மணிரத்னத்தின் திரைமொழியின் அழகியலில் 'சுற்றுத்துறை விளம்பரப்படத் தன்மை' உண்டென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதை நான் அண்மையில் ரோஜா படத்தின் "சின்னச்சின்ன ஆசை"பாடலைத் திரும்பப் பார்க்கையில் உணர்ந்தேன். அதாவது ரோஜாவின் அக உலகத்தில் வரும் கிராமம் அல்ல அது. வெளியே இருந்து பார்ப்பவருக்காக கிளர்ச்சியூட்டப்பட்டு அந்நியப்படுத்தப்பட்ட (exociticized) பிம்பங்கள் அவை. "ஒரு வெள்ளை மழை" பாடலும் அப்படித்தான். அது தன் மனைவிக்கு பனிவெளியை நாயகன் காட்டுவதாகத் தான் ஆரம்பிக்கிறதே. அப்படியே பார்வையாளர்களுக்கு காஷ்மீரை மணிரத்னம் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்துவதாக காட்சிகள் உருக்கொள்கின்றன. முத்தக்காட்சிகள் வழியாக அவர் காஷ்மீர் உலகை இச்சிக்கத்தக்கதாகவும் மாற்றுகிறார் (தர்காவஸ்கி எப்படிப் புறவுலகை பாத்திரத்தின் அகவுலகின் நீட்சியாகச் சித்தரிக்கிறார் என்பதுடன் ஒப்பிட்டால் இது இன்னும் துலங்கும்). அவரது மிகச்சிறந்த காட்சி பிம்பங்களைக் கொண்ட "அக்னி நட்சத்திரமும்" கூட பாத்திரத்தின் அகவுலகில் இருந்தும், உணர்வுகளில் இருந்து பார்வையாளனை வெளியேற்றி அவனை ஒரு பயணி ஒரு சுற்றுலாப் பிரதேசத்தைப் பார்ப்பதைப் போலக் காண வைக்கும் படமே. மணிரத்னத்தின் வரவுடனே சினிமா கதையில் இருந்தும், பாத்திரத்தின் உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் இருந்து துண்டிக்கப்பட்டு "வெளியேற்றப்பபடுகிறது". அத்துடன் பார்வையாளர்களும் கதைக்கும், பாத்திரத்தின் பிரச்சினைகளுக்கும் அப்பாலிருந்து காட்சிகளை ரசிக்கப் பழகுகிறார்கள். இதை ஒரு fetishism என்று சொல்லலாம் (மார்க்ஸ் சொல்வதுபடி பார்த்தால் ஒரு பண்டத்தின் மதிப்பை பணத்தின் வழியாக சந்தை வெளியேற்றி அதை நேரடி மதிப்பற்றதாக்குவது; செக்ஸில் ஒரு பெண்ணின் பாதத்தில் சுகத்தைக் கண்டு அவளது ஆளுமையை, முகத்தை நிராகரிப்பது - இதைப் போல சினிமாவை பிரதான பாத்திரத்தின் அகத்துக்கு அப்பால் ரசிப்பது.). மணிரத்னத்துக்கு இணையாக இதைத் தமிழ்ப் புனைவில் செய்தவர் என்று சுஜாதாவைச் சொல்லலாம். அதனாலே இருவரும் இணையும்போது அது பொருத்தமாக வெற்றிகரமாக அமைந்தது. அவர்கள் இருவரின் கச்சிதமும் ஸ்டைலும் 'வெளியேற்றத்தில்' இருந்தே கிளைக்கின்றன.
இன்று "சாய் வித் சித்ராவில்" இயக்குநர், விமர்சகர், திரைப்படக் கல்வியாளர் ஹரிஹரனின் நேர்முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஹரிஹரன் இதை அவதானித்ததைக் கண்டபோது ஆச்சரியப்பட்டேன். அவர் மணிரத்னத்தை பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் நுகர்வுக் கலாசாரத்தின் பிள்ளை என்கிறார். மணிரத்னம் தன் காட்சிகளை விளம்பரப்படங்களின் பாணியில் அமைக்கிறார் என்கிறார். (ராஜீவ் மேனனும் தன் படங்களில் இதைச் செய்வதைக் காணலாம்.)
அவர் மேலும் மணிரத்னத்தைப் பற்றி ஒரு ஜோக் சொன்னார். மணிரத்னத்தின் கால்ப் உதவியாளர் அவரிடம் அவரது ஆட்டத்தின் பாங்கைப் பற்றிச் சொல்கிறார்: sir, your shots are beautiful. They are great. But your direction is wrong.
ஆனால் மணிரத்னத்துக்கு இணையாக நவீன உருவகங்களை கதாபாத்திரங்களின் மன-அமைப்புக்கும், ஆளுமைக்கும் சட்டகத்தில் கொண்டு வந்து, ஒளியமைப்பின் வழியாகக் காட்டியவர்கள் அவருக்கு முன்பு அனேகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். (பாலச்சந்தரும் பிறரும் கூட அவ்வளவு புதுமையாக, நவீனமாக காட்சி மொழியை அமைக்கவில்லை.) "இருவரில்" ஆனந்தன் மொட்டைமாடியில் இருந்து கீழே பார்க்கையில் அவர் பார்வையில் விரியும் ரசிகர்களின் திரளும், மெல்லமெல்ல அவன் தன் ஆளுமையை வெளிப்படுத்துகிற விதமும் முன்பு யாரும் தமிழில் காட்டாத காட்சி. இந்த அபாரமான கற்பனைக்கு ஈடான ஐடியாக்களும் தத்துவப் பார்வையும் இருந்திருந்தால் அவர் உலகளவில் கொண்டாடப்பட்டிருப்பார். அவர் தன்னையே "வெளியேற்றிக்" கொண்டார் என்று தோன்றுகிறது.