காரண-விளைவு தர்க்கத்தை கடுமையாக மறுபரிசீலனை செய்ய முயன்ற நாவல் ஆல்பர்ட் காமுவின் “அந்நியன்”. இதில் ஒரு அட்டகாசமான ஆரம்ப காட்சி வருகிறது. மெர்சால்ட்டின் தாய் இறந்து போகிறார். அவனுக்கு செய்தி வருகிறது. ஆனால் என்று சரியாக அவர் இறந்து போனார் என்பதில் செய்தியில் இல்லை. அவனுக்கு குழப்பமாகிறது - மிக அண்மையில் இறந்து போயிருந்தால் அவனுடைய துக்கமும் மிக அதிகமாக் இருக்க வேண்டும். முன்னரே இறந்து போய் அவனுக்கு தெரியாமல் போயிருந்தால் அதற்காக மனம் உடைந்து அழ முடியாது, ஏனென்றால் காலம் செல்ல செல்ல மரணத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு நிதானமாகி விட வேண்டும் என்பதே உலக இயல்பு என்று அவன் ஒரு விளக்கத்தை அதற்கு தருகிறான். இதில் மெர்சால்ட் சுட்டிக் காட்டுவது உலக நடப்பின் அபத்தத்தை அல்ல, காரண-விளைவு தர்க்கத்தில் காலத்துக்கு உள்ள இடத்தைக் காட்டி அது எவ்வளவு அபத்தமானது என்று அவன் நம்மை நோக்கி எள்ளி நகையாடுகிறான். நாவல் முழுக்க காமு மெர்சால்ட்டின் நடவடிக்கைகளில் ஒரு தர்க்க ஒழுங்கு இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார், அதுவே அவனை அபத்த நாயகனாக்குகிறது. அவன் தன் மரணத்தறுவாயிலும் மனம் வருந்துவதில்லை. ஆனால் இவ்வளவையும் செய்யும் போது அன்றாட நிகழ்வுகளின் போக்கில் ஆல்பர்ட் காமு ஒரு காரண-விளைவு சங்கிலியை தக்க வைக்கவே செய்கிறார் - அம்மா காலமானது குறித்து அவனுக்கு வரும் கடிதமே அவனுடைய வாழ்வின் அடுத்தடுத்த செயல்கள் நிகழ துவக்கப் புள்ளியாகிறது; ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வதான வழக்கமான கதை உத்தியை தான் காமுவும் பயன்படுத்துகிறார். ஒரே வித்தியாசம் மெர்சால்ட்டின் பார்வையில் எந்த சம்பவங்களுக்கும் காரண-விளைவு சார்ந்த ஒரு அர்த்தம் இல்லை. காமு தன் நாவலின் நிகழ்வுகளை காரண-விளைவு தர்க்கப்படி அடுக்கி விட்டு மெர்சால்ட்டின் பார்வையில் அவற்றை மீள்நோக்கு செய்யும்படி நம்மைக் கோருகிறார். இந்த நுட்பமான உத்தியே நாவலின் வெற்றிக்கு “காரணம்”.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share