Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விடா முயற்சி விஸ்வரூபத் தோல்வி (இது முழுக்க முழுக்க ஒரு சினிமா விமர்சனம்)



விக்ரம் மிஸ்ரி யாருக்காக தாக்கப்பட்டார்? ஏன் காங்கிரஸ் மோடிங்கிரஸாக மாறியது?
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய-பாகிஸ்தான் யுத்த நேரத்தில் அரசு, ராணுவத்துக்கும் ஊடகத்துக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டார் (அவர் வேறு பணிகளையும் ஆற்றினாலும் அவரது ஊடகச் சந்திப்புகளே கவனம் பெற்றன). பாலத்தின் மீது யார் போனவர்கள் மோடி, பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். காஷ்மீரில் நடத்தப்பட்ட பெஹல்காம் தாக்குதல் துவங்கி போர் நிறுத்தம் வரை இவர்களில் சிலருக்குப் பங்குண்டு. இதன்பின் வணிக ஒப்பந்தம், லாபக்கணக்குகளை முடிவு செய்வது, இந்திய எல்லை மீதான ஆதிக்கம், தெற்காசியாவில் இந்தியாவின் ராணுவ ஆகிருதி ஆகிய விசயங்களைத் தீர்மானிப்பது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வணிக முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட நோக்கங்கள் இருந்தன. ஆபரேஷன் சிந்தூர் என்பதற்குப் பதில் ஆபரேஷன் பிக்பாஸ் என்று வைத்திருக்கலாம் - யார் இங்கு பிக்பாஸ் அமெரிக்காவா, சீனாவா என இந்தியாவும் பாகிஸ்தானுமாக மோதிப் பார்த்து கடைசியில் மொத்தமாக டிரம்பில் காலில் பணிந்து நீங்கதான் எப்பவுமே எங்க பாஸ் என ஒப்புக்கொண்டார்கள். டிரம்பும் சீனாவுடனான லடாயை முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து தன் வரி யுத்தத்தை சமரசம் பண்ணி நிறுத்தலாம் எனச் சொல்லியிருக்கிறார். அத்துடன் சிந்தூர் விளம்பரம் முடிவுற்றது.
எஸ்.எல் பைரப்பாவின் “பர்வா” நாவலில் ஒரு காட்சி வரும் - மத்சய தேசத்தின் விராத மன்னர் பாண்டவர்களுக்கு நெருக்கமானவர். ஆனால் அவரது மகனோ கௌரவர்களுக்கு நெருக்கமாக இருப்பான். குருட்சேத்திரப் போரில் எப்படியும் நாங்கள்தாம் ஜெயிக்கப் போகிறோம், எங்களுக்கே உத்தராவை மணமுடியுங்கள் என துரியோதனனின் தூதன் கேட்க, பாண்டவர்களுக்கான நியாயங்களையும் விராத மன்னர் பரிசீலிப்பார். துரியோதனின் நோக்கம் விராத மன்னரின் உறவையும் படைகளையும் இந்த மணவுறவின் வழியாகப் பெறுவதல்ல, அவற்றை பாண்டவர்கள் அடையாமல் தடுப்பது மட்டுமே. இதற்கு நடுவில் விராத மன்னர் தன் மகளுக்கு தம் கலாச்சாரப்ப்படி ஒரு வலுவான மணமகனுக்குக் கொடுக்கவா அல்லது பணம் செலவழித்து பல நாட்டு மன்னர்களை அழைத்து சுயம்வரம் நடத்தவா, இதன் லாபநட்டக் கணக்கென்ன, நியாய தர்மம் என்ன என்று குழம்பிக்கொண்டிருப்பார். யாரும் அப்பெண்ணுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க மாட்டார்கள். எனக்கு ஆபரேஷன் சிந்தூரின்போது பைரப்பாவின் நாவலின் இந்தப் பகுதியே நினைவுக்கு வந்தது - யாரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உயிரா சீன அமெரிக்க உறவா, மக்களின் உயிரா பாஜக அரசின் மானமா, உயிரா பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிப்பதா, உயிரா தேசபக்தியா என்று கேட்கவில்லை. யாரும் என்றால் ஊடகங்கள், யாரும் என்றால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். அரசியல், வணிகம், தேசபக்தி என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மக்களின் உயிரை துச்சமாக மதிப்பார்கள், அவர்கள் இடையே கட்சி வேறுபாடு இல்லை எனப் புரிந்துகொண்டேன். பல்வேறு ஆட்டுத்தோல்களை போர்த்திய ஓநாய்கள் இவர்கள். இவர்களுடைய பற்கள் எப்போதும் மக்களின் தொண்டையை நோக்கியே திறந்திருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூருக்கு முன் இப்படியான ஆளுங்கட்சியுடனான எதிர்க்கட்சியின் ‘கைகுலுக்கல்’ இந்தியா-பாக் பிரிவினையின்போது நடந்தது. அவ்வளவு அவசரமாக பத்தே வாரங்களில் தேசத்தைப் பிரிப்பதை, எல்லையைக் கடந்து மக்களை சில மாதங்களில் அனுப்புவதை அபத்தம் என கான் அப்துல் கபார் கான், சோஷியலிஸ்ட் கட்சியின் லாம் மனோகர் லோஹியா, கம்யூனிஸ்ட் கட்சி வேறு காரணங்களுக்காக ஹிந்து மகா சபையின் ஷியாம பிரசாத் முகர்ஜியும் மட்டுமே எதிர்த்தார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் (காந்தி அப்போது காங்கிரஸின் நிர்வாகத்தில் இல்லை, அவர் வெளியில் இருந்து எதிர்த்துவிட்டு உடனே சமாதானமானார்) மொத்தமாக கண்மூடி ஏற்றுக்கொண்டார்கள். சீக்கிரமாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் எனும் அவசரத்தில் லட்சக்கணக்கான பேர் கலவரத்தின்போது கொல்லப்படுவதை மனதளவில் ‘அனுமதித்தார்கள்’. ஆபரேஷன் சிந்தூரின்போது எதிர்க்கட்சிகள் விழுந்து புரண்டு ஆளும் ஒன்றிய அரசின் துதிபாடிகளாக மாறுவதைப் பார்க்க 1940களின் எதிர்க்கட்சிகள் இன்னும் சற்று கூடுதல் முதுகெலும்பு கொண்டவர்களாக இருந்தார்கள் எனப் படுகிறது. என்.டி.டிவியில் பா. சிதம்பரத்துடன் நேர்முகம். கேள்வி: “2009இல் நீங்கள் உள்துறை அமைச்சராக ஆவதற்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அமைதியான முறையில் நடவடிக்கை எடுத்தது. போருக்குப் போகவில்லை. அதைவிட மோடியின் யுத்த முடிவு மேலான விளைவுகளை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?” அதற்கு அன்றைய 1940கள் துவங்கி 70கள் வரையிலான போர்களை ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிடலாகாது, இன்று தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்ற சிதம்பரம் மோடி அரசின் போர் முடிவு மேலானது என்று நம்புவோம் என்று சொல்லி முடித்தார். அதாவது மறைமுகமாக மன்மோகன் சிங் அரசின் அமைதிவழியிலான பேச்சுவார்த்தையை தான் ஏற்கவில்லை என்கிறார். விஷ்வகுரு பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி ஆண்மகனாகத் தன்னை நிரூபித்தார் என சங்கிகள் பெருமைப்படுவதை அங்கீகரிக்கிறார். போர் நடத்தப்பட்ட விதம், அதன் கோளாறுகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி விமர்சிக்குமா என்றால் நாங்கள் இப்போதைக்கு அதைச் செய்ய மாட்டோம், அரசுக்கு உறுதியான ஆதரவைக் கொடுப்போம் என்கிறார். அதுதான் போர் முடிந்துவிட்டதே, இனிமேலும் எதற்காக மோடியின் காலடியை முத்தமிட வேண்டும்? அதான் காங்கிரஸ் தன் தேசபக்தியை நிரூபித்துவிட்டதே, இனிமேலும் ஏன் பாஜகவின் பீரங்கியாகச் செயல்பட வேண்டும்? ஏனென்றால் மோடி போர் நிறுத்தத்தை அறிவித்தபின்னரும் “இன்னும் போர் முடியவில்லை” என்று பாகிஸ்தானை எச்சரித்துவிட்டாரே. எப்போது வரைக்கும்? அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு. அப்படியெனில் இவர்களால் வாயையே திறக்க முடியாது போல. ஷஷி தரூர் இவரைவிட மோசம் - அவர் தினம் ஒரு பேட்டியாகக் கொடுத்து அதில் பாஜகவை மறைமுகமாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்.
விக்ரம் மிஸ்ரிக்கு வருவோம் - பாலத்தைக் கடந்து வாகனங்கள் போய்விட்டன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலில், சீன-அமெரிக்க மோதலும், ஆசிய துணைக்கண்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த மேற்கத்திய நாடுகளின் கவலையும். பாகிஸ்தானைத் தொடர்ந்து போரில் ஆதரித்துவரும் சீன அரசு சற்று எல்லை மீறிப் போய்விட்டால், இந்தியாவுடன் நேரடிப் போராக இது மாறினால் அமெரிக்காவும் களத்தில் இறங்க முடியுமா? இதுவே டிரம்பின் கவலை. தமது ராணுவம் இனி நேரடியாக அடுத்தவர்களின் போரில் ஈடுபடாது என அமெரிக்கா திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. அதற்காக சீனாவை அத்துமீறவும் அனுமதிக்கவும் முடியாது. ஆட்டத்தைக் கலைப்பதே சரி என டிரம்ப் நினைத்திருக்கக் கூடும். அதனால் போர் நிறுத்தம் கொண்டு வரக் கேட்கிறார். அடுத்து, இந்தியாவுக்கு இந்த போர் எதிர்பாராத கிலியை ஏற்படுத்தியதாகவும், சுட்டு வீழ்த்தப்பட்ட ரபேல் விமான இழப்புகளை மேலும் தவிர்க்கும் நோக்கத்திலே இந்தியா போர் நிறுத்தத்தை விரும்பியது எனும் பார்வை. “Humbled and humiliated, India should look beyond Modi” என ஏஷியா டைம்ஸ் பத்திரிகையில் பீம் பூர்த்தல் எழுதிய கட்டுரையில் பாகிஸ்தான் ஏவிய சீன ஏவுகணைகளும் பைட்டர் ஜெட்களும் இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை வீழ்த்திய நிலையில் இந்தியா அதிர்ச்சியாகி தம் மானத்தைக் காப்பதற்காக அமெரிக்காவை அணுகியது என்கிறார். இதை ஒட்டியே சமாதானப் பேச்சுவார்த்தையை மே 12 அன்று நடத்தினார்கள் என்றும், இது இந்தியாவுக்குப் பின்னடைவே என்றும் கூறுகிறார். அவர் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி பரவலாக விவாதிக்கப்படுகிறது.
Despite the bombing of nearly a dozen sites in Pakistan, with significant damage observed, India was forced to acknowledge the loss of at least three fighter jets during this operation. These major losses reveal the weaknesses of the Indian Air Force என்று லெ மொண்டெ எனும் பிரெஞ்சு செய்தித்தளமும் கூறுகிறது. டெலிகிராப் பத்திரிகையிலும் இச்செய்தி வந்துள்ளது - How China helped Pakistan shoot down Indian fighter jets.
ரயட்டர்ஸ் இணையதளத்தில் வந்த Exclusive: Pakistan's Chinese-made jet brought down two Indian fighter aircraft, US officials say எனும் கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்கள்: One U.S. official, speaking on condition of anonymity, said there was high confidence that Pakistan had used the Chinese-made J-10 aircraft to launch air-to-air missiles against Indian fighter jets - bringing down at least two.
Another official said at least one Indian jet that was shot down was a French-made Rafale fighter aircraft. Both officials said Pakistan's F-16 aircraft, made by Lockheed Martin were not used in the shootdown. ஆனால் இந்தியா இச்செய்திகளை வழக்கம்போல மறுத்துள்ளது. இந்திய ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அரசின் அதே ஊதுகுழலில்தான் துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்ப்பதால் நாம் என்ன நடந்ததென்றே புரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம்.
ஆனால் இன்றைய சமூக ஊடக உலகில் இச்செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் முடியாதே. தேசபக்தர்களால் இச்செய்திகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியாதுதானே. ஆனால் அதற்காக அவர்கள் மோடியையோ டிரம்பையோ திட்ட முடியாதே. அவர்களுக்கு சீன மொழி வேறு தெரியாது. பாகிஸ்தானைத் திட்டினால் அவர்கள் சொன்னது உண்மையென நிரூபிப்பதைப் போலாகிவிடும். அவர்களில் பாஜக சார்பினர் ‘நாங்கள்தாம் ஜெயித்தோம், பாகிஸ்தானை ஓடவிட்டோம்’ என தூக்கத்தில் கால்களை மேல்நோக்கித் தூக்கி ஒன்றுக்கடிக்கிறார்கள். ஆனால் பெரும்பகுதி மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். ஒன்று இந்த யுத்தத்தை ஆரம்பித்திருக்கக் கூடாது. ஆரம்பித்த நிலையில் ஒழுங்காக முடித்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உலகின் எந்த எல்லைக்குப் போய் ஒளிந்தாலும் நாங்கள் துரத்திப் போய் அடிப்போம் என்று சவால் விட்ட மோடி இப்போது பால்குடித்த பூனையைப் போல இருக்கிறார். ஆனால் அவரைத் திட்டினால் அக்கவுண்டை தடைசெய்வார்கள், கைது பண்ணுவார்கள். மேலும் அவர்தான் விஷ்வ குரு ஆயிற்றே. ஆகையால்தான் ‘பாலத்தைக்’ குமுறுவதாக அவர்கள் முடிவெடுத்து பாவப்பட்ட வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை இலக்காக்கினார்கள். அவரது டிவிட்டர் கணக்கில் டுரோல்கள் படையெடுத்துப் போய் அவரை மிக மோசமாகத் தாக்கி எழுதியிருக்கிறார்கள். அவரது மகள் வெளிநாட்டில் படித்து அங்கே வேலை செய்கிறார். அவரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஒருகட்டத்தில் மிஸ்ரி தன் கணக்கைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். அதனாலே அவர் மே 12 அன்று வழக்கம்போல வெள்ளைச் சாமி இரவில் தோன்றி விரலை மடித்துமடித்து பாகிஸ்தானை மிரட்டியிருக்கிறார். “யுத்தம் முடியவில்லை” என்றிருக்கிறார். முடியவில்லை என்றால் ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் போரை நடத்தி வெற்றிபெற்று விட்டீர்கள் என்றால் பாகிஸ்தானுக்கு இதற்கு மேல் தீவிரவாதிகளை அனுப்பும் திராணியே இருக்கக் கூடாதே? ஆக நீங்கள் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை என ஒப்புக்கொள்கிறீர்கள். இப்போது மோடியின் மிரட்டல் அஜித்குமாரின் “விடாமுயற்சி” போல ஆகிவிட்டது - சின்னக் குழந்தைகள் கூட இனி இந்த எச்சரிக்கையைப் பார்த்து பயப்பட மாட்டார்கள். பா.சிதம்பரத்தையும் தரூரையும் தவிர தவிர யாரும் “விடாமுயற்சிக்கு” கைதட்டுவதாக இல்லை.
மக்கள் எந்தளவுக்கு மோடியிடம் வெறுத்துப் போயிருக்கிறார்கள் என்றால் ராகுல் காந்தி சில வருடங்களுக்கு முன்பு மோடி அரசு காஷ்மீர் பிரச்சினையைக் கையாள்வதில் உள்ள குளறுபடிகளையும், பாகிஸ்தானுடனான அவர்களது தவறான வெளியுறவுக் கொள்கைகளையும் விமர்சித்துப் பேசியதை இப்போது சமூகவலைதளங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார்கள். திரும்பவும் ராகுல் காந்தியாகுங்கள் என கேட்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி தற்காலிகமாக மோடி காந்தியாக இருப்பதால் அதுவும் சாத்தியமில்லை. அவர் "Dear Prime Minister, I reiterate the unanimous request of the Opposition to convene a special session of Parliament immediately. It is crucial for the people and their representatives to discuss the Pahalgam terror attack, Operation Sindoor and today's ceasefire, first announced by US President Trump. This will also be an opportunity to demonstrate our collective resolve to meet the challenges ahead. I trust that you will consider this demand seriously and swiftly,” என்று தலைமை ஆசிரியருக்கு ஒழுங்கான பள்ளி மாணவன் அனுப்புவதைப்போல கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே வேறு மதிப்புக்குரிய ஐயா, நாங்கள் ஏற்கனவே அனுப்பிய கடிதத்துக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என நினைவுறுத்துகிறோம் என அறிக்கை விடுகிறார். “எனக்கு அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” வசனம் நினைவுக்கு வருகிறது. மோடி பிரதமரான பிறகு எப்போதாவது பாராளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சிக்கு பதிலளித்திருக்கிறாரா? இல்லை. எப்போதும் செய்யாதவர் இப்போது மட்டும் வந்து ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி விவாதிக்கப் போகிறாரா? ராகுல் காங்கிரஸைக் கலைத்துவிட்டு அதை பாஜகவுடன் இணைத்துவிட்டால் ஒருவேளை சாத்தியப்படலாம்.
காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் “போர் நிறுத்தத்திற்கான உத்தரவாதங்களை பாகிஸ்தான் அளித்ததா?” எனக் கேட்பது இன்னும் அபத்தமாக உள்ளது - ஏனென்றால் போர் நிறுத்தம் அறிவித்த ஒரு மணிநேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தியா அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. பாகிஸ்தானோ “இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினாலும் நாங்கள் அமைதியாக இருப்போம்” என என விடா முயற்சி வில்லன் திரிஷாவைக் கடத்தியதைப் போல நம் அஜித்குமாரை அசிங்கப்படுத்தியது. ஏன் இப்படி அவமானகரமாக பாதியில் கிளம்பி வந்தீர்கள்? ஏன் நமது ஆயிரங்கோடி மதிப்பிலான விமானங்கள் சுலபத்தில் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது? அதெப்படி சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க ராணுவவத்தின் மேற்கோளுடன் சொல்லும் செய்தி பொய்யாக முடியும்? நமது போர்த் தளவாடங்களின் ஆற்றல்தான் என்ன? ஏன் பாகிஸ்தான் தாக்கிய பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே அகற்றி அவர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு கொடுத்தாமல் பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமான பேர்களை காவு கொடுத்தது? ஏன் பெண்களையும் குழந்தைகளையும் பாகிஸ்தான் கொல்ல அனுமதித்தது? இக்கேள்விகளையே ராகுல் காந்தி, சாரி மோடி காந்தி, எழுப்ப வேண்டும். அவர்கள் ராணுவத்தைக் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ வேண்டாம், ஆனால் அரசைக் கேள்வி கேட்கலாம் தானே? அதன்பெயர் தானே தேசபக்தி?
ஏன் இப்படி மொத்த எதிர்க்கட்சியும் இருட்டுக்கடை அல்வா வாடிக்கையாளர்களைப் போல பாஜக வாசலில் நிற்கிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது (Why Opposition’s Backing Of ‘Operation Sindoor’ Marks A Shift From 2016 And Balakot Reactions). அதில் 2019 புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும், பாலகோட் தாக்குதலின் நிஜமான புள்ளிவிபரங்களையும் காங்கிரஸ் விமர்சித்ததை பாஜக தேசதுரோகமாகச் சித்தரித்தது தமக்கு தேர்தலில் பலத்த அடிகிடைக்க காரணமாகிவிட்டது என காங்கிரஸ் தலைமை நம்புவதாகக் கூறும் குறிப்புகள் உள்ளன. ஏனென்றால் இம்முறை அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துமுன்னரே எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூருக்காக ராணுவத்தைப் பாராட்டிப் பேசத் தொடங்கினர். மோடி யாரங்கே எனுமுன்பே அவரது வாசலில் போய் வரிசை கட்டி நின்றனர். கர்நாடக காங்கிரஸின் டிவிட்டர் பக்கத்தில் காந்தியின் படத்தைப் போட்டு அமைதியைப் போற்றும் டிவீட் வந்திருந்தது. அதையும் உடனே அழித்து ராணுவத்தைப் புகழ்ந்து ட்வீட் போட்டனர். அதாவது காந்தியைத் தூக்கில் பரணில் போடு, மோடிஜியின் மொழியில் பேசு என காங்கிரஸ் தலைமையிடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது (ராணுவம் என்றாலே அதைத் தம் சொத்து என பாஜகக் கோரும்போது ராணுவத்தைப் புகழ்வது மோடியைப் புகழ்வதாகிறது.) இதை காங்கிரஸின் பிரமாதமான யுக்தி என்று என்னால் ஏற்க முடியவில்லை - போரை அது நடக்கும்போது பாதுகாப்பு கருதி ஆதரிக்கலாம். அல்லது அமைதி காக்கலாம். அதைவிட முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தியிருக்க வேண்டும், அவர்களுக்கு கட்சி சார்பில் உதவியிருக்க வேண்டும். ஏன் போரில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என்பதாலா? முஸ்லீம் உயிர்களுக்காக இரங்கினாலோ அவர்களுடைய வீட்டுக்குச் சென்று ஆதரித்தாலோ அதுவும் இந்துத்துவ விரோதமாகிவிடும் என்பதாலா? கடந்த தேர்தலில் காங்கிரஸ் கிட்டத்தட்ட பாஜகவை நெருக்கிவிட்டது, அதாவது அவர்களுடைய இந்துத்துவ எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் இம்முறை தன்னம்பிக்கை இல்லாமல் ஓவர்ரியாக்ட் பண்ணிவிட்டர்கள். கடைசியில் மோடி காங்கிரஸையும் ஏமாற்றிவிட்டார். இவ்வளவு அடிவாங்கிய பின்னர் நீங்கள் ராணுவத்தைப் பாராட்டவும் முடியாது, மோடியை எதிர்க்கவும் முடியாது. டெலிகேட் சிச்சுவேஷன். எதிரியின் மொழியில் பேசி எதிரியின் சட்டையை அணிந்து எதிரியை பணிந்து வணங்கிய பின் எதிரியை ஒழிக்க முடியாது. அதற்கு மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? 2019இல் இருந்த நிலைமை வேறு - அன்று நடந்தது போர் அல்ல (பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் மட்டுமே. அன்று சீனா களத்துக்கு வராததால் பிரச்சினை இல்லை.). அப்போது நம் நாட்டில் குண்டு விழவில்லை, அப்போது நம் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை, அப்போது நாம் பாதியில் கைகட்டிக்கொண்டு வெளியேறவில்லை. மேலும் இது இந்தியா பாகிஸ்தான் போர் அல்ல, இது இந்தியா சீனா போர். இதை நான் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஏழாம் வகுப்பு மாணவனிடம் கேட்டபோதே சொன்னான், “இது சீனா பாகிஸ்தானை முன்வைத்து நடத்தும் போர்”. எனக்கு ஆச்சரியமாகியது. ஆனால் குழந்தைக்குப் புரிந்தது இவர்களுக்குத் தெரியவில்லை. நான் சீனாவிடம்தான் தோற்றிருக்கிறோம், இதன் விளைவுகள் வருங்காலத்தில் மோசமாக இருக்கும். நாம் அமெரிக்காவை நம்பி சீனாவை பாகிஸ்தான் பக்கம் நகர்த்தினோம். ஆனால் போரென்று வந்தால் அமெரிக்கா திரிஷாவைப் போல “நாம பிரிஞ்சிரலாம்” என்று இந்தியாவிடம் சொல்கிறது. ஏஷியா டைம்ஸ் பத்திரிகையில் மோடியின் மிகப்பெரிய பலவீனம் அவர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தன்னை மேம்போக்காகப் புகழ்வதை முழுக்க நம்பிவிடுகிறார், ராஜதந்திரம் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதாவது, பொதுவாக மேற்கத்திய தேசங்கள் தம்மால் கட்டுப்படுத்த முடிகிற நாட்டின் தலைவர்களையே புகழ்வார்கள், அதன்பொருள் “உன்னை நாங்கள் மதிக்கவில்லை, உன்னைப் பயன்படுத்திவிட்டு வீசிவிடுவோம்” என்பதே. நம்மால் சீனாவை நேரடியாகத் தாக்கவும் முடியாது. இதற்குப் பதிலாக சீனாவிடம் முன்பே டீல் பேசி பாகிஸ்தானை அடக்கி வைத்திருக்கலாம்.
இன்று மக்களின் கோபம் பாஜக பக்கம் தாவியுள்ளது. அதை அறுவடை செய்ய களத்தில் காங்கிரஸ் இல்லை. விடாமுயற்சி விஸ்வரூபத் தோல்வியாகிவிட்டது. போரைத் தீவிரமாக ஆதரித்த ஜனங்களின், எதிர்க்கட்சிகளின் நிலைமை சங்கடத்துக்குரியதாகி விட்டது. விடா முயற்சி நாயகனோ கவலைப்பட மாட்டார், அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போய்விடுவார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...