இப்போது இலக்கிய வாசகர்கள் லட்சிய மனிதர்களை பிரதான பாத்திரங்களாக ஏற்றுக் கொள்ள சிரமப்படுகிறார்கள். அப்படியான பாத்திரங்களை செயற்கையானவர்கள், சினிமாத்தனமாவர்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள். இந்த பின்னணியில் இருந்து நாம் அரிஸ்டாட்டிலின் கூற்றை எதிர்கொள்ளக் கூடாது என்பது இங்கு முக்கியம். அரிஸ்டாட்டில் தனது நூலிலேயே ‘உயர்ந்த மனிதனை’ ஒரு “தங்க பதக்கம்” எஸ்.பி சௌத்ரியாக அல்லது ராஜ்பாட் ரங்கதுரையாக மட்டும் முன்வைக்கவில்லை. அவர்கள் லட்சிய மனிதர்கள் அல்ல, மாறாக தமது பணியில் உயர்ந்த திறனுடன் விளங்குகிறவர்கள், சமூகத்தில் தம் செயல்பாட்டால் நல்ல மரியாதையுடன் விளங்குகிறவர்கள் என்று தான் வரையறுக்கிறார். (அந்த விதத்தில் மேற்சொன்ன சிவாஜி பாத்திரங்கள் கச்சிதமான அரிஸ்டாட்டிலிய நாயகர்கள்.) உ.தா., அவர் ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். மாணவர்களிடமும், பள்ளியிலும் மதிப்பு பெற்றவராக இருக்கலாம். அவர் ஒரு சிறந்த கவிஞராக, பாடகராக, சமூக சேவகராக இருக்கலாம். அல்லது தன் வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து தன்னுடைய சிறிய வட்டத்தில் நல்ல பெயர் பெற்ற ஒரு குமாஸ்தாவாக கூட இருக்கலாம். அவர் திறமையளவில் குறைபட்டவராக இருந்தாலும் தன்னுடைய விழுமியங்களைக் கொண்டு மதிக்கத்தக்கவராக இருக்கலாம். ஒரு அன்பான தாயாக, அக்கறையான மனைவியாக, உறவுகளிடம் பரிவாக இருக்கும் பெண்ணாக இருக்கலாம், தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்கலாம். அங்கிருந்து அவருடைய அகந்தை அல்லது ஆசை அல்லது காமம் காரணமாக ஒரு சரிவு வரும் போது அது பார்வையாளர்கள் / வாசகர்களின் பச்சாதாபம் மற்றும் அச்சத்தை தூண்டும் என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். பரிதாபம் மற்றும் அச்சத்தையே அவர் ஒரு படைப்பனுபவத்தின் பிரதானமான உணர்ச்சிகளாக வரையறுக்கிறார்.
நாவல் வடிவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் என்னிடம் நேரடியாகப் பயிற்சி பெறவும் என் ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.