From Kuppuswamy Ganesan
அண்டை மாவட்ட இலக்கியத் திருவிழாவில் பேசுவதற்கு என்னை இன்று அழைத்தார்கள். இதற்கு முன் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாவட்ட இலக்கியத் திருவிழாவில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள், அப்போதெல்லாம் மாவட்ட நிர்வாகம் பேச்சாளர்களை வெவ்வேறு படிநிலைகளில் வைத்து கௌரவப்படுத்துகிறார்கள் என்ற விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது.
என்னை அழைத்தவரிடம் (இதற்கு முன் எப்போதும் இல்லாத வழக்கமாக) நான் "எவ்வளவு மதிப்பூதியம் தருவீர்கள்?" என்று கேட்டேன். 2500 ரூபாய் தருவார்களாம்.
அழைக்கப்படும் பேச்சாளர்கள் எல்லோருக்கும் 2500தான் தருகிறீர்களா என்று கேட்டேன். அவர் பதில் அளிக்காமல் தயங்கினார். சக பேச்சாளர்கள் சிலருக்கு நம்ப முடியாத அளவுக்கு பெருந்தொகை அளிக்கப்படுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தலை வாழையிலை விருந்து அளித்துவிட்டு எழுத்தாளர்களை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து சில எலும்புத் துண்டுகளைகளை வீசுவதற்கு ஒப்பான செயல் இது என்றேன். அரசு நடத்தும் விழாக்களில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் சம அளவில் மரியாதை தருவதே நியாயம். அந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசினால் அரங்கம் நிறைகிறது, மொழிபெயர்ப்பாளர் பேசினால் இரண்டு வரிசை கூட நிரம்பாது என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. இந்தக் கூட்டங்களுக்கு யாரும் டிக்கெட் வாங்கி வரவில்லை, அவர்கள் பேசினால் நல்ல வசூலாகிறது, நீங்கள் பேசினால் யாரும் வரமாட்டார்கள் என்று சொல்வதற்கு.
தற்போதைய தமிழ்நாடு அரசு இதற்கு முன் எப்போதும் இல்லாத வழக்கமாக, நல்ல நோக்கத்தோடு இலக்கிய விழாக்களை பெரும் செலவில் நடத்தி வருகிறது. திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தனி நபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வதற்கு எனக்குத் தயக்கமே கிடையாது. உண்மையாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் வந்து நம் பேச்சைக் கேட்பார்கள். விழாவை நடத்துபவர்கள் தமது சக்திக்கேற்ப மதிப்பூதியம் தருவார்கள். அவர்களிடம் பேரம் பேசுவது அநாகரிகம்.
ஆனால் அரசு நடத்தும் விழாக்களில் discrimination இருப்பதை ஏற்றுக்கெள்ளவே முடியாது.
என்னை அழைத்தவரிடம் இப்படிச் சொன்னேன்: "ஆரணியில் இருந்து வந்து செல்ல கார் ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்கு மதிப்பூதியமாக 25000 ரூபாய் தரவேண்டும். சம்மதம் என்றால் திரும்ப அழையுங்கள்," என்றேன். இந்த 25000 என்ன கணக்கு என்றால், ஒரு மாவட்டத்துக்கு புத்தகத் திருவிழா நடத்த ஒதுக்கப்படும் தொகையில் சில நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை தருகிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒதுக்கப்பட்ட தொகையில் பேச்சாளர்கள் அனைவருக்கும் சம அளவில் மதிப்பூதியம் வழங்குவதாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் 25000 தரவேண்டியிருக்கும். போக்குவரத்து செலவுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. ஆனால் எழுத்தாளர்களுக்கு 2500. எழுத்தாளனை மாவட்ட நிர்வாகம் அழைத்தாலே பெரிய கௌரவம் என்று இளித்துக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நினைப்பு.
இப்படி நான் வெளிப்படையாக எனது சுயமரியாதை, சமஉரிமைக்காகப் பேசினால் இனி எந்த புத்தகத் திருவிழாவுக்கும் யாரும் என்னை அழைக்க மாட்டார்கள் என்றால் ரொம்ப சந்தோஷம். நான் இத்தகைய கூட்டங்களை எதிர்பார்த்து நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு இல்லை. (அடுத்த வருடம் எனது fees ஐ ஐம்பதாயிரம் என்று உயர்த்திவிடலாம் என்று நினைக்கிறேன்.) நான் மிகவும் திமிரோடு நடந்து கொள்கிறேன் என்று அவர்கள் சொல்வார்கள் என்றால், ஒரு திருத்தம். வெறும் 'மிகவும் திமிர்' அல்ல, மிக மிக மிக மிகத் திமிரானவன் என்று சொல்லச் சொல்வேன். குப்புசாமியைக் கூப்பிடவில்லை என்று புத்தகத் திருவிழாவுக்கு வரும் கூட்டத்தினர் யாரும் அழவில்லை என்று தெரியும். எலும்புத் துண்டுகளுக்காக ஓடி வருபவன் நானல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்தத் திமிர்ப் பேச்சு.
அரசு நடத்தும் விழாவில் அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கும் ஒரே விதமான மரியாதை வழங்கப்படுவதுதான் அறம். அதுதான் நான் எல்லா மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் சொல்ல விரும்புவது.
'எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை
எல்லாரும் ஓர்விலை'
- ஜி குப்புசாமியின் பேஸ்புக் பக்கத்திலிருந்து