நல்ல தீர்ப்பு! படித்து வேலையில் இருக்கும் அல்லது உயர்படிப்பு முடித்த பெண்களுக்கு பராமரிப்புத் தொகையை மாதாமாதம் கொடுப்பது அவசியமில்லை. பட்டப்படிப்பை முடிக்காதவர்களுக்கு கொடுக்கலாம், அது நியாயம். அதுவும் கணவர் நன்கு படித்து அதிகம் சம்பாதிக்கையில் மட்டுமே. கல்யாணத்துக்காக ஒரு பெண் தன் தொழில் வாழ்வை, அனுபவத்தை அத்தனைக் காலம் தியாகம் பண்ணியதால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனும் வாதம் தவறானது - அவருக்கு மாதம் 50,000-100000 சம்பாதிக்கும் வாய்ப்பிருந்து அதைக் கணவருக்காக விட்டொழித்தார் எனில் அது அவரது தவறே. கல்யாண வாழ்க்கை ஒரு சமரசம் - வேலையை சில தேவைகளுக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பது அவர் முடிவுதான். அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். கல்யணத்தின்போது கணவர் வற்புறுத்தினால் அந்த கணமே அவரை விவாகரத்து பண்ணலாமே. அல்லது கல்யாணத்திற்கு முன்பே பேசி முடிவு செய்யலாமே. இம்மாதிரி தனிப்பட்ட முடிவுகளுக்காக வாழ்நாள் முழுக்க பராமரிப்புச் செலவைக் கோருவது நியாயமற்றது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்க்கரீதியாக, கல்வித் தகுதி சார்ந்து இதைப் பார்ப்பது ஒரு நல்ல மாற்றம்.
தகுதியில்லாதவர்களுக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுப்பதிலுள்ள வேறு இரு சிக்கல்களையும் குறிப்பிட வேண்டும்:
பணம் கொடுப்பதை வாழ்நாளில் எப்போதும் தவறவிட்டாலும் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் ஆண்கள் இதைத் தவிர்க்க வேறுவழியின்றி பெரும் செட்டில்மெண்டைத் தர முன்வருவார்கள். இதற்காகவே சிலர் இப்போது இடைக்கால பரமாரிப்புத் தொகை கேட்டு விண்ணப்பித்து பெற்றும் விடுகிறார்கள். இது ஆண்களை மிரட்டி சமரசத்துக்குப் பணிய வைக்க உதவுகிறது. இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் அசமத்துவத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்தை அதன் நடைமுறைப் பயன்பாட்டில் பாரபட்சமாக்குகிறது.
அடுத்து, பராமரிப்புத் தொகையை ஒரு பெண் கோரும்போது அவரது சொத்துக்கணக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையை நீதிமன்றம் சோதிப்பதில்லை. அதை நிரூபிக்கும் பொறுப்பு ஆணுக்கு வந்துவிடுகிறது. அதேபோல, ஆன்லைனில் வேலை செய்யும் பெண் தான் வேலையில் இல்லையென்று கூறினால் அவரது கணவரால் அதை நிரூபிக்க முடியாது. வேலையில் இல்லாத பெண் பராமரிப்புத் தீர்ப்புக்குப் பின்பு வேலை பெற்று சம்பாதித்தாலும் அதை அவரிடம் இருந்து பிரியும் கணவரால் சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாது. விவாகரத்துக்குப் பின்பு அவரவர் வழியில் தனித்தனி உலகங்களில் வாழ்கிற, வெவ்வேறு நகரங்களில் இருக்கிற தம்பதியினருக்கு இது சிக்கல். சதா முன்னாள் மனைவியை கணவர் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் வேலைக்குப் போகிறாரா இல்லையா என்பதை ஆள் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும். அதை ஆதாரத்துடன் நீதிமன்றத்திடம் கொண்டு சேர்த்தாலே நீதிமன்றம் தீர்ப்பை ரத்துப் பண்ணும். பட்டறிவு இல்லாத, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இம்மாதிரி ஏமாற்ற வாய்ப்புகள் இருக்காது. மேற்தட்டினர் சுலபத்தில் செட்டில்மெண்ட் கொடுத்து முடித்துவிடுவார்கள். இது மேல்மத்திய, மத்திய வர்க்கப் பிரச்சினையாகும்.