புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள்.
முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதராகவே இருக்க முடியும். புத்தரும் அப்படியே மரித்திருக்க முடியும். அதனாலே புத்தரின் கால் பாதம் வழிபடப்படுகிறது - நம்மைப் போல சாதாரணமாக மட்டுமே இருக்க முடிந்தவர், அதனாலே அவர் மரணமும் உற்றார். பௌத்தம் அதன் வெவ்வேறு வடிவங்களில், பள்ளிகளில் வளர்ந்தபோது, வெகுமக்கள் மதமாகியபோது புத்தருக்கு ஆன்மா உண்டு எனும் கருத்தை சிலர் எட்டினர். ஏனெனில் ஆன்மா இல்லாதபோது, முக்தி நிலையற்றதாகும்போது மத நிறுவனங்களைக் கட்டமைக்க அது உதவாது. மெல்லமெல்ல பௌத்தம் வைதீகத்துக்கு அருகில் வந்தது அல்லது பௌத்தத்தை தழுவி உருவான வைதீகத்துடன் அது கைகோர்த்தது அப்படியே. இன்றும் வைதீக, கிறித்துவ மதங்களைச் சார்ந்தோர் ஆன்மா சார்ந்த நிரந்தர முக்தியின் பாலான சாராம்சவாத பௌத்தத்தையே விரும்புகிறார்கள்.
ஆனால் அசலான பௌத்தம் எதையும் நிரந்தரமாக, நிபந்தனைக்கு அப்பாலானதாக, முழுமையாக உருமாற்றுவதாக, நீடிப்பதாக ஏற்காது. அப்படி ஏற்காமையே விடுதலை என அது சொல்லும். புத்தரே நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் மனநிலைதான். நிபந்தனைக்குட்பட்டதெனத் தோன்றும் நிபந்தனையினால் ஆன நிலை.
பௌத்தம் கோரும் ஒழுக்கமும் அறமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதே - ஒழுங்கீனம் சூனியமானது எனும்போது கிடைக்கும் தெளிவு அந்த சூனியத்தை மேலும் பற்றிக்கொள்ளாதிருக்கும் பொருட்டு சுயக்கட்டுப்பாட்டை விதிக்கக் கோருகிறது. கெட்டுப் போன உணவெனத் தெரிந்தபின் சாப்பிடாமல் தவிர்ப்பதைப் போல. இது மிகமிகச் சிக்கலானது. நம் மனத்திலும் உடலிலும் காலமே செயல்படுகிறது - காலம் என்பது காரண காரிய விசையின் உருவகம். அதனாலே நாம் எதாவது ஒன்றை நோக்கி சதா ஈர்க்கப்படுகிறோம் - நம் கண்கள், நாசி, புலன்கள், நம் உடல், சிந்தனை, உணர்வுகள் காலத்துள் இருப்பதாலே அசைவுற்றபடி உள்ளன. நீங்கள் காலத்தை சூனியமாக்கினால் அசைவு அர்த்தமிழக்கும். அப்போது நாம் விளையாட்டாக ஜாலியாக அசைய வேண்டியிருக்கும், சும்மா ஒரு இலை அசைவதைப் போல. இது மொழியின் அமைப்புக்கு ஏற்றது அல்ல, இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. காலம் என்பது 'ஒழுங்கீனத்தின்' இன்னொரு வடிவமெனில் காலத்துள் இருக்கும் நாம் 'ஒழுங்கீனத்தால்' அமைந்தவர்கள் ஆகிறோம். இவ்வளவு சிக்கலான ஒன்றை புலனடக்கம் என சுருக்கிக் கொள்ள முடியாது - கால-அடக்கமே புலனடக்கம். எனில் நாம் எங்கு சென்று அதை நாட முடியும்? நம் பாலுறுப்பு காலத்தினுள் அமைந்திருப்பதால் நம்மால் பாலுறுப்பை எப்படிக் கட்டுப்படுத்த இயலும்?
இக்கேள்விகளுக்கு அவரவருக்கான பதில்களை அவரவரே கண்டடைய முடியும்.