நான் என் இலக்கிய நண்பர் ஒருவருடன் மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பொருத்தப்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தனக்கு பரிணாமவியல் கோட்பாட்டுடன் உடன்பாடு உண்டெனினும் தன்னை ஒரு விலங்காக அடையாளப்படுத்துவது தன்னைப் பொறுத்தமட்டில் உவப்பற்றது என்றார். அதைக் கேட்ட போது எனக்கு மிகவும் வியப்பேற்பட்டது. ஏனென்றால் எனக்கு அப்படி கோபம் வருவதே இல்லை. மாறாக நான் அவ்வாறு அழைக்கப்பட்டால் ஒவ்வொரு முறையும் மிகவும் மகிழ்ச்சியடைவேன். என் குழந்தைப் பருவம் முதலே நான் என்னை ஒரு விலங்காகவே கருதி வந்திருக்கிறேன். என்னை யாராவது “நாயே, பன்னி, எரும” எனத் திட்டினால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகும். இன்னும் சொல்லப் போனால் நான் என் நாயுடன் எடுத்த தற்படத்தைப் பார்க்கையில் “இரண்டு நாய்கள்” என்றே நினைப்பேன்.
விலங்குகள் மீதான உயர்வான அபிப்ராயத்தாலும் அபிமானத்தாலோ நான் இப்படி உணரவில்லை. விலங்கு நிலை அப்படி எந்த பெருமைக்குரிய இயல்போ சங்கதியோ இல்லை. விலங்கு நிலை எனில் அது எல்லா நிலைகளையும் போல மற்றொரு நிலையே என நினைக்கிறேன். நான் சிறுவயது முதலே என்னிடம் உள்ள விலங்கு நிலையையே உணர்ந்து வந்திருக்கிறேன், மனித நிலையை அல்ல. சொல்லப்போனால் யாராவது “கேளடா மானிடா” என்று என்னை அழைத்தால் நான் பதறி விடுவேன். ஏனென்றால் மனித நிலை என ஒன்று உண்டா எனும் கேள்வி எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. பொதுவாக மனித நிலைக்கான எந்த பௌதீகமான, தத்துவார்த்தமான ஆதாரங்களையும் நான் இதுவரை வாழ்வனுபவத்திலோ வாசிப்பிலோ கண்டறிந்ததில்லை. மனித நிலை ஒரு மேற்பூச்சு, ஒரு பொய் எனும் இடத்திற்கே நான் வந்தடைந்திருக்கிறேன். என்ன வினோதம் எனில் நான் மட்டுமே இப்படிக் கோரிக்கொள்கிறேன். இங்கு மனிதர்களின் மானுட நேயத்தை, மனித சாராம்சத்தை கொண்டாடும் போக்கையே நான் பிரசித்தமான பல தமிழ் படைப்பாளிகளிடம் காண்கிறேன். கருணை, அன்பு, நேசம் போன்ற சொற்களை இவர்கள் தவறாமல் தம் பேட்டிகளிலும், உரைகளிலும் பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பேசுகிறவர்களிடம் மிகை கற்பனாவாதம், மனிதநேயத்தை ஒரு கொள்கையாக காணும் பாங்கு, மிகையான தற்புகழ்ச்சியை அதிகமாக காண முடிகிறது. இவை இரண்டும் முற்போக்கு மற்றும் ஐரோப்பிய கற்பனாவாத மரபுகளின் வினோதமான கலவை என்று பார்க்கிறேன். ஒருவர் சமூக சீர்திருத்தத்தில், சமத்துவத்தில் ஆர்வம் இன்றி ‘சகமனிதன் மீது கொள்ளும்’ அன்பைப் பற்றி மட்டுமே சதா பேசுபவர் என்றால் இன்னொருவரோ சிவில் சமூக இடையீடுகள் செய்வதில் நம்பிக்கையற்றவராக இருந்துகொண்டே மானுட குலம் மீதான அன்பை மட்டும் முன்னிறுத்துவார். என்னால் ‘சக மனிதர்களிடம்’ அல்ல எனக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே அன்பு பாராட்ட முடிகிறது (ஏற்கனவே சொல்லிவிட்டேனே நான் ஒரு விலங்கு என்று.)
எனக்கு இந்த ‘சக மனிதன்’ என்றாலே அவர் யாரெனத் தெரியாது. மானுட சமூகம் என ஒன்று இருக்கிறதா என்றால் இல்லையென்பேன். மனித திரள்கள் உள்ளன, பல்வேறு அடையாளங்களும், இயல்புகளும் கொண்டவர்கள் நிபந்தனைக்குட்பட்டு வாழ்கிறார்கள் என்பேன். இவர்களை ஒரு பட்டிக்குள் அடைக்கவே முடியாது. இவர்களுடைய தேவைகளும் பல்வேறுபட்டவை. இவர்களில் யாருமே தம்மை மனித குலத்தின் பகுதியாக காண்பதில்லை. ஒரு பேரிடர் நடக்கும் போது பாருங்கள், முதலில் தத்தமது பாதுகாப்பே முக்கியம் என மனிதர்கள் ஓடுவார்கள். அதன் பிறகே மானுட நேயர்களும் செயல்பாட்டாளர்களும் உதவி செய்வதற்கு வருவார்கள். நான் அவர்களை இந்த பலதரப்பட்ட குழுக்களில் ஒன்றாகவே பார்க்கிறேன், இவர்கள் மானுடத்தின் பிரதிநிதிகள் அல்லர்.
நான் சாலையில் வாகனத்தில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பக்கமாக குப்பை அள்ளுகிறவர்களையோ கட்டுமானப்பணியில் ஈடுபடுகிறவர்களையோ பார்த்தால் ஓடிப் போய் (எம்.ஜி.ஆர் பாணியில்) கட்டிக் கொள்வதில்லை. உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுவதில்லை. என்னுடன் டிராப்பிக்கில் நிற்கிற மனிதர்களும் அப்படி செய்வதில்லை. நான் போய் கட்டிப்பிடித்தால் அப்பணியாளர்களும் அதை விரும்ப மாட்டார்கள். நான் பல எழுத்தாளர்களுடன் பழகியிருக்கிறேன், பயணித்திருக்கிறேன், யாருமே இப்படிப் பண்ணி நான் பார்த்ததில்லை, ஆனால் அவர்களுடைய பேச்சையும் எழுத்தையும் பார்த்தாலும் அதை எந்நேரமும் செய்யக் கூடியவர்கள் என்றே தோன்றும். எனக்கு சகமனிதர்களிடம் கோபம் மட்டுமல்ல கொலைவெறியே கூட வரும். இது தொடர்ந்து மாறக் கூடியதாகவும் இருக்கும் - இன்று வெறுக்கிறவர்களை நாளை நேசிப்பேன், சிலரை ஏன் வெறுத்தேன் என்பதை சில நிமிடங்களில் மறந்தும் விடுவேன். எனக்கு பிச்சைக்காரர்களையோ நோயுற்றவர்களையோ பார்த்தால் இரக்கம் வராது. அருவருப்பே வரும். என் மீது யாராவது இரக்கம் காட்டினாலும் எனக்குப் பிடிக்காது. எனக்கு இரக்கம், கருணை போன்ற கருதுகோள்கள் மீது கடும் வெறுப்பே உள்ளது. சரி நான் தான் ஏதோ வினோதமாக இருக்கிறேன் என்று நினைத்து விசாரித்தால் என்னை சுற்றியுள்ள ‘சகமனிதர்களும்’ அப்படித்தான் இருக்கிறார்கள்.
நாங்கள் சுயநலவாதிகள். நாங்கள் எங்களுடைய இன்பத்துக்காகவும், தன் திறல் நிறைவெய்தலுக்காகவும் வாழ்கிறோம். நாங்கள் சமூக மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும் போதும் அது எங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்று கோருகிறோம். எங்களைத் தொடாத ஒன்றை நோக்கி நாங்கள் கைதூக்கி வழிபட மாட்டோம். நாங்கள் தேசத்தின் வளர்ச்சிக்காகவும், பெருமைக்காகவும், எதிர்கால மதிப்பிற்காகவும் வாக்களிக்க மாட்டோம், நாங்கள் இப்போது எங்களுக்கு வேலை கொடுத்தால், கேஸ் விலையைக் குறைத்தால், வரியைக் குறைத்தால் மட்டுமே வாக்களிப்போம். எங்களுக்கு எந்த குற்றவுணர்வும் அவசியமற்ற கூச்சங்களும் இல்லை. தமிழ் எழுத்தாளர்களில் இந்த மானுட நேய சிந்தனையை ஏற்காதவர்கள் இருக்கிறார்கள் எனினும் எதிர்-மானுடத்தை / பின்-மானுடத்தை பிரகடனம் பண்ணி அதைப் பற்றியே எழுதுகிறவர் சாரு நிவேதிதா மட்டுமே தான். அதனாலே அவர் தன்னை நாய், பூனைகளுடன் இணைவைத்துப் பார்க்கிறார், அவற்றின் சாப்பாட்டுக்கு செலவழிக்க வாசகர்களிடம் பணம் கேட்கிறார். அவர் இலக்கிய உலகில் மிகவும் தனிமைப்பட்டு உணர்வது தமிழ் இலக்கிய உலகை மானுட நேயம் எனும் வியாதி ஆக்கிரமித்திருப்பதாலே என நினைக்கிறேன்.
இதையெல்லாம் பார்க்கும் போது மனிதன் எனும் விலங்கு, மானுடன் எனும் அ-விலங்கு என இரண்டு இனங்கள் இப்புவியில் உள்ளதாக தெரிய வருகிறது. இந்த மானுடன் ஒரு லட்சிய உருவம். ஏலியன், பறக்கும் தட்டு, தேவதைகள் என்று சொல்கிறார்களே அப்படியான ஒரு நிகழ் தொன்மம். நானோ என்னுடன் வாழும் மனிதர்களோ இந்த மானுடனைப் பார்த்ததில்லை. ஆனால் அனேகமாக அனைவருக்குள்ளும் மானுடனாக தம்மை அடையாளப்படுத்தும், மனித நிலையில் இருந்து அ-மனித நிலைக்கு கடந்து செல்லும் ஒரு விருப்பமுள்ளது. இந்த விருப்பத்தையே கலாச்சாரம், நாகரிகம், கலை, காதல், பக்தி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். அதாவது அ-மனித நிலையை அடைவதல்ல லட்சியம், அதை அடைவது மிக ஆபத்தானது. அதை விட அதை அடைய முயலும் போது தன் அடையாளத்தை துறந்து திரிசங்கு சொர்க்கத்தை அடைவதையே விரும்புகிறோம். என் நண்பர் என்னிடம் “இந்த அன்றாட வாழ்க்கை ஒரு சாக்கடை, இந்த முடை நாற்றத்தில் ஒருவரால் எப்படி வாழ முடியும், இதைக் கடந்து செல்ல நான் என் அன்பை, கற்பனையை பயன்படுத்துவேன்” என்றார். எனக்கு எப்போதுமே அப்படித் தோன்றியதில்லை. அன்றாட உலகம் அதன் போதாமைகளுடன் மிக அழகானது என்றே நினைக்கிறேன். நான் வறுமையில் தவித்தாலும், கடும் ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டாலும் எனக்கே எனக்கென இருப்பது என் காலமும், வெளியும் தான். அதில் நான் சின்ன சின்ன வினைகளை ஆற்றும் போது - அது சமைத்து உண்பதோ ஒரு இடத்தை நோக்கி நகர்வதோ பேசுவதோ ஒரு மேஜையை சில அங்குலங்கள் நகர்த்துவதோ - மிகுந்த சந்தோஷம் கொடுக்கிறது. ஹைடெக்கர் செருப்பு தைக்கும் தொழிலாளியைப் பற்றி இதையே தான் சொன்னார். இந்த உலகில் என்னால் எதையும் கடந்து செல்லவே முடியாது, மேலும் அப்படி முடிந்தாலும் இவ்வளவு அழகான உலகை நான் ஏன் கடந்து செல்ல வேண்டும்? அதுவும் போய் சேர சாத்தியமே இல்லாத ஒரு காலத்தையும் வெளியையும் பற்றி நான் ஏன் கற்பனை செய்ய வேண்டும்? என் சாக்கடையை நான் சுத்தம் செய்வேன், மாற்ற முடியாவிட்டால், போராடியும் பயனில்லாவிட்டால் நகர்ந்து செல்வேன்.
இந்த இரண்டு பார்வைகளில் எது சரி? எது உண்மையானது? நான் இந்த குழப்பத்தை போக்குவதற்காக இந்த இரு நிலைகளையும் என்னளவில் வரையறுக்கப் போகிறேன்.
“மானுடவாதம் என்பது தத்துவ நோக்கில் மானுட முதன்மை, மானுட மையம், மானுடனின் பொறுப்பு ஆகிய மூன்றையும் முன்வைப்பது. இப்புவிமேல் உயிர்களில் மானுடனே முதன்மையானவன் என்னும் நம்பிக்கையும், இங்குள்ள அனைத்தும் மானுடனுக்கே என்ற எண்ணமும், இங்குள்ள அனைத்துக்கும் மானுடன் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையும் அதன் ஆதாரங்கள்.” என்கிறார் ஜெயமோகன். மானுடவாதம் தமிழில் மனித நேயம், மதிதாபிமானம் ஆகிய சொற்களாலும் அறியப்படுகின்றன.
மானுடவாதம் புத்தொளி காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனை. “அறப்பொறுப்பு [Moral responsibility], தன்விருப்பு [Free will], மெய்யறிவு [Reason]” ஆகியவற்றை இதன் கொள்கைகள் என்று ஜெயமோகன் வரையறுக்கிறார். பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த பெட்ரார்க், பொக்காஷியோ, லியனார்டோ புரூனி, எராஸ்மஸ், லோரன்ஸோ வல்லா, மிரெண்டெல்லோ ஆகியோரின் எழுத்துக்களும் சிந்தனைகளும் மானுடவாதத்திற்கான அடித்தளத்தை அமைத்தன. கற்பனாவாத யுகத்தில் மானுடவாதம் எழுத்தாளர்களிடமும் தத்துவவாதிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியது. புத்தொளி காலத்தில் மத நம்பிக்கைகளில் இருந்து அறிவுசார் பண்பாட்டு உற்பத்திகளுக்கு நகர்வதற்கு இது உதவியதென்றால் கற்பனாவாத காலத்தில் மன்னராட்சியை மறுப்பதற்கும், கடவுளற்ற ஒரு பக்தி சிந்தனையை வளர்ப்பதற்கும் உதவியது. இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய தாக்கத்தால் இந்தியாவில் தோன்றிய மானுடவாதமும் கற்பனாவாதமும் (ஜெயமோகன் இதை ‘இயற்கைவாதம்’ என அழைக்கிறார்) இங்குள்ள மத இயக்கங்களுடன் கலந்து மறுமலர்ச்சி இயக்கம் தோன்றவும் (முன்னது), துறவுப் பண்பாட்டுடன் இணைந்து பண்பாட்டு புலத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் செய்தது. “மதம் ஏதானாலும் மனிதன் சீர்ப்பட்டால் நன்று” என்று நாராயணகுரு கூறியதும், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் இரங்கியதும் மானுடவாதத்தின் நீட்சியே என்று ஜெயமோகன் கருதுகிறார். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி இந்த நோக்கில் உள்ள அகந்தை, ஆதிக்கவுணர்வு, தன்மோகத்தை நாம் பரிசீலிக்கவில்லை. மனிதம் என்றாலே உன்னதம் எனும் உணர்வு இங்கு பெரும் போலிப்பிரச்சாரத்தால் நிறுவப்பட்டது. எழுத்தாளரோ சிந்தனையாளரோ தான் ஒரு மனிதநேயர் அல்ல என்று கூறாமல் இருக்கவே முடியாது. மனிதநேயம் ஒரு மதமாகிவிட்டது. அதனால் அனைத்து மக்களுக்கும் நன்மையே விளையும் என கேள்வியின்றி நம்பும் நிலைக்கு வந்திருக்கிறோம். (சாருவையும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் மட்டுமே விதிவிலக்கு.)
நவீன யுகத்திலும் ரிச்சர்ட் டாக்கின்ஸ், கிறிஸ்டபர் ஹிட்சின்ஸ் போன்ற கடவுள் மறுப்பாளர்கள், அறிவியல் பரப்புரையில் ஈடுபடும் உளவியலாளர் ஸ்டீவன் பிங்கர், சமூகநீதி, அறவியல், மனித உரிமை குறித்து எழுதும் மார்த்தா நாஸ்பம், எதிர்-டார்வினிய சிந்தனையாளர் டானியல் டேனட் ஆகியோர் இந்த மரபைத் தொடர்கிறார்கள். பகுத்தறிவு, தர்க்க சிந்தனை, மனித மாண்பை, தன்னாட்சியையும் சுதந்திரத்தையும் கோருவது, இயல்புவாத அறவியலை விவாதிப்பது, மதசார்பின்மை, மனித குலத்தின் மட்டற்ற ஆற்றலையும் வளர்ச்சித் திறனையும் பேசுவது மானுடவாதத்தின் இயல்புகள். இந்த போக்குகளால் நமக்கு விளைகிற எண்ணற்ற ஆபத்துகளை இன்று நாம் உலகளவில் உணர ஆரம்பித்திருக்கிறோம் என்றாலும் இந்தியாவில் வெள்ளைக் காலனியாதிகளின் தாக்கத்தால் மானுடவாதத்தின் பகுத்தறிவு, தர்க்கம், அறம், அறசிந்தனை ஆங்கில கல்வியின் முகங்களாக பார்க்கப்பட்டு, அவற்றின் மீது ஒரு பக்தியுடன் கலந்த அச்சமும், விலகலும், பாமரத்தனத்தை பகுத்தறிவுக்குப் பதிலுக்கு கொண்டாடும், பகுத்தறிவிடம் இருந்து தப்பித்து ஓடும் மனநிலையும் நிலவுகிறது என்பதால் இன்னும் அந்த உரையாடல் காத்திரமாக ஆரம்பிக்கவில்லை. மானுடவாதத்தை எதிர்ப்பவர்களை திமிர் பிடித்த அறிவுஜீவிகள் என்றும், வலியுறுத்துபவர்களை கவைக்குதவாத லட்சியவாதிகள் என்று கருதி, பாவம் போகட்டும் நாமளும் மனிதநேயர் தாம் என சொல்லிவிடலாம் என நினைப்பதே இங்கு பரவலாக உள்ள எண்ணம்.
ஜெயமோகன் மானுடவாதத்தை இந்து சீர்திருத்த இயக்கத்துடன் தொடர்புறுத்துவது சரிதான். இங்கு இன்றும் மனித மாண்புக்காகவோ, பகுத்தறிவுக்காகவோ கடவுளை மறுப்பவர்கள் ‘மானுடம்’ எனும் மற்றொரு கடவுளை உருவாக்கிக் கொள்கிறார்கள். கடவுளைப் போன்றே மானுடத்தையும் அரூபமான கருத்துருவாக வைத்துக் கொள்கிறார்கள். மனிதர்களைக் காணும் போது கசப்பு கொள்ளும் இவர்கள் மானுடர்களை நினைக்கும் போது பரவசமாகிறார்கள். கூட இருப்பவர்களை விட ‘சக மனிதர்களையே’ நேசிக்கிறார்கள். சுதந்திரத்தையும் அவர்கள் மனித நேயத்தின் பெயரில் நம்மிடம் இருந்து பறித்து விடுகிறார்கள். சுதந்திரத்தின் பெயரில் நம்மைக் கடுமையாக கண்காணிப்பவர்களாகவும், ஒழுக்கத்தை போதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இயற்கையாகவே மனிதன் அறத்தின் பால் ஒழுகுகிறவன் என்று பேசியபடியே அதைக் கடவுளாக்குகிறார்கள்./// உடனடியான உலகில் உள்ள அறச்சிக்கல்களை புறக்கணிக்கிறார்கள் (ஜெயமோகனின் “அறம்” தொகுப்பு ஒரு உதாரணம்.). மதசார்பின்மையை முன்னெடுத்து விட்டு கோயிலில் போய் உருள்கிறார்கள், அப்படி உருள்வதே அமத்துவத்தை உண்டு பண்ணுகிறது எனப் பார்க்க தவறுகிறார்கள், மானுட வளர்ச்சியின் பெயரில் விலைவாசியையோ வேலையின்மையையோ பற்றி பேச மறுக்கிறார்கள். மனிதன் தன் ஆற்றலுக்கு முழுமையான வெளிப்பாட்டை அடைய அன்றாட அரசியலை விவாதிப்பதும், போராடுவதும் தடையாக மாறும் என்கிறார்கள். முக்கியமாக தம் கண்முன்னே அன்றாட உலகில் நிகழும் எந்த அநீதிக்கும், ஒடுக்குமுறைக்கும் கண்ணை மூடிக்கொண்டு மானுடத்திற்காக போராடுவது அதை விட மேலானது என நினைக்கிறார்கள். உலகின் மாபெரும் அழிவு செயல்பாடுகள் மேற்சொன்ன மானுடவாத சிந்தனைகளின் பெயரில் நிகழ்ந்தவையே. ஒரு காலத்தில் மதத்துக்காகவும் கடவுளுக்காகவும் செய்த அநீதிகளை, கொடூரங்களை இப்போது மானுடத்தின் பெயரில் செய்கிறார்கள். இவற்றைப் பற்றி பேசவோ எதிர்க்கவோ முடியாதபடிக்கு மானுடவாதம் இடைஞ்சலை செய்கிறது - அது இப்போது எதிர்வினையாற்றாதே, நமக்கு ஒரு நெடுங்கால செயல்திட்டம் உள்ளது என அது ஆறுதல்படுத்துகிறது. ஒரு விலங்கு ஒருபோதும் மானுடனைப் போல இவ்வளவு தன்-முரணுடன் இருக்காது.
இனி இதன் வரலாற்றுச் சித்திரத்தை பார்ப்போம்.
தத்துவார்த்தமாக பிரஞ்சு தத்துவம், இலக்கியம் எனக்கு இணக்கமானது. ஜெர்மானிய இலக்கியத்தில் நான் மிகவும் விரும்புகிற ஹைடெக்கர், நீட்சேவும் இந்த கண்ணோடத்திற்கு நெருக்கமாக வருபவர்கள் (விலங்குகளின் இருத்தல் குறைபட்டது எனும் ஹைடெக்கரின் மனிதனின் ‘மேம்பட்ட இருத்தல்’ உள்ளதான பிரக்ஞையியல் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்றாலும்.). நீட்சேயின் முக்கியமான நூல் “Human All Too Human”. மனிதனாக இருப்பதற்கே மானுடம் குறித்த அறபோதனைகள் எப்படி தடையாக இருக்கிறது என்று அவர் இந்நூலில் பேசுகிறார். நீட்சேவும் ஹைடெக்கரும் அவர்களைப் பின்தொடர்பவர்களும் கூறுவது படி பார்த்தால் மனிதம் எனும் பிழையான பார்வை சாக்ரடீஸிடம் இருந்து ஆரம்பித்து கி.பி பத்தாம் நூற்றாண்டிலேயே பிறகு அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகியோர் அரேபிய மொழிக்கு சென்று பிரசித்தமான பிறகு அங்கிருந்து சாக்ரடிய தத்துவம் மொழியாக்கம் பெற்று கிறித்துவத்துக்கு வந்து உலகம் முழுக்க பரவியிருக்க வேண்டும். இந்தியாவில் இந்த தத்துவத்தின் சாரத்தை காலனியவாதிகளும், கிறித்துவ இறையியலாளர்களும் கிறித்துவமாகவும், இடதுசாரிகள் ஹெகலியம் வழியாகவும், காந்தியும் காந்தியவாதிகள் (ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல்) இந்து சீர்திருத்தவாதிகளும் கிறித்துவ மத இயக்க பாணியில் இந்து மதத்தை உருவாக்கும் நோக்கிலும் பிரபலமாக்கினார்கள். இவர்கள் நால்வருக்கும் அடிப்படை கிறித்துவ இறையியல், அதற்கு அடிப்படை சாக்ரடீஸின் சாராம்சவாத தத்துவம். சாராம்சவாதத்தை சாக்ரடீஸ் ஒரு கருத்துருவாக கண்டால், கிறித்துவம் அதை கடவுளாக்கினால் (தூய ஆத்துமா), மனிதநேயர்களோ அதை மனிதம் என்று பெயரிட்டு மதசார்பின்மையின் வழியாக அதை கடவுளற்ற (ஆனால் சாராம்சமான) தெய்வமாக்கினார்கள். இந்த நான்கு தரப்பினருமே மனிதன் தானாக, தன்னிச்சையாக இருப்பது ஒரு குற்றம், அவனது உடல்சார்ந்த எண்ணவெழுச்சிகள், தன்னியல்புகள் தவறானவை, ஒழுங்கீனமானவை, ஆன்மாவுக்கும், சமூகத்துக்கும், தேச வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பன எனும் எண்ணம் கொண்டவர்கள். அதனாலே இந்நால்வருமே தூய்மைவாதிகளாக, ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். தமிழில் இடதுசாரிகள் பின்நவீன சிந்தனை வழியாக இந்த இடைவெளியை கடக்க முயன்றிருக்கிறார்கள் என்றாலும் ‘மனிதம்’ என்றதுமே அவர்கள் மீண்டும் ‘மனிதனுக்குள் உள்ள ஒரு தெய்வத்தை’ நோக்கிப் பாய்கிறார்கள் - உடல் என்பதில் இருந்து பிரம்மம் என்பதைப் போல மனிதன் என்பதில் இருந்து மானுடம். அடுத்து மனிதனை தன்னைக் கடந்த ஒரு ஆற்றலிடம் மண்டியிடவும், தன்னைக் குறித்த ஒரு முடிவற்ற குற்றவுணர்வில் ஆழவும் வைக்கிறார்கள். தமிழில் இடதுசாரிகளுடன் உடன்பட முடியாதவர்கள் (மென்வலதுசாரிகள்) 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கற்பனாவாதிகளின் (எமர்ஸன், தோரோ, வெர்ட்ஸ்வொர்த்) பாணியில் மனிதனைக் கடந்து இயற்கையை சென்று சேர்வதைப் பற்றி போதிக்கத் தொடங்கினார்கள். நகரங்களில் குவியும் மனிதர்களைப் பார்க்க பிடிக்காமலே வொர்ட்ஸ்வொர்த் தான் அதிக மனித புழக்கமில்லாத இயற்கை செழிப்பான இடங்களுக்கு சென்று வாழ்ந்ததாக சொல்கிறார்.
ஏதோ ஒரு விதத்தில் தனிமனிதனின் போதாமையை உணர்த்துவது, போகத்தை கண்டிப்பது, கேளிக்கையை நெறிப்படுத்துவது இவர்களுடைய ஒருமித்த பாங்கு. சொல்லப் போனால் எது மானுடம் என்பதை விட எது மானுடம் அல்ல என்பதை நிறுவுவதிலேயே அவர்களுடைய அக்கறை அதிகம் இருக்கும். சந்தேகம் இருந்தால் எது மானுடம் என உங்கள் அருகில் உள்ள மானுடநேயரிடம் கேளுங்கள் - எவையெல்லாம் மானுடம் அல்ல என்பதை சொல்லாமல் அவர்களால் விளக்க முடியாது. இந்த மறுப்புவாத தர்க்கம் மனிதனின் அடிப்படையான விலங்கு நிலை மீதான தாக்குதலே. நான் இவர்களை கருத்து போலிசார் என அழைக்கிறேன். ஒருவர் ராணுவத்தையும் வணிகத்தையும், இன்னொருவர் சமூக வளர்ச்சியையும் தேசத்தையும், மற்றொருவர் தெய்வத்தையும், ஒருவர் இயற்கையையும், கடைசியாக ஒருவர் ஒழுக்கத்தையும் லத்தியாக எடுத்து வந்து முட்டிக்கு கீழ் தட்டுகிறார்கள். இன்று பாஜகவில் 60% மேல் எம்.பி.க்கள் வாரிசுகள் என்றும், வாரிசு அரசியல் அனேகமாக எல்லா கட்சிகளிலும் புற்றுநோயைப் போல பரவியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மானுடவாதியோ “இவ்வாறு அரசியல் செய்து கட்சியை நடத்தி சமூகநீதியையும் வளர்ச்சியையும் கொண்டு வந்தே நம்மால் …” என்று அதை நியாயப்படுத்தும் நோக்கில் நீண்ட விளக்கம் அளிக்கிறார். ஊழல் என்பது மக்களின் பணத்தை திருடும் குற்றம் என்று விமர்சித்தால் இல்லை, ஊழலின் வழியாக மட்டுமே எளிய மக்களால் சமூகத்தில் மேல்நிலையை அடைய முடிகிறது, ஊழல் ஒரு ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என்று பல லட்சம் கோடிகளாலான ஊழலை நைசாக நியாயப்படுத்தி தப்பிக்க வைக்கிறார் மற்றொருவர். இவர்கள் இதை மானுட வளர்ச்சி, சமத்துவத்தின் பெயரிலேயே நியாயப்படுத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். முன்பு மதகுருமார்கள் கடவுளின் பெயரில் தமது எதிர்ப்பாளர்களை பயமுறுத்தினால் இன்று மானுடவாத குருமார்கள் அதையே வேறு சொற்களை வைத்து செய்கிறார்கள். அச்சொற்களை சொன்னதுமே நாம் வாயை மூடிக் கொள்வோம்.
ஏன் இச்சொற்கள் நம்மை அச்சுறுத்துகின்றன என்றால் மானுடவாத லட்சிய கருத்துருவங்களை நடைமுறை உலகில் காண முடியாது. அவை தெய்வத்தைப் போல நிகழவே முடியாத காலத்தில் நின்று நாக்கைத் துருத்திக் காட்டி நம்மை அச்சுறுத்துகின்றன. மனிதர்கள் இயல்பாகவே தன்னால் காண முடியாத ஒன்றைக் கண்டு திகைத்து அஞ்சி ஒளிந்துகொள்வார்கள்.
மேலும் மானுடவாதம் தன்னளவில் ஒரு படிநிலையை உருவாக்குகிறது. ஒரு மனிதரால் ‘மானுடன்’ ஆக முடியாது. அவர் அதற்காக முயற்சி செய்ய வேண்டும், தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், அவர் இயல்பிலேயே களங்கமானவர். தனக்குப் பசித்தால் அவர் உண்ணக் கூடாது, இந்த உலகில் இப்போது யாருக்குமே பசிக்கவில்லை என்று உறுதி செய்த பின்னரே அவர் சாப்பிட வேண்டும். இதை நீங்கள் பயின்று பாருங்கள் - நீங்கள் ஒரு தின்பண்டத்தை உண்ணும் போது அதை ஒருவர் ஆசையாகப் பார்த்தால் உங்களுக்கு எப்படியான அசௌகர்யம் ஏற்படுகிறது என்று. அதைப் போலத் தான் நமக்குப் பசிக்கும் போதும் இன்னொருவரிடம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டாலும் சும்மா கொடுத்து விடக் கூடாது. சாதாரணமாக உதவினால் நாம் நமது மானுட நிலையில் இருந்து கீழிறங்கி விடுவோம். மானுடவாதத்தின் படி நாம் உணவற்றவருக்காக வருந்தி அவருக்கு உணவளிப்பதை ஒரு உயரிய சேவையாக நினைத்து உதவ வேண்டும். உணவளித்து அவர் வழியாக நாம் நம்மையே கடைத்தேற்ற வேண்டும். ‘சும்மா எனக்கும் கொடு, பசிக்குது’ என்று அவர் கேட்கவும் முடியாது. ‘இருக்குது, எடுத்து சாப்டுங்க’ என நாம் சொல்லவும் முடியாது. மானுடவாதிகள் இதை ஒரு சடங்காக மாற்றிவிட்டார்கள். அவர் பட்டினி கிடக்கும் ஏழையின் கீழான நிலைக்கு (கற்பனையில்) சென்று தன் கருணையால் மனிதர் எனும் நிலையில் இருந்து மேலெழுந்து மானுடராகிட வேண்டும். கால் இல்லாதவர், கண் இல்லாதவர், குடியுரிமை இல்லாதவர் எல்லாருக்கும் இதே நிலைதான். அவர்களையும் மானுட நிலையை (நவீன காலக் கடவுளை) நோக்கி நடப்பதற்கான ஊன்றுகோலாக மாற்றிவிட்டார்கள். இந்த சடங்கு ஒரு சமூகப் பழக்கமாகி அது நமது சமூக உளவியலாகி விட்டது. இது மனிதர்கள் மத்தியில் பெரும் பிளவையும் ஏற்றத்தாழ்வையும் உண்டு பண்ணுவதை நாம் உணர்வதில்லை. அந்தளவுக்கு அது நம் உளவியலின் பகுதியாகிவிட்டது.
தான்-மற்றமை (மானுடன் - விலங்கு) எனும் இருமையின் மீது தான் மானுடவாதம் அமர்ந்திருக்கிறது. ஒரு குழந்தை கண்ணாடியின் முன் நின்று தன்னைக் கண்டு தனது தன்னிலை தனது பிரதிபலிப்பில் இருந்து மாறுபட்டது எனக் கருதும் போதே அதன் தன்ணுணர்வு தீவிரமாவதாக லகான் கூறுகிறார். நாம் ஒரு குழந்தையிடம் நீ பண்படவில்லை என்று உணர்த்தி அதற்கு கல்வியும் சமூக நியதிகளையும் அதிகார முறைமைகளையும் போதிக்கத் தொடங்குகிறோமே அப்போது அது மானுடவாதியாகி ‘என்னைத் தவிர பிறர் பண்படாதவர்கள், அவர்கள் என் கருணையில் வாழ்கிறவர்கள், நான் அவர்களை மதிப்பிட்டு வரையறுக்கிறவர், நான் நான் நான், நான் மட்டுமே உலகம், பிறரை நான் கடைத்தேற்றி மானுடராக்குகிறேன்’ என இறுமாப்பு கொள்கிறது. இந்த படிநிலைதான் அடுத்து சமூகப் படிநிலையாக மாறுகிறது. முன்பு இந்த படிநிலையின் உச்சத்தில் கடவுள் அமர்ந்திருந்தார். இன்று அங்கு இறையாண்மையும் மானுடவாதமும் இருக்கின்றன. இடதுசாரிகள், சமூகப் போராளிகள் இந்த பனிப்பாறையின் நுனி மட்டுமே. அவர்களுக்கு கீழே ஒட்டுமொத்த ஜனத்தொகையும் தம்மைக் கடவுளாக மாற்றுவதற்கு பிறரை மற்றமையாக்கிக் கொண்டிருக்கிறது. அதை அவர்கள் சற்றும் உணர்வதில்லை, அவர்களே மற்றமையாகும் ஒரு தருணம் வரும் வரையில்.
அடுத்து இந்த மானுடவாத சீரழிவுக்கான மாற்று என்ன என்று பார்ப்போம். நம்மால் ஒரு சாதாரண உயிராக, அன்றாட உலகில் உள்ள மனிதராக சிறப்பான, சமத்துவமான, சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியுமா எனக் கேட்போம். அதுவே நாம் இங்கு தீவிரமாக விவாதிக்க வேண்டிய கேள்வி.
தெரிதா தனது “விலங்காகிய நான்” (The Animal That I am) நூலில் மனிதராக இருப்பது ஒன்றைப் பின்தொடர்வது, அந்த ஒன்று தனது சுயமாக இருக்கும் போது ஒரு மனிதர் தன்னையே பின்தொடர்கிறார், இது ‘நான் இருக்கிறேன்’, ‘நான் பின்தொடர்கிறேன்’, ‘நான் என்னையே தொடர்கிறேன்’ என மூன்று நிலைகளிலான இருப்பாகிறது என்கிறார். இது ஒரு சுவாரஸ்யமான கருத்தென்றாலும் முதல் பார்வையில் புரிந்துகொள்ள சிக்கலான ஒரு கருத்துமே. நான் ‘இருக்கிறேன்’ என்பதையும் நான் ‘ஒன்றைப் பின்தொடர்கிறேன்’ என்பதையும் அடுத்தடுத்து வைத்துப் பார்த்து எதை, ஏன் எனும் கேள்விகளைக் கேட்டால் நமக்கு இக்கருத்து இன்னும் தெளிவாகும். எதை என்றால் நான் இன்னும் அடையாத ஒரு இலக்கை என்று ஒருவர் சொல்லக் கூடும். ஏன் என்றால் அதற்கு நம்மால் உடனடியாக விடை கிடைக்குமா? சமூக எதிர்பார்ப்பு, நடைமுறைத் தேவைகளுக்கு அப்பால் கூட பல்வேறு இருத்தலியல் தேவைகளுக்காக நாம் தொடர்ந்து எதன் பின்னோ சென்று கொண்டே இருக்கிறோம். அந்த ஒன்றை நாம் அதை அடைய முயலும் போது அது மேலும் விலகிப் போகிறது. நாம் எதுவாக மாற விரும்புகிறோமோ அது என் முன்னே வந்து நிற்கிறது. இல்லாவிடில் அதைப் பின்தொடர முடியாது. நாம் அன்புள்ளவர்களாகிறோம் எனில் அன்புநிலை நம் முன்னே தோன்றுகிறது. அது நமது அன்புநிலை. நாம் இங்கிருக்கும் போது அதெப்படி அங்கிருக்க முடியும் எனும் கேள்வியை நாம் எழுப்புவதில்லை. நாம் ஏற்கனவே இருக்கும் நிலையில் இருந்து மற்றொன்றை நோக்கி ஏகும் நிலையை தெரிதா “எல்லைகளைக் கடப்பது” என்று அழைக்கிறார். அதாவது கடந்து விடுவதல்ல, கடந்துகொண்டே இருப்பது. எதையும் கடந்து செல்ல முனையும் முன் இருப்பதே நமது ‘விலங்கு நிலை’. விலங்காக இருப்பது பண்பற்று அறிவற்று இருப்பதல்ல, தானாக, தன்னுடன் மட்டும் இருப்பதே, விலங்காக இருப்பது எதையும் கடக்க உத்தேசிக்காமல் இருப்பதே என்கிறார் தெரிதா. மேலும் “நீண்ட காலமாகவே அந்த விலங்கு நம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் சொல்லலாமா? எந்த விலங்கு. மற்றமை தான்.” என்கிறார்.
இந்திய நியாயவாத தத்துவத்தில் இதை நிகழாத ஆனால் நிகழ சாத்தியமுள்ள தூய வடிவிலான ஒன்று எனக் கருதுகிறார்கள். பறக்கும் குதிரை நிஜத்தில் இல்லை, ஆனால் சிறகுகளும் குதிரையும் உலகில் உள்ளன, அதனால் நடப்புலகில் கண்கூடாகப் பார்க்கும் போது இல்லாத அக்குதிரையானது கருத்து நிலையில் உள்ளது. ஆனால் மகாயான சூனியவாத மரபு இதை தீர்மானமாக மறுக்கிறது. இந்த பறக்கும் குதிரையை பிரம்மம் என எடுத்துக் கொண்டால் நாம் ஒரு ஆன்மீக சாத்தியப்பாட்டை நோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கிறோம், நாம் அடிப்படையில் எதுவாக உள்ளோமோ அதில் இருந்து தப்பித்து ஒரு நிகழாத காலவெளிக்குள் நம்மை நாமே செலுத்துகிறோம். இதுவே இன்றைய நிலையில் பக்தி / லட்சியவாதம் / மானுடர் எனும் கனவு. அன்று சூனியவாத மரபு இந்தியக் கருத்துமுதல்வாதத்தில் கண்ட அதே பிரச்சினையைத் தான் பின்னர் தெரிதா வேறொரு மொழியில் மானுடவாத தத்துவ மரபில் கண்டு அதையெதிர்த்து கேள்வி எழுப்புகிறார்.
சமகாலத்தில் மானுடவாதத்தை எதிர்த்து வலுவாகத் தோன்றியுள்ளது பின்னை-மானுடவாதம். இது அடிப்படையாக மானுட சாராம்சவாதத்தை எதிர்க்கிறது. “நான் இந்த பூமியில் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று ஒருவர் கூறும் போதே அவர் தன்னை உலகின் மையமாக மட்டும் வைக்கவில்லை, தன்னுடைய பிரக்ஞையானது தன்னால் சூயாதீனமாக உருவாக்கப்படுவது அல்லது தானாகவே அது நிபந்தனையற்று தோன்றியது என கருதுகிறார். பிரம்மன் என்று வைதீகத்தில் சொல்லப்பட்டதே மானுடவாதத்தில் மானுடம், மானுடர் ஆகிறது (மாற்றமற்றது, எப்போதும் இருப்பது, எங்கும் முற்றுமுழுதாக இருப்பது). நமது சூழல், அதிலுள்ள பொருட்கள், எந்திரங்கள், கருவிகள், தொழில்நுட்பம், நாம் இருக்கும் வெளி, நம்முடன் உறவாடும் உயிருள்ள உயிறற்ற தோற்றப்பாடுகள், எந்திரங்கள் ஆகியவற்றால் நமது பிரக்ஞையும், தன்னிலையும் எப்படி உருவாகின்றன என பின்னை-மானுடவாதம் விவரிக்கிறது. முக்கியமாக மனிதரின் தன்னிலையானது சாராம்சமானதோ நிலையானதோ அல்ல, அதனாலே மனிதர்களுக்கு என்று தனி முக்கியத்துவம் இல்லை, அவர்களை மையமாக்கி எதையும் சிந்தித்து தீர்வு காணத் தேவையில்லை என்பதே பின்னை-மானுடவாதத்தின் நிலைப்பாடு. மனிதருக்கும் மனிதரல்லாத வேறு உயிர்களுக்கும் உயிரில்லாத பொருட்களுக்குமான உறவு நீர்மையானது, ஒட்டாக்கமானது என அது கூறுகிறது. பின்னை-மானுடவாதத்தின் தனிச்சிறப்பாக நான் கருதுவது இதைத்தான்: அது மனிதரை இருகூறாகப் பிரித்து தன்னையே கடந்து சென்று தானல்லாத ஒன்றாக ஆக வேண்டுவதில்லை, மாறாக அது அவரை உலகில் பல்வேறு இருப்புகளுடன் ஊடுபாவி கணந்தோறும் ஒவ்வொரு இருப்பாக மாறும் நீர்மையான தன்னிலையாக பார்க்கிறது. இன்றைய பின்னை-மானுடவாதிகளான டோனா ஹேரெவேய், கேத்தரின் ஹெய்ல்ஸ் போன்றோர் டெலூஸ், ஹைடெக்கரின் எந்திரம், தொழில்நுட்பம் குறித்த பார்வையை மற்றொரு தளத்திற்கு எடுத்து சென்று நமது மனமும் தன்னிலையும் எப்படி செயற்கை நுண்ணறிவாலும், எந்திரர்களாலும் கிட்டத்தட்ட ஒரு கணினியைப் போல எப்படி மாறுகிறது என்பதை, எந்திரங்களுக்கு ஏற்ப நமது பிரக்ஞை எப்படி பௌதீக வடிவெடுக்கிறது என்பதை விவாதிக்கிறார்கள். இதைக் கொண்டு நாம் மனிதர்கள் தமக்குத் தாமே உருவாக்கி அடைத்துக்கொண்ட சிறையில் இருந்து தப்பித்து எந்த எல்லைகளுக்கும் உட்படாமல் வாழ்வது, கட்டற்றவர்களாக பெருகிக் கொண்டிருப்பது, அதிகாரப் படிநிலைகளை உடைத்து வெளியேறுவது, மனிதர்கள் சாதாரண மனிதர்களாக மட்டுமே வாழ்வது, எல்லா உயிர்களையும் உயிரற்ற வஸ்துக்களையும் போல ஒரு வலைப்பின்னலின் பகுதியாக அசைவுறும் மற்றொரு இருப்பாக தம்மைக் காண்பது எப்படி எனக் கண்டறிய முடியும். மனிதர்கள் தம்மை கடந்து சென்று மகத்தான மானுடமாகும் வெற்று முயற்சியில் காலத்தை வீணடிக்காமல் தாம் அசலாக எப்படி இருக்கறோம் என அறிந்து பிரபஞ்சத்தில் காற்றைப் போல பரந்து விரிய முடியும். கடந்து செல்வது ஒரு தப்பித்தல்வாதம். அதை விட விரிந்து செல்வது அசலானது. முன்னது வைதீகம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய பெருமதங்களின் அடிப்படையான இலக்கு. பின்னது பௌத்தத்தின் (யோகாச்சார) தோற்றப்பாட்டியல் மரபினுள் வருவது.
இதை நாகார்ஜுனரின் மகாயான தத்துவத்தின் படியும் புரிந்துகொள்ள முடியும் - மனிதன் எனும் இருப்பு பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோற்றம் கொள்கிறது, ஒரு நுண்பேசியின் திரையும் அவ்வாறே பல நிபந்தனைகளுக்கு (மின்சாரம், வன்பொருள், மென்பொருள், தரவுகள், இணையத் தொடர்பு, மனிதப் பிரக்ஞை, பயனரின் அசைவுகள்) உட்பட்டு தோன்றுகிறது, அதன் பயனரான மனிதரின் தன்னிலையும் அவரது உடல்நிலை, ஆற்றல், விசை, சூழல், காலம் என வேறு பல நிபந்தனைகளால் தோன்றுவதே. இரு சூன்யமான தன்னிலைகள் தோன்றி தொடர்புறுத்தி, பரஸ்பரம் மாற்றங்களை கைக்கொண்டு மாறிக்கொண்டே இருக்கின்றன. இதே விதமாகவே ஒரு மனிதர் ஒரு செருப்பை மாட்டிக் கொண்டு நடப்பதை, அந்தரங்க வெளியில் அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு தன் இணையுடன் உறவு கொள்வதை பார்க்க முடியுமா? ஒரு மனிதர் மற்றொரு மனிதரை ஒரு எந்திரத்தின் தன்னிலையைப் போலத் தான் நடத்துகிறார் எனக் கருத முடியுமா என்பதே சமகால சிந்தனையில் முக்கியம் இடம்பிடிக்கும் கேள்வி எனும் போது பௌத்தத்திற்கு (தோற்றப்பாட்டியலுக்கு) இன்று ஏற்பட்டுள்ள செல்வாக்கை புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இதைக் கொண்டு இன்றைய பல அறச்சிக்கல்களுக்கு நம்மால் தீர்வு காண முயல முடியும்.
நான் ஒரு விலங்காக இருப்பதை விட என்னை நான் பார்க்கும் ஸ்மார்ட் டிவியின், பயன்படுத்தும் நுண்பேசியின், ஓட்டும் வாகனத்தின், நுழையும் மின்தூக்கியின் நடவடிக்கைகளால் உருமாறும் ஒருவர் என நோக்கும் போதே ‘மானுட ஆற்றலை’ நான் முதன்முறையாக அறிகிறேன். முதன்முறையாக நான் ஒரு கடவுளாகி விட்டதாக உணர்கிறேன். எல்லா சின்னச்சின்ன பொருட்களாலும், மென்பொருள் நிரல்களாலும், கருவிகளாலும் உருமாறிக்கொண்டிருக்கும், எங்கும் நிறைந்ததாகவும், எல்லாமாகவும், ஆனால் எங்கும் எதுவாகவும் நிச்சயமாக இல்லாத ஒரு சாதாரண கடவுளே நான். ஒரு பௌதீகமான கடவுள்.
நான் என் இலக்கிய நண்பரிடம் கூறிக் கொள்கிறேன், “ஒரு மனிதராக நான் எனக்கு அளிக்கப்பட்ட தளைகளை வெறும் கற்பிதங்கள் எனக் கருதுகிறேன். அவை மனித நாகரிகமும், கல்வியும், மானுடவாதமும் எனக்கு இட்டுவிட்ட தளைகள். அவற்றில் இருந்து விடுபட்டு ஒளிர நான் உத்தேசிக்கவில்லை. நான் இருளில் இருந்தால் அல்லவா மின்னுவதற்கு? என்னை எப்படி விலங்கு என்று அழைத்தால் கோபப்பட மாட்டேனோ, அதே போல என்னை நீங்கள் ஒரு மனித எந்திரம் எனக் கருதினாலும் கொந்தளிக்க மாட்டேன். இதைவிட ஒரு சிறந்த ஈடேற்றம் எனக்கு இருக்க முடியாது. விலங்கானது மானுடவாத நிலையை விட இயல்பானது, அதை விட மகத்தானது எந்திரங்களில் ஒன்றாக, ஒவ்வொரு கட்டிடத்திற்கும், நாற்காலி, வாகனம், விலங்கு, பூச்சி, நுண்ணுயிருக்கும் ஏற்ப நான் ஒரு புது உயிரியாக என்னை உணர்ந்துகொண்டே இருப்பது. நான் நான் என தியானம் செய்வதை விட, குற்றவுணர்விலும், தன்வெறுப்பிலும், மேலாதிக்கத்தாலும் துவண்டு போய் தானற்றுப் போவதற்காக தவிக்காமல் இருப்பது மகத்தானது, என்னைத் தனிப்பெரும் ஆற்றலாக கருதாததால் எனக்காக சகமனிதர்களை, சக உயிர்களை, உலகை, உலகின் ஒவ்வொரு அணுவையும் அழிக்காமல் இருப்பது அற்புதமானது. நீயெல்லாம் ஒரு மனிசனா என்று கேட்டால் எனக்கு எந்த கோபமும் இல்லை. சத்தியமாக நான் மனிதனே இல்லை என்று கூலாக சொல்வேன்.”
உசாத்துணை:
ஜெயமோகன். “தல்ஸ்தோய் மானுட நேயரா?” கட்டுரை, தமிழ், மதிப்புரை. தமிழினி. நவம்பர் 18, 2020.
Brett, Annabel. Liberty, Right, and Nature: Individual Rights in Later Scholastic Thought. Cambridge University Press, 2003.
Braidotti, Rosi. The Posthuman. Polity Press, 2013.
Copenhaver, Brian P. Renaissance Philosophy. Oxford University Press, 1992.
Derrida, Jacques. The Animal That Therefore I Am. Edited by Marie-Louise Mallet, translated by David Wills, Fordham University Press, 2008.
Ferrando, Francesca. Philosophical Posthumanism. Bloomsbury Academic, 2019.
Hayles, N. Katherine. How We Became Posthuman: Virtual Bodies in Cybernetics, Literature, and Informatics. University of Chicago Press, 1999.
Herbrechter, Stefan. Posthumanism: A Critical Analysis. Bloomsbury Academic, 2013.
Kalupahana, David. J. Mulamadhyamakakarika of Nagarjuna: The Philosophy of the Middle Way. 1999, Delhi: MOTILAL BANARSIDASS PUBLISHERS PRIVATE LIMITED. Print.
Pangle, Lorraine Smith, and Thomas L. Pangle. The Learning of Liberty: The Educational Ideas of the American Founders. University Press of Kansas, 1993.
Wolfe, Cary. What Is Posthumanism? University of Minnesota Press, 2010.
நன்றி: உயிரெழுத்து ஆகஸ்ட், 2024
