்காகவும் கொடுக்கிறார்கள் எனில் முழுக்க தனியார் வசம் போனதும் கட்டணத்தை 50 மடங்கு உயர்த்தி, சம்பளத்தை பத்து மடங்காகக் குறைப்பார்கள் (தனியார் பள்ளிகளில் கடந்த பத்தாண்டுகளில் எந்தளவுக்கு கட்டணம் உயர்ந்து சம்பளம் குறைந்துள்ளது என்பதைப் பார்த்தாலே நான் சொல்வதன் நியாயம் புரியும்.)
இந்தியாவின் எதிர்காலம் இப்படி எல்லா விதங்களிலும் மிகமிக கொடூரமாகவே தெரிகிறது. இப்படியான அறவுணர்வோ லட்சியமோ இல்லாத ஆட்சியாளர்களின் கீழ் நம் நாடு இருப்பதற்கு பூமி மொத்தமாக உள்வாங்கி இந்த நாட்டை விழுங்கிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஊழல் வரலாற்றைப் படிக்க:
https://www.thehindu.com/news/national/karnataka/naac-bribery-case-action-against-professors-if-cbi-provides-evidence-says-minister/article69189257.ece#:~:text=KLEF%20was%20accused%20of%20offering,a%20case%20and%20is%20investigating.
https://www.newindianexpress.com/states/karnataka/2025/Feb/03/cbi-arrests-davangere-university-professor-in-bribery-case-involving-naac-inspection-committee
https://indianexpress.com/article/india/naac-inspection-team-head-took-rs-10-lakh-for-favourable-report-cbi-in-fir-9814017/
https://www.deepeshdivakaran.com/post/the-recent-naac-bribery-arrests-are-just-the-tip-of-the-iceberg-every-a-a-and-a-grade-is-ques
ஆய்விதழ்களின் பிரசுரக் கட்டண ஊழல் பற்றிப் படிக்க:
https://www.nature.com/articles/489179a
https://www.researchgate.net/publication/315057317_The_Fraud_of_Open_Access_Publishing