The Talented Mr Ripley 1955இல் பேட்ரிஷியா ஹைஸ்மித்தால் எழுதப்பட்டு வெளியாகி வெற்றிபெற்ற த்ரில்லர் நாவல். அது மூன்று முறைகள் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் "நான்" எனும் பெயரில் வெளிவந்தது. அந்நாவலின் இணையத்தொடர் "Ripley" நெட்பிளிக்ஸில் வந்துள்ளது - எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக பிரதான பாத்திரம் ரிப்ளி ஒவ்வொரு காட்சியிலும் என்ன திட்டத்தை மனத்தில் வைத்திருக்கிறார் என்று நமக்குப் புரியாதவிதத்தில் காட்சிகளை எழுதியிருப்பார்கள். இது திரில்லர் கதையை சுவாரஸ்யமாக்க முக்கியமான உத்தி. ஒவ்வொரு 20 நிமிடமும் இவர் இதைத்தான் உத்தேசித்து அமைதியாக இருந்தாரா எனத் திகைப்படைவோம். அதை வெளிப்படுத்தாமலே கதையை நகர்த்துவது தனித்திறமைதான். இத்தொடரைப் பரிந்துரைத்த அருள் எழிலனுக்கு நன்றி.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share