//தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன்.
முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர். இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய உரை வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே, காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.//
- தினகரன் செய்திக் குறிப்பு
முதல்வர் ஸ்டாலினின் இந்த உரை மிகவும் ஏமாற்றமளித்தது. மோடி சொல்வதை இவர் ஏன் சொல்ல வேண்டும்? நியாயமாக ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டியது இந்தக் கொடூரச் செயலை முகாந்திரமாகக் கொண்டு வெறுப்பரசியலைப் பரப்பலாகாது, நன்மையின் செய்தியை அதிகமாகப் பரப்பி தீவிரவாதிகளின் நோக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதே. தீவிரவாதிகளை ஒழிப்பதோ மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் ராணுவத்தைக் கொண்டு தடுப்பதோ நம் நாட்டில் சாத்தியமல்ல. நமது ஜனநாயக அமைப்பு ஒற்றை இலக்குடன் இயங்குவது அல்ல. ஒவ்வொரு தினமும் இங்கு ஒவ்வொரு பிரச்சினை. அரசு ஒரு ஆளுங்கட்சியாகவே சிந்திக்கும், அரசாக அல்ல. ஆகையால் இதெல்லாம் கவைக்குதவாது. நம்மால் செய்ய இயன்றது அன்பினாலும், மனிதாபிமானத்தாலும் சமூகத்தை ஒருங்கிணைப்பதே. ஸ்டாலின் இந்த இடத்தில் ஏன் பாஜகவின் மொழியைக் கையில் எடுக்கிறார் என எனக்கு விளங்கவில்லை. அண்மையில் ஒரு அமைச்சர் ஏ ஜோக் அடித்தபோது அது மத செண்டிமெண்டுகளைக் காயப்படுத்தக்கூடும் என கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார். மக்களிடையே அப்பேச்சு அருவருப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இதைப் போன்ற ஓராயிரம் பேச்சுக்களைக் கேட்டும் கண்டுகொள்ளாமல் போவதே தமிழ் சமூகத்தின் போக்கு. இங்கு அப்படியான மதம்-மத-எதிர்ப்பு மனநிலை வலுவாக ஊன்றப்பட்டுள்ளது. ஆனால் பாஜக இதைக் கையில் எடுக்கக்கூடாது எனும் அச்சத்திலே திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் மாறிவருகிறது. எதிரிக்கு இடமளிக்கக்கூடாது எனும் பதற்றத்தில் திமுகவின் மொழியின் எதிரியின் மொழியாக மாறிவருகிறது.
மீண்டும் சொல்கிறேன்: இந்தத் தாக்குதல் செய்தியை திமுக காந்திய வழியில் எதிர்கொண்டிருக்க வேண்டும்.