முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதை ஒரு நோய், குற்றமல்ல

 போதை மருந்து பயன்பாட்டுக்கு ஒருவரைக் கைது பண்ணுவது நோய்த்தொற்று ஏற்பட்டதற்காக ஒரு நோயாளியைக் கைது செய்வதற்குச் சமம். பெரும்பாலான சட்டங்கள் அபத்தமானவை எனில் மிக அபத்தம் இந்த போதைப் பொருள் பயன்பாட்டுச் சட்டம்தான். முதலில், ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக போதை மருந்திற்கு அறிமுகமாகி அதற்குப் பழகினபின்னர் அவர் நோயாளியாகிறார் எனில் அவரால் பிரக்ஞைபூர்வமாக அதைத் தவிர்க்க இயலாது. அவருக்கு போதை மருந்தும் ஒருவித மருந்தாகிவிடும். எனில் அத்தகையவரைப் பிடித்து ஆறுமாதங்கள் சிறையில் அடைப்பதால் என்ன பயன்?

அடுத்து, போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் ஒருவர் சமூகத்திற்கு பாதிப்பை நேரடியாக உண்டுபண்ணுவதில்லை (திருட்டு, அடிதடி, கொலைக் குற்றங்களைச் செய்பவரைப் போல).
இந்தியாவில் மொத்தமாக ஏழரை கோடி பேர்கள் போதை மருந்து அடிமைகள் என்று அரசின் அறிக்கையே சொல்கிறது (https://socialjustice.gov.in/.../Magnitude_Substance_Use...). இதை விட நிச்சயமாக பலமடங்கு அதிகமாகவே இருப்பார்கள். இளைஞர்கள், பதின்வயதினர் இடையே இன்று மது போதையை விட போதை மருந்து போதையே அதிகம் என்பதை அறிவோம். இத்தனை பேர்களையும் பிடித்து சிறையில் அடைக்க இயலுமா? அரசால் எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று ரத்த மாதிரி வாங்கி சோதித்துப் பார்க்க இயலுமா? அதெல்லாம் சாத்தியமா? அதனால் பலனுண்டா?
கொசு கடித்து மலேரியா வந்தவரைக் கைது பண்ணுவோமா (ஏன் கவனமாக இருந்து மலேரியாவையும் அதன் பரவலையும் தடுக்கவில்லை எனக் கேட்டு) அல்லது கொசுவை, அது வளரக் காரணமான மழைநீர்க் குட்டைகளை ஒழிப்போமா?
தடைசெய்யப்பட்ட பொருளை வாங்கிப் பயன்படுத்துவது தவறெனத் தெரிந்துதானே அதைச் செய்கிறார் என சிலர் கேட்கலாம். அது ஒழுக்கக் குற்றமே ஒழிய அறப்பிறழ்வு அல்ல என தனிமனிதர்களுக்குத் தெரியும். அதனாலே அவர்கள் யாருக்கும் தெரியாதபடிக்கு அதைச் செய்யலாம் என நினைக்கிறார்கள். நீங்கள் போதை மருந்தை பயன்படுத்தினால் உங்கள் அண்டை வீட்டாருக்கு மாரடைப்பு உடனே வருமென்றாலோ பக்கத்து தெருவில் உள்ளவர் தன் சொத்தையோ மானத்தையோ இழப்பார் என்றால் அதை முதலில் வாங்கும்போதே மனசாட்சி எச்சரிக்கும், தவிர்ப்போம். ஒழுக்க மீறல்கள் எப்போதுமே இப்படித்தான் நிகழ்கின்றன. யாரும் காணாதபோது அவை மீறலே அல்ல.
போதை மருந்துப் பயன்பாட்டைத் தடுக்க இது உதவும் அல்லவா என்றும் அதே சிலர் கேட்கலாம். தண்டனையால் குற்றங்கள் குறைவதாக எந்த தரவும் ஆய்வும் தெரிவிக்கவில்லை (More imprisonment does not reduce state drug problems. The PEW Charitable Trusts. 2018. https://www.pewtrusts.org/.../pspp_more_imprisonment_does.... Accessed 27 May 2021.). மாறாகத் தண்டனைகள் போதை மருந்துப் பயன்பாட்டை அதிகரிக்கவே செய்கின்றன (Binswanger IA, Stern MF, Deyo RA, Heagerty PJ, Cheadle A, Elmore JG, et al. Release from prison-a high risk of death for former inmates. N Engl J Med. 2007;356:157–65.). பொதுவாகவே தண்டனைகள் காவலர்களுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் வக்கில்களும் தொழில் சாத்தியங்களை உண்டு பண்ணுகின்றன, சமூகத்துக்கு போலியான பாதுகாப்புணர்வு கிடைக்கிறது தவிர சமூகத்துக்குப் பயனில்லை. அடிப்படையில் தண்டனையானது போலி தடுப்பூசியைப் போன்றது. "People with substance use disorders need treatment, not punishment, and drug use disorders should be approached with a demand for high-quality care and with compassion for those affected" என்று நோரா வோல்கோவ் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். போதை மருந்து நோயாளிகளுக்குத் தேவை தண்டனையல்ல, சிகிச்சைதான் என்கிறார் அவர்.
இதற்குப் பதிலாக, போதை மருந்துகள் கிடைக்கிற சூழலை, அதன் வலைத்தொடர்பை, வணிகத்தை ஒழிப்பதே தீர்வு. அதற்கு அரசு நிறைய பணத்தையும் ஆற்றலையும் இதற்குச் செலவிட வேண்டும். இம்மாதிரி போதை மருந்து பெருவியாபாரிகளிடம் இருந்து கட்சிகளோ காவல்துறையோ பணம் வாங்கக்கூடாது. ஆனால் அதுவும் முழுக்கச் சாத்தியமல்ல. ஏனென்றால் தாராளவாத சந்தைப் பொருளாதாரத்தில் எந்த வணிகத்தையும் சுலபத்தில் ஒழிக்க இயலாது. பணம் எங்கெல்லாம் அதிகமாகப் புழங்குகிறதோ அங்கெல்லாம் அதிகாரமும் இருக்கும், அதை நோக்கி சமூக அமைப்பு, சட்டம், அரசியல் வளையும். நவதாராளவாதத்திற்குள், தனிமனிதர்களும் நிறுவனங்களும் பணத்தை, சொத்தைச் சேர்ப்பதில் கட்டுப்பாடுகள் வரும்போது சமூகத்தில் பெரும்பாலான குற்றங்கள் ஒழியும்.
கொகெய்ன் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு காவல்துறை நடிகர் ஶ்ரீகாந்த் கைது பண்ணியுள்ளது இந்த அபத்தக் கூத்தின் நீட்சிதான். போதை மருந்து விற்கிறவர்களைப் பிடித்தபின்னர் அவர்களது புகழ்பெற்ற வாடிக்கையாளர்களின் பட்டியலை எடுத்து அவர்களில் அதிகமாக அதிகாரமோ செல்வாக்கோ இல்லாத ஒருவரைக் கைது பண்ணியிருக்கிறார்கள். ஏனென்றால் காவல்துறைக்கும் சினிமா ஷோக்கு தேவைப்படுகிறது. பொதுவாக நடிகர்களைக் கைதுபண்ணினால் அவர்களுக்காக சிபாரிசு பண்ணும் அரசியல்வாதிகளோ தொழிலதிபர்களோ யாரும் ஶ்ரீகாந்துக்காக அழைக்கவில்லை என்று காவல்துறையோ அதிர்ச்சியடைந்ததாக பத்திரிகையாளர் அந்தணன் கூறுகிறார். ஆனால் ஶ்ரீகாந்துடைய கைதைக் கொண்டு காவல்துறைக்கு நல்ல கவனமும் டிராக்‌ஷனும் கிடைத்துள்ளது. அதற்காகத்தான் அவரைத் 'தேர்வு' பண்ணியுள்ளார்கள். இது அவர்களின் PROவின் பகுதி. அரசியலைப் போலவே காவல்துறையின் நடவடிக்கைகளிலும் சினிமாத்தனம் மிகுந்துவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.