நான் அவளை உணவகத்தில் சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் முன்கூட்டியே சென்று காத்திருப்பேன். இது அவளாக சொல்லிச் செய்ததல்ல. நானாக செய்தேன். அவள் வந்ததும் கால் மேல் காலை இட்டபடி தன் பார்வையைத் தாழ்த்தி என்னை இனி எனக்கு உயர்வதற்கு இடமே, வானையும் கடந்து வளர்ந்து சென்றுவிட்ட அடிமுடி அறியா பிறவி நான் என்பதாகப் பார்ப்பாள். அடுத்து உடனே இயல்பாகி புன்னகைப்பாள். நான் உடனே உடைந்து விடுவேன். அவள் இப்படி செய்யும்போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்த்துவிடும். இப்படி அவளிடம் ஓராயிரம் பாவனைகள் உண்டு. அவள் வந்து அமர்ந்ததும் நான் அவளது காலை என் கையால் தொட்டு விரலில் முத்தமிடுவது வழக்கம். பப்களில் நான் மண்டியிட்டு அவளது கால் பெருவிரலைச் சப்புவதும் உண்டு, அவள் மெல்ல உதைக்கும்போது என் தலை மேஜையின் விளிம்பில் படும், உச்சம் பெற்றதைப்போல சிரிப்பாள், அது அவ்வளவு அற்புதமான ஒரு தருணம்.
நாங்கள் முதன்முதலாக உணவகத்தில் சந்தித்தது ஒரு மகத்தான நிகழ்வு. என்னால் அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது.
அவள் நகரத்துக்கு வந்ததும் தன் தோழியின் விடுதி அறையில் தன் பொருட்களை வைத்து உடைமாற்றிவிட்டு, புர்காவின் விளிம்புக்கு மேலாக தன் அழகான ஆடையின் அலங்காரம் தெரியும்படி எடுத்துவிட்டபடி, முகத்தில் கிளிட்டரும், இளஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் அணிந்து என்னை விடுதிக்கு எதிரே உள்ள மோமோஸ் கடை வாசலில் சந்தித்தபோது நாங்கள் சந்தித்த பத்தாவது நிமிடத்தின் தொடர்ச்சியே அது என அவளிடம் சொன்னேன். அவள் தானும் அப்படியே உணர்ந்ததாகச் சொன்னாள்.
இரண்டாவது நாளே அவளை ஓர் உயர்தர உணவகத்து அழைத்தேன். நான் பப்பென்றுதான் சொன்னேன். அவள் அதற்கு “உன்னை அங்கே டான்ஸ் பண்ணுகிறவர்கள் மிதித்துவிட்டால் என்ன செய்வது ஹிட்லர்?” எனச் சிரித்தாள். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன். பெண்களின் கால்கள் கவனமானவை. அப்புறம் ஸ்டாப் காலிங் மீ ஹிட்லர்.” “ஒருவேளை நீ வழுவழுப்பான காலொன்றில் தடுக்கி விழுந்து பல நடனமாடும் கால்களிடம் ஒரு புட்பாலைப்போல சிக்கிக்கொண்டால்? நான் எப்படி உன்னைக் காப்பாற்றி என் பக்கம் கொண்டு வருவது? எனக்கு பைசைக்கிள் கிக் தெரியாதே.” நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்று சொன்னதற்கு “இளம்பெண்கள் உன்னைப் பயன்படுத்துவதற்காக அழைத்துப்போய் அங்கே யாரையாவது பிடித்துக்கொள்வார்கள். நான் அப்படி அல்ல. நீ வந்தால் உன் மொத்த பொறுப்பும் எனக்குத்தான்.” என்பாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்று பிரசித்தமான உணவகம் ஒன்றை சொன்னேன். நான் மெல்லமெல்ல அழுவதை முடித்தபோது பரிசாகரர் ஒரு தட்டில் முழு கோழி தந்தூரியை வெண்துணி மூடியால் மறைத்துக்கொண்டுவந்து எங்கள் முன்னால் திறந்து காட்டினார். ஆவி பறந்து மேலெழுந்து கலைகிறது. அவள் “வாவ்” என்றாள். அங்கே என் தலை வீற்றிருந்தது. நானும் அவளுமாக என் தலையைக் கத்தியாலும் முள்கரண்டியாலும் வெட்டியெடுத்து பரஸ்பரம் ஊட்டினோம். என் தசை எவ்வளவு சுவையாக இருக்கிறது, அதுவும் கன்னக் கதுப்பு, அதற்கு மேலே உள்ள சிறிய எலும்புகள், பின்னந்தலை ஆஹா ஆஹா. ஒரு மனிதன் தலையற்றுப் போகும்போது ஏன் இவ்வளவு பரவசத்தில் ஆர்ப்பரிக்கிறான்?
- "நிழல் பொம்மை" நாவலை வாங்க
