எனக்கு கடந்த புதன் கிழமை “பல்லைக் பிடுங்கினார்கள்”. ஆங்கிலத்தில் extraction என்று நளினமான அறிவியல்தனமாக அழைத்தாலும் அது நிஜத்தில் பிடுங்குவதுதான் என்பதை ‘உணர்ந்தேன்’. மருத்துவர் என் பல்லைக் கிடுக்கியால் பற்றி இழுத்தபோது இவர் ஏன் இழுக்கிறார் என வியந்தேன். அதன்பிறகு அதை அங்குமிங்குமாக அசைத்து ‘உடைத்தார்’. ஆம், நல்லவேளையாக அதற்கு முன்பு வலிமரப்பு ஊசியைப் போட்டார். நமக்குள் எதையோ உடைத்துப் பிடுங்கி எடுப்பதன் பயம் இருக்கிறதே அது தனியானது. எனக்குத் துளிகூட வலிக்கவில்லை, ஒரு சிறு கூச்சம், கண்ணை இறுக்க மூடவைக்கிற எலும்பு வலியைப் போல ஒன்று அவ்வப்போது இருந்தது என்றாலும், முறுகிக் கொள்கிற என் முஷ்டியைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருந்தது. எங்கே என் பிரக்ஞையை மீறி அவரது மூக்கைக் குத்திவிடுவேனோ என பயமாக இருந்தது. ம்ம்ம்ம் என உறுமியபடி அதைக் கடந்தேன். சுவற்றில் ஆணியைப் பிடுங்குவதைப் போன்ற இச்செயலைச் செய்ய மருத்துவருக்கு அநாயசமான மனநிலையும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும். பார்த்து பதவிசாகச் செய்பவர்களால் முடியாது. அது மனித உடம்பல்ல, அது ஒரு இடிபாடு, அதற்குள் நீண்டிருக்கும் மரத்தை சுத்தியால் அடித்து உடைத்து பிடுங்கு என நினைத்துச் கைவைக்க வேண்டும். ஆனால் பல்லை டிரிட்டல் போன்ற சிறிய கருவியால் சுத்தம் செய்வது இன்னும் நுணுக்கமான வேலை. அதைச் செய்த இளம்பெண் பயிற்சி மருத்துவர் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் என் நாக்கைப் பதம் பார்த்தார். நான் நல்லவேளையாக மருத்துவம் படிக்கவில்லை. என்னைப் போன்ற யோசித்து கவனமாக நுட்பமாகச் செயல்படுகிறவர்களுக்கு பல்லை உடைப்பது குழப்பமான செயலாகும். இதற்கு ஒரு சுரங்கத் தொழிலாளியின் தைரியமும் வலிமையும் வேண்டும். ஒட்டுமொத்தமாக இதை ஒரு நல்ல அனுபவம் என்றே சொல்ல வேண்டும். பெரிய பாதகம் இன்றி வெளியே வந்தேன்.
இந்த பல்லுடைக்கும் விவகாரம் நடக்குமுன்பே என் சக ஊழியர் என்னை எச்சரித்தார். தாங்க முடியாத வலி ஏற்படும். அவர் அதனாலேயே தன் உடைந்து போன பல்லைப் பிடுங்காமல் தப்பித்துத் திரிகிறார். மேலும் நான் என் கல்லூரியில் யாரிடம் சொன்னாலும் ஏதோ நெருப்பில் தள்ளியதைப் போல துடித்தார்கள். “அவ்வளவு வலிக்குமா?” “ஐயய்யோ”. இரண்டு தோழிகள் என்னிடம் “நல்லாயிருக்கும்” என்றார்கள். நல்லாயிருக்குமா? “ஆமாம், பல்லெடுத்ததும் டாக்டர் ஐஸ்கிரீம் சாப்பிடச் சொல்வார். வலி குறைந்து ஜாலியாக இருக்கும்.” வலிக்காதா என்று நான் கேட்டதற்கு ஐஸ்கிரீம் சாப்டுங்க, எஞ்சாய் பண்ணுங்க என்று சிரித்தார்கள். என் அம்மாவிடம் கேட்டால் கண்டிப்பாக ஒரு வாரம் வலியிருக்கும், எதையும் சாப்பிட முடியாது என்றார். மேலும் எனக்கு ஏற்கனவே படித்துள்ள மார்க்வெஸின் கதையொன்று நினைவுக்கு வந்தது. அதில் வலி மரப்பு மருந்தின்றி ஒரு கொடுங்கோலரின் பல்லை புரட்சியாளர்களின் ஆதரவாளரான மருத்துவர் பிடுங்குவார். பொறுக்க முடியாத வலியில் அந்த மனிதர் கதிகலங்கிப் போவார்.
பல்லவியிடம் மருத்துவர் பல்லை உடைக்கப் போவதாகச் சொல்லியும் கூட அவள் (வலிக்கு பயந்து) முடியாதென்று சொல்லி மறைந்து திரிகிறாள். என்னால் தலைமறைவாக முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு என் பற்களில் வலி எடுத்ததால் சுத்தம் பண்ணி இரு பற்களை ‘நிரப்பினார்கள்’. நிரப்பியபின்னரே எனக்கு தாங்க முடியாத வலி எடுத்தது. வலி நிவாரணி மாத்திரைகளே உதவின. அந்த மாத்திரைகள் முடிந்ததும் பற்களைச் சும்மா காட்டிவிட்டு மீதமுள்ள பற்களையும் நிரப்பலாமா என்று கேட்கவே அரைமனத்தோடு போனேன். காத்திருப்பு வரிசையில் ஒரு மனிதர் ஒரு பக்கம் முகம் வீங்கிய நிலையில் பயங்கரமான பாவனையுடன் உட்கார்ந்திருந்தார். உள்ளே போன என்னை அந்த மருத்துவர் பார்த்துவிட்டு வலப்பக்க ஞானப்பல்லை எடுத்துவிடலாம், அதன்பிறகு நிரப்பலாம் என்றார். என்னவோ பண்ணுங்க எனும் மனநிலையில் நான் இருந்தேன்.
பல்லை மருத்துவர் உடைத்தபின்னர் எனக்கு ரொம்ப நேரமாக வலிக்கவே இல்லை. நான் மருத்துவரிடம் ஏற்கனவே இதைக் குறித்துக் கேட்டிருந்தேன். வலிமரப்பு மருந்து நான்கு மணிநேரங்களில் செயலிழக்கும். உடனே வலி தொடங்கும். வலி நிவாரணி மாத்திரைகளை நான் முழுங்கிக்கொள்ள வேண்டும். “வலி போய்விடுமா?” “வலிக்கும், மாத்திரை அதைக் கொஞ்சம் குறைக்கும்.” “எவ்வளவு நாட்கள்?” “ஐந்து நாட்கள்.” நான் இதைக் குறித்த பதற்றத்திலே இருந்தேன். வீட்டுக்கு வந்து அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு மருந்தை முழுங்கினேன். அதன்பிறகு ஒவ்வொரு நான்கு மணிநேரமாக எண்ணிக்கொண்டிருந்தேன். சுத்தமாக வலியே இல்லை. சிலர் 24 மணிநேரத்துக்குப் பிறகு வலிக்கும் என்றார்கள். எனக்கு அடுத்தநாளே ரத்தக் கசிவு நின்று காயம் ஆறத் தொடங்கியது. 48 மணிநேரத்தில் கடுமையான வலி ஏற்படக் கூடும் என இணையத்தில் படித்தேன். ஆனால் கடவுளைப் போல வலி தன் தரிசனத்தைத் தராமலே ‘ஏமாற்றிவிட்டது’. வரும் வரும் எனும் பயமே பயங்கரமாக இருந்தது. ஒருவேளை வாய்க்குள் எதாவது பிரச்சினையோ என்று பல்துலக்கும்போது பல்லிருந்து பகுதிக்கு அருகே பிரஷ்ஷைக் கொண்டு போனால் வலித்தது. முழுமையாக காயம் ஆற இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்.
காயம் ஆறி வரும் முதல் ஐந்து நாட்களில் குத்துச்சண்டை பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யக் கூடாது என்று சாட்ஜிபிடி கண்ணை உருட்டி என்னை எச்சரித்தது. ஆனால் நான் குத்துப் பயிற்சி செய்தேன். ஒரு பக்க வாயால் கறி, மீனெல்லாம் தின்றேன். எந்த பிரச்சினையும் வரவில்லை. என்னவோ ஒன்று சரியாகவும் தப்பாகவும் இருக்கிறது - அது என்னவென்றுதான் தெரியவில்லை. பல்லை நிரப்பியபோது என் கழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வலி தாலி கட்டும் சமயத்தில் தன் காதலனுடன் ஓடிப்போய் விட்டது. ஆனால் இடப்பக்க ஞானப்பல்லை அடுத்து மருத்துவர் ‘உடைக்கும்போது’ இந்த வலி என்னிடம் காதல் கொண்டு திரும்ப வந்துவிட்டால் என்ன செய்வது? இப்போதைக்கு அப்பயம் மட்டுமே.
பல்வலி இரண்டு மூன்று வாரங்களாகப் படுத்தி எடுத்ததில் என் எழுத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஒரு கட்டுரை, நாவலில் சில பக்கங்கள் மட்டுமே எழுத முடிந்தது. ஆனால் வலியின் பாதையின் முடிவு எப்போதும் இப்படியிருந்தால் அப்போதே சந்தோஷப்பட்டிருப்பேன்.