மனுஷ்ய புத்திரன் எனது பிரியத்துக்குரிய கவிஞர், பதிப்பாளர், அடிப்படையில் எனக்கு பல விசயங்களில் ஆதர்சமாக உள்ள ஆளுமை. ஆனால் முதன்முதலாக அவரது அவரது "மாவட்டப் புத்தகத் திருவிழா: உள்ளூர் எழுத்தாளருக்கான பரிவட்டம் அல்ல" எனும் கட்டுரை எனக்கு மிகுந்த கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதிலுள்ள தொனி அதிகாரத்துவத்தின், முற்றதிகாரத்தின் தொனி மிக மோசமானது. இது கண்டிக்கத்தக்கது. உள்ளூர் எழுத்தாளர்கள் தமக்கு தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தைக் கோருகிறார்கள் எனப் பொருட்பட அவர்களுக்கு பரிவட்டம் கட்ட புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை என்கிறார். யார் இங்கே பரிவட்டத்தைக் கோருகிறார்கள்? உள்ளூர் படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்டவர்களே தம்மை மேடையில் பேச வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு அத்தகுதி இல்லையா? நிச்சயமாக உள்ளது. இப்படிப் பேசுபவர்களை மனுஷ்ய புத்திரன் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளை, தமிழ் மொழியை, பண்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றும், இலக்கிய விழாக்களை மொத்தமாக நிறுத்தி வைப்பதே உள்நோக்கம் என்கிறார். பட்டிமன்ற பேச்சாளர்களைப் பகடி செய்யும் எழுத்தாளர்களை விஷமக்காரர்கள், சமூகவிரோதிகள் எனும் தொனிப்பட கண்டிக்கிறார். என்னையும் அவர் இதைவிட மோசமாகத் திட்டினாலும் நான் கவலைப்பட மாட்டேன். நான் அடிப்படையில் தெருநாயைப் போன்றவன். எனக்கு உயரிய விசயங்களுக்காக தெருச்சண்டை போடவும், கடி வாங்கவும் பிடிக்கும். அதுவே என்னை உக்கிரமாக்கும்.
என் சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகளான முக்கிய கவிஞர்களே தாம் நிகழ்ச்சியின் திட்டமிடலில் பங்கேற்க அழைக்கப்படுவதில்லை, நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்படுவதில்லை, முழுக்கமுழுக்க அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ்ஸும், சாதியவாதிகளுமாக தமக்குத் தேவையானவர்களை மட்டுமே முன்வைக்கிறார்கள், வாய்ப்பளிக்கிறார்கள் என்று வலுவாக குற்றச்சாட்டும் வருத்தமும் பதிவு செய்துள்ளார்கள் (பார்க்க என்.டி ராஜ்குமாரின் பதிவு). நான் இதைப் பற்றி மேலும் என் ஊரிலுள்ள எழுத்தாளர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சொல்வதுபடிப் பார்த்தால், நிகழ்ச்சித் திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் எந்த ஜனநாயகப் பங்களிப்பையும் அவசியப்படுத்தப்படாத நடைமுறையைக் கொண்டுள்ளது. நடத்தும் பொறுப்பு முழுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் போன்றோரிடம் உள்ளது. அவர்கள் கருத்துக் கேட்கும் கூட்டமொன்றை இலக்கிய அமைப்புகளுக்காக நடத்தி அழைப்பு விடுக்கிறார்கள். அமைப்பினர் அதில் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு இலக்கிய அரங்குகளைத் திட்டமிட்டு பேச்சாளர்களின் பட்டியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இந்தப் பட்டியலில் 50% எடுத்துக்கொண்டு மிச்ச பேர்களை தாஸில்தாரின் உறவினர்கள், அதிகாரிகளுக்குத் தெரிந்தவர்கள், நூலகத் துறையின் பரிந்துரை (இதில் வேறொரு சிக்கலுண்டு. அதற்கு கடைசியில் வருகிறேன்.) ஆகியவற்றின்படி அதிகாரிகள் இறுதிப்பட்டியலைத் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரலை உறுதி செய்கிறார்கள், மிகக்குறைந்த அவகாசத்திலேயே நிகழ்ச்சியைத் திட்டமிடுகிறார்கள் என்பதால் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களைப் பக்குவமாகப் பேசி நிகழ்ச்சிக்கு கொண்டு வரும் பொறுமையிருப்பதில்லை. ஒருமுறை போனை எடுக்காவிட்டால் அப்படியே விட்டுவிட்டு அந்த எழுத்தாளர் / சிந்தனையாளரின் இடத்தில் அதிகாரியின் சொந்தக்கார பேராசிரியரை பேச வைக்கிறார்கள் அல்லது அரங்கையே ரத்துபண்ணி விடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகளின் இந்த எதேச்சரிகார மனநிலை காரணமாகவோ பொதுவான அதிகாரத்துவ நடைமுறை காரணமாகவோ கலை இலக்கியப் பெருமன்றத்தினர் பெரும் ஆர்வமெடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயலவில்லை. விளைவாக ஒரு படைப்பாளியும் அங்கிருந்து அழைக்கப்படாமல் மோசமாக நடந்தன. ஆகையால் இம்முறை சில படைப்பாளிகள் அமைப்பின் சார்பாக அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அதிகாரிகளுடன் பேசி தம் தொடர்ந்து முயற்சியெடுத்து தம் தரப்பில் இருந்து அரங்குகளைத் தீர்மானித்தார்கள். நீங்கள் ஒரு பட்டிமன்றப் பேச்சாளரை அழைத்து அவருக்கு 50,000 சன்மானம் கொடுப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இருபது இளம் படைப்பாளிகளை அழைத்து வாய்ப்பளிக்கலாமே என்று அவர்கள் கேட்டதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு பட்டியலைத் தயாரிக்க அனுமதி அளித்தார்கள். அப்போது நடந்த ஒரு வருத்தமான வேடிக்கையைக் குறிப்பிட வேண்டும். முக்கியமான படைப்பாளிகள் கலந்துகொள்ளும் அரங்குக்கு ஒரு கவிஞர் தலைமை தாங்க வேண்டும். அவரை அதிகாரி ஒருவர் அழைத்தபோது அவர் மறுத்துவிட அரங்கையே ரத்து செய்வதாக அவர் தீர்மானித்து சம்மந்தப்பட்ட கவிஞர்களிடமும் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையா? அரங்கைத் தலைமை தாங்க ஆள் கிடைப்பதா கஷ்டம்? நான் அண்மையில் கூட சர்வதேச, தேசிய அளவில் அறியப்பட்ட மூன்று தமிழ் எழுத்தாளர்கள், இரண்டு பதிப்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றைத் திட்டமிட்டு நடத்தினேன். எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் அரைமணிதான். பெங்களூரில் இருந்துகொண்டு என்னால் சுலபமாக அதைச் செய்ய முடியும்போது உள்ளூர் அதிகாரிகளால் உள்ளூர் படைப்பாளிகளை ஒருமணிநேரத்தில் ஏன் ஒருங்கிணைக்க முடியாது? ஏனென்றால் அவர்களுக்கு யாரையும் தெரியாது, அவர்களையும் யாருக்கும் தெரியாது. நான் கடந்த 8 ஆண்டுகளில் என் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுக்கு அழைத்த எந்த முன்னணி படைப்பாளியும் மறுத்ததில்லை. என் மீதுள்ள நம்பிக்கையும், மரியாதையும் அதற்குக் காரணம். இந்த அரசு செய்யும் மிகப்பெரிய தவறே வாழ்க்கையில் புத்தகமே படிக்காதவர்களை புத்தகத் திருவிழாவை ஒருங்கிணைக்கச் சொல்வதுதான். ஒரு உதாரணம் சொல்கிறேன்: சாகித்ய அகாடெமி விருது வாங்கிய படைப்பாளி ஒருவர் இவர்கள் தொடர்ந்து அழைக்கவே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு எந்த ஆண்டு யாருக்கு விருது கிடைக்கிறது என்றே தெரியாது. ஏனென்றால் அவர்கள் நாளிதழ் கூடப் படிப்பதில்லை. அந்த எழுத்தாளர் நேரடியாக ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரின் முதன்மைச் செயலரிடம் “நான் விருது பெற்ற எழுத்தாளர், என்னை ஏன் நீங்கள் அழைக்கவில்லை” என்று கேட்டார். உடனே அவருக்கு ஒரு அரங்கு கொடுத்தார்கள். இதைப்போல ஒரு அவலம் உலகில் உண்டா? அவர்களுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தேசிய விருது பெற்றவர்களிலே ஓரிருவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது (அதுவும் சில பரிந்துரைகளால்தான் தெரியும்). நெல்லையைப் போன்ற சில மாவட்டங்களில் த.மு.எ.சாவால் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நன்றாக வேலை செய்ய முடிகிறது (அங்கும் மேற்சொன்ன அதிகாரவர்க்க பரிந்துரைகளால் குப்பைகள் புகுந்துவிடுகிறார்கள்தாம்.) எழுத்தாளர் அமைப்புகள் முன்னெடுப்பு செய்யாதபோது அது முழுக்க நான்கைந்து அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக நடத்தும் குடும்ப விழாவாக மாறிவிடுகிறது.
மாவட்ட நிர்வாகிகள், உள்ளூர் ‘பண்பாட்டு அமைப்புகள்’, பொது நூலகத் துறை, பபாஸி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சேர்ந்து அந்தந்த மாவட்டத்தின் இலக்கிய விழாவைத் திட்டமிடுவதாக மனுஷ்ய புத்திரன் சொல்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தைப் போன்றே வேறுபல மாவட்டங்களிலும் இப்படியான ஜனநாயகபூர்வமான கலந்தாலோசனை இல்லாமல் சில அதிகாரிகள் மட்டுமே சேர்ந்து முடிவெடுப்பதாகவும், மக்களும் எழுத்தாளர்களும் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை என்றும் என்னிடம் பல எழுத்தாளர்கள் தெரிவித்தார்கள்.
இதில் அடிப்படையான பிரச்சினையே இதுதான்: நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழு / நிர்வாகக் குழுவில் உள்ளூர் பண்பாட்டு அமைப்பு, விருது பெற்ற படைப்பாளிகள், இளம் படைப்பாளிகளிடம் இருந்து தலா இரண்டு பிரதிநிதிகளும், குழுவின் தலைவராக ஒரு அதிகாரியும் இருக்க வேண்டும் என நடைமுறையைக் கொண்டு வந்தாலே அங்கு ஜனநாயக பூர்வமான நிலை ஏற்படும். அரசு இது முழுக்க ‘அரசு விழாவாக’ மாற்றுவதே இங்கு சிக்கல். ஏனென்றால் அரசின் குழுக்களில் இருப்பவர்களின் பரிந்துரைகளும், செல்வாக்கும் அழுத்தமும் ஒரு பக்கம், அதிகாரிகளின் தனிப்பட்ட நட்பு, குடும்ப வட்டத்தைச் சேர்ந்தவர்களைச் சேர்க்கும் தேவை, சாதியக் குழுக்களை திருப்திப்படுத்தும் முயற்சி இன்னொரு பக்கம் என நிகழ்ச்சி மக்களுக்கும் மொழிக்கும் எதிரான ஒன்றாக மாறிவிடுகிறது. வேட்டையாடப்பட்ட இரையின் கறியை வாயில் அதக்கி வந்து தம் பிள்ளைளுக்கு பங்குபோட்டுக் கொடுக்கும் கழுதைப்புலிகளின் சடங்காக புத்தகத் திருவிழா நிகழ்வுகள் மாறிவிடுகின்றன.
சரி எதைப் பங்குபோடுகிறார்கள்? பணத்தைத்தான். அதனால்தான் இவ்வளவு பதற்றமும் என நினைக்கிறேன். பணவிசயமென்பதால், இம்மோசடி அம்பலப்பட்டு அரசுக்கு களங்கம் வரக்கூடாது என நினைக்கிறார்கள் என்பது என் அனுமானம். அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில லட்சங்களை நிகழ்வுக்காக ஒதுக்குகின்றது. லியோனி பாடநூல் கழகத் தலைவராக இருப்பதாலோ என்னவோ அவர் தன் பட்டிமன்ற நண்பர்களைப் பேச அழைக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாலோ என்னவோ எல்லா ஆண்டும் பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, மோகன சுந்தரம் போன்ற சிலரே எல்லா மாவட்டங்களிலும் நடக்கும் கூட்டங்களில் பாதிக்குப் பாதியாவது பேசிவிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு கூட்டத்துக்கு 60,000-1,00,000 வரை சன்மானம் வாங்குகிறார்கள். கூடுதலாக தங்குவதற்கான விடுதிச் செலவு, விமானப் போக்குவரத்துச் செலவு. இப்போது அப்பட்டியலில் செல்வாக்குள்ள சில இலக்கிய எழுத்தாளர்களும் சேர்ந்திருக்கிறார்களே ஒழிய கழுதைப்புலி வேட்டைச் சடங்கு அப்படியே தொடர்கிறது. கூட்டம் சேர்ப்பதற்காக இவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல என்று அங்கு செல்லும் பலரும் சொல்கிறார்கள். இது அரசின் அறிவிக்கப்படாத 'வருடந்திர நிதியுதவியாக' இவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதே உண்மை. நீங்கள் இந்த சன்மானத் தொகையை ஒழித்து பேருந்து செலவுக்கு மட்டுமே பணம் தருவோம் என்று சொல்லிப் பாருங்கள், இந்த நட்சத்திர பேச்சாளர்கள் துண்டைக்காணோம் துணியைக் காணோம் எனப் போய்விடுவார்கள். அவர்கள் இடத்தில் தகுதியான சிந்தனையாளர்களும், ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் வந்து பணமின்றியே பேசுவார்கள் (பணம் கொடுக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் பணமென்று வந்ததுமே அங்கு ஊழலும் சீரழிவும் தலைவிரித்தாடுகிறது என்கிறேன்.).
பண விசயத்தில் இன்னொரு அவலம் ‘பொருளுக்கேற்ற விலை’ - ஒவ்வொரு படைப்பாளியையும் அதிகாரி ஒரு பொருளாகப் பார்க்கிறார் என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒரு சன்மானம். கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ஒரே அரங்கில் கலந்துகொண்ட லஷ்மி மணிவண்ணனுக்கும் இன்னொரு இளம் படைப்பாளிக்கும் 3000, 5000 என்று இருவித் தொகைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது பட்டிமன்றம் எனும் பெயரில் குரங்கு வேடம் போடுகிறவர்களுக்கு ஒரு லட்சம். ஒரு கவிஞருக்கு ஐயாயிரம், இன்னொரு கவிஞருக்கு மூவாயிரம். இதில் நிர்வாகிகளுக்கு எந்த திட்டவட்டமான அலகும் இல்லை - கேட்பவருக்கு கேட்பவரைப் பொறுத்து ஒரு தொகையைக் கொடுக்கிறார்கள். தோற்றத்தையும் பின்னணியையும் வைத்துகூட தொகையைத் தீர்மானிப்பார்களோ என்னவோ. இந்த பாரபட்சத்தால் மணிவண்ணன் கடுப்பாகி பேஸ்புக்கில் இந்த அதிகாரிகளைக் கண்டித்திட அவரை அதற்கு மேல் எங்கும் அழைப்பதில்லை. அதாவது யார் யார் அரசை விமர்சிக்கிறார்கள் என்பதற்கு ஒரு பிளேக் லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். அவர்களை பிளேக் லிஸ்ட் செய்துவிட்டால் எந்த அரசு சம்மந்தப்பட்ட குழுக்களிலும் சேர்க்க மாட்டார்கள், விருதுக்குப் பரிசீலிக்க மாட்டார்கள், நிகழ்ச்சியில் பேச அழைக்க மாட்டார்கள். அதனால் இன்று எழுத்தாளர்களிடையே திமுக அரசு குறித்த பயமொன்று நிலவுகிறது என்பது நிதர்சனம். யாரும் அரசை விமர்சிக்க அஞ்சுகிறார்கள். இதற்கு திமுக தலைமைக் காரணமல்ல, அதற்குக் கீழுள்ள குழுவினர், அதிகாரிகளின் எதேச்சதிகார மனநிலைதான் காரணம். ஜனநாயகத்தில் ஒரு குட்டி நாஜிக் கட்சியாக எழுத்தாளர்களும் அதிகாரிகளுமான ஒரு மாபியாவை அமைத்து ஆளும் அரசுக்குள் ஒரு நுட்பமான மறைமுகமான கண்காணிப்பு மாற்று அரசொன்றை உருவாக்கி இப்படியான கலாச்சார அச்சத்தை விதைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அச்சப்படாமல் அதிகாரத்திடம் நெருங்கும் ஆசையிலும் சில எழுத்தாளர்கள் வெளிப்படையாகவே அரசை ஆதரிப்பது அல்லது அரசு குறித்து பேசாமல் மௌனிப்பது என மாறிவிட்டார்கள். இதுவொரு வினோதமான சூழல்.
புத்தகத் திருவிழாவை ஒருங்கிணைப்பவர்களோ அதற்கான முறைமைமை உருவாக்கியவர்களோ நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைசிறந்த ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சான்றோர்கள் யாரென ஒரு பட்டியலை எடுத்து அதை பொதுவெளியில் அறிவிக்கலாம். அது குறித்த விவாதத்தைக் கோரி முடிவு செய்யலாம். எந்த அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம் எனச் சொல்லலாம். இப்போது இம்மாதிரி வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே பிரச்சினை (சர்வதே புத்தகத் திருவிழாவிலும் இதுவே பெருங்குறை. எந்தெந்த நூல்களுக்கு ஏன் எப்படி மானியம் அறிவிக்கிறார்கள் என்பது மர்மமானது.). அப்படியே பட்டியலை உருவாக்கினாலும் பல்வேறு செல்வாக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் குறும்பட்டியலாக அது மாறுகிறது. நியாயமாக, இவர்கள் மாநிலம் முழுக்க உள்ள சான்றோர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்களின் நெடும்பட்டியல் ஒன்றை உருவாக்கி ஆயிரக்கணக்காக நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஓரிரு நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வைக்கலாம். ஆனால் அப்போது பணம் பரவலாகி ஒரு சிலரால் கொள்ளையடிக்க முடியாமல் போகும் என்பதால் செய்யாமல் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு நல்வாய்ப்பு கிடைத்ததும் அதை எப்படி அதிகாரிகளும் அதிகாரக் குழுவின் தலைவர்களுமாகப் பங்குபோடுவது என யோசிப்பதாலே அவர்கள் வெளிப்படையான நடைமுறையை, முறைமையை உருவாக்கி எங்கும் அறிவிக்கவில்லை.
அடுத்து, இந்தப் புத்தகத் திருவிழாவின் இரு ‘பயனாளர்களுக்கு’ வருவோம்: பதிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள். குமரி மாவட்டத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் 50 லட்சத்துக்கு புத்தகம் விற்றது எனச் சொல்கிறார்கள். இதன் உண்மைப் பின்னணி என்ன? எனக்குத் தெரிந்த சில கல்வி நிறுவனத்தார் சொன்ன தகவல் இது: மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள அதிகாரிகள் ஒவ்வொரு கல்வி நிறுவனமாக அழைத்து புத்தகத் திருவிழாவில் இருந்து 5 லட்சங்களுக்குக் குறையாமல் அவர்கள் புத்தகங்களைக் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களும் மாவட்ட நிர்வாகத்தின் கெடுபிடிக்கு அஞ்சி அதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். இப்படி வலியுறுத்தி ஒட்டுமொத்த நூல் விற்பனைத் தொகையை 50 / 60 லட்சங்களுக்காவது கொண்டு வந்துவிடுகிறார்கள். இவ்விசயத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் போட்டி போடுகிறது எனக் கேள்விப்பட்டேன். அதாவது மக்கள் வரவேண்டும், புத்தகம் வாங்க வேண்டும் என்பது அவசியமே இல்லை, ஆனால் லாபத்தை மட்டும் காட்டிவிடுவார்கள். வெளியில் இருந்து பார்த்தால் நாளிதழில் வரும் செய்தியைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். கடை போட்ட சிறுபதிப்பாளர்கள் பலர் தமக்கு விற்பனையே இல்லையெனப் புலம்புவார்கள். ஆனால் கோடிக்கணக்கில் லாபம் என அதிகாரிகள் சொல்வார்கள். இப்படி முழுக்க மாய விளையாட்டாக நடத்தப்படுகிறது. மக்களிடம் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது என்றால் பர்வீன் சுல்தானாவும், விஜய்டிவி பேச்சாளர்களையும் லட்சக்கணக்கில் செலவழித்துப் பேச வைப்பது. மக்களைப் புத்தகங்களை வாங்க வைப்பதென்றால் நிர்வாகங்களை மிரட்டி வாங்கச் செல்வது. இப்படித் தோற்றத்தைக் கட்டமைப்பதே பிரதான நோக்கம்.
அடுத்து, மாணவர்கள். மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சியை அளிப்பதே புத்தகத் திருவிழாவின் முக்கிய நோக்கம் என்று மனுஷ்ய புத்திரன் சொல்கிறார். ஒரு கல்வியாளராக எனக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியென்றால் என்னவென்று தெரியும். நான் தனியாரில் அத்துறையில் வேலை செய்தவன். அதன் நோக்கம் இளைஞர்களை வேலைச் சந்தைக்குத் தயாரிப்பது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பயிற்சியை அளிப்பது. திறன்மேம்பாட்டுப் பயிற்சியில் திட்டவட்டமான இலக்கும் (tangible objectives), நடைமுறையில் பார்க்கக் கூடிய பயன்களும் (tangible outcomes) இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் என்னவிதமான திறனை மேம்படுத்தினார்கள்? இவர்களுடைய திறன்மேம்பாட்டுப் பயிற்சியினால் எத்தனை மாணவர்கள் நல்லவேலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்? தரவுண்டா? இல்லை. கேமரா முன்னாலும் நிகழ்ச்சியிலும் பேசுவதை எடுத்துக் கொள்வோம். அவர்களில் எத்தனை பேர்கள் மீடிய பிரபலங்களாக மாறி சம்பாதிக்கிறார்கள்? மொழி சார்ந்த, உடல்மொழி சார்ந்த, சமூக நுண்ணறிவு சார்ந்த பயிற்சியளிப்பதற்கு பயிற்சி பெற்ற நிபுணர்களையோ ஆசிரியர்களையோ பயன்படுத்துகிறார்களா? இந்தப் நிதியை வைத்துக்கொண்டு எழுத்துப் பயிற்சி, மொழியாக்கப் பயிற்சி, செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சியளிக்கும் திறன் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி, விவாதப் பயிற்சி, நேர்முகத்தைச் சந்திக்கும், ஒப்பந்தங்களைத் தயாரிக்கும், புரோஜெக்டுகளுக்கு நிதிவேண்டி விண்ணப்பிக்கும் பயிற்சி, அறிவியல் எழுத்துப் பயிற்சி, தொழில்முனைவோருக்கு தம் திட்டத்தை pitch செய்யும் பயிற்சி என எவ்வளவோ செய்யலாமே. இவர்களுடைய திறன்மேம்பாட்டுப் பயிற்சிக்கு ஒரு பாடத்திட்டம், course plan, இதற்கான பட்டப்படிப்பை முடித்த பயிற்சியாளர்களின் பட்டியல், பயிற்சியின் திட்டவட்டமான பலன்கள் என ஒன்றுமே இல்லையே. இதை எப்படி திறன்மேம்பாட்டுப் பயிற்சி என்று அழைக்க முடியும்? புத்தகத் திருவிழாவில் மோகனசுந்தரமும், பர்வீன் சுல்தானாவும் தான் திறன்மேம்பாட்டுப் பயிற்சியாளர்களா? எனக்குப் புரியவில்லை. ஆன்லைனில் நான் நாவல் எழுதக் கற்பிக்கும் வகுப்புக்கே பாடத்திட்டம், course plan, திட்டவட்டமான பலன்களை வகுத்து வைத்திருக்கிறேன்.
கடைசியாக, சில குழப்பங்களையும் மனுஷ்ய புத்திரன் தெளிவுபடுத்த வேண்டும்: புத்தகத் திருவிழாவில் நவீன எழுத்தாளர்கள் முக்கியமல்லர், அவர்களுக்காக இவ்விழாக்கள் நடத்தப்படவில்லை என்று மனுஷ்ய புத்திரன் சொல்கிறார். இந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக அவரை மனதாரப் பாராட்டுகிறேன். சரி நவீன எழுத்தாளர்கள் வேண்டாம், வெகுஜன எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்துங்கள். உண்மையில் ஒருவரி கூட எழுதாத வரிப்புலிகள் அல்லவா எங்கெங்கும் மேடையில் தலா ஒரு லட்சம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள். கூடுதலாக அவர் இவ்விழாக்கள் புத்தகங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக நடத்தப்படுபவை என்கிறார். உலகில் எழுத்தாளர்களை முழுக்க ஒதுக்கிவிட்டு புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முதல் முயற்சி இதுவே. யோசித்துப் பாருங்கள். நீங்கள் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை, தல்ஸ்தாயின் எழுத்தை அவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா? நான் மனுஷ்ய புத்திரனுக்கு சிறு இடம்கூட கொடுக்காமல் அவரைத் தெருவில் நிறுத்திவிட்டு மேடையில் நின்று அவரது கவிதையைச் சொன்னால், அம்மனுஷ்ய புத்திரனை மக்கள் யாருமே கண்டதில்லை என்றால் மெல்லமெல்ல அப்பெயர் மறைந்துவிட்டு சொற்கள் மட்டுமே எஞ்சுமே. ஒரு கட்டத்தில் வாசகர் மனத்தில் அக்கவிதைகளைத் தொகுத்துக்கொள்ள ஒரு முகமோ வாழ்க்கையோ தத்துவமோ இல்லாமல் போகும். இது அடிப்படையான உளவியல் - எழுத்தாளரை மையப்படுத்தாமல் புத்தகங்களைப் புரொமோட் செய்ய முடியாது. நீங்கள் இதுவரை உயிர்மை நடத்திய எந்த கூட்டத்தையும் எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்குக்குப் போனாலே நான் சொல்வது புரியும். எழுத்தாளர்கள் இன்றி புத்தகங்கள் இல்லை, அவை மக்களிடம் போய்ச் சேரவே முடியாது. சென்னைப் புத்தக விழாவில் முதன்முதலாக எழுத்தாளர்களின் படங்களை விளம்பரப் பலகையாக வைத்ததே உயிர்மைதான். உயிர்மை இதழிலும் எழுத்தாளர்களின் முகத்துடனே கதைகளும் கட்டுரைகளும் வருகின்றன. இதுவே வெகுஜன நூல்களுக்கும் பொருந்தும்/ உலகமே ஏற்றுக்கொள்ளும் ஒரு உளவியல் உண்மையை, தானும் பின்பற்றும் ஒரு உண்மையை மனுஷ்ய புத்திரன் மறுப்பதைப் பார்க்க வினோதமாக இருந்தது. அப்புறமாக யோசித்ததில் எனக்கு அவர் சொன்னதன் மறைபொருள் விளங்கியது - கட்சிக்கும் அதிகாரிகளுக்கும் நெருக்கமாக இல்லாத, தமிழ்நாட்டு interest groupகளில் இல்லாத எழுத்தாளர்கள் இந்த புத்தகத் திருவிழாவுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சொல்கிறார்.
யோசித்துப் பார்த்தால் புத்தகத் திருவிழா எழுத்தாளர்களுக்கானவை அல்ல என்றால், புத்தகத் திருவிழா புத்தகங்களுக்கும் ஆனவை அல்ல என்றாகிறது. எனில் அது ஏன் புத்தகத் திருவிழா என்று அழைக்கப்பட வேண்டும்? பதிப்பாளர்கள், மாணவர்களுக்கும் நேரடியான பயனில்லையெனும்போது அதை நாம் எப்படி அழைக்க வேண்டும்? ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மொழியையும், இலக்கியத்தையும் முகாந்திரமாக வைத்து திமுக அரசுக்கான பிரச்சார விழாவாக, PR நிகழ்வாக அதிகாரிகள் இதைப் புரிந்துகொள்கிறார்கள். மனுஷ்ய புத்திரனும் இதை மறைமுகமாகத் தெளிவுபடுத்திவிட்டார்.
ஆனால் இதைச் சொல்ல அவர் பயன்படுத்திய மொழி குரூரமானது, பாசிசத்தன்மை கொண்டது. மனுஷ்ய புத்திரன் என் பிரியத்துக்குரியவர், நான் வாழ்க்கையில் மிக அதிகமாக நேசிக்கும் எழுத்தாளர்களில், மனிதர்களில் ஒருவர்தான் என்றாலும் இதை நானிங்கு சொல்லியே ஆக வேண்டும்: அவர் தன் வாழ்க்கையில் எழுதிய கட்டுரைகளில் நெருப்பிலிட்டு கொளுத்த வேண்டிய கட்டுரை இது.