யுடியூப் திரை விமர்சகர்கள் கலந்துகொண்ட இந்த வார "நீயா நானா" ஜாலியாக இருந்தது. அதில் திரைத்துறையினர் பக்கமிருந்து ராஜசேகர் என்பவர் பேசியதை மிகவும் ரசித்தேன். யுடியூபர் பிரஷாந்த் தன்னை இப்படி ஒரு நட்சத்திர நடிகரை விமர்சித்ததற்காக ஒரு கும்பல் ஆறுமாதங்கள் போனில் துன்புறுத்தியதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த ராஜசேகர் ஒரு படம் வெளியானதும் அதை யுடியூபர்கள் கழுவிக்கழுவி ஊற்றுவதால் யாரும் படம் பார்க்கவே வருவதில்லை, அதனால் நஷ்டமாகிட கோபம் கொள்ளும் தயாரிப்பாளர்கள் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள் என்றார். இங்குதான் காமிடி ஆரம்பமானது: பிரசாந்த் "அதுக்காக ஆள் வைத்து மிரட்டுவீங்களா?" என்றார். அதற்கு இவர் "அடங்க மாட்டேங்குறாங்களே சார், என்ன பண்ண?". உடனே பிரசாந்த் "அடங்கலைன்னா ஆள் வச்சு மிரட்டுவீங்களா?" "என்ன சார் பண்ண அடங்க மாட்டேங்கிறாங்களே..." நடுவே கோபிநாத் ஆள் வைத்து மிரட்டுவது சட்டப்படி குற்றம் என்றெல்லாம் எச்சரிக்கிறார். அந்த நபர் மறையாப் புன்னகையுடன் இருக்கிறார்.
இப்படியெல்லாம் மனம் திறந்து பேசுபவர்கள் அரிதாகத்தான் நீயா நானாவில் வருவார்கள். பெரும்பாலானவர்கள் பள்ளிக்கூடத்தில் ஒழுக்கவகுப்பில் ஆசிரியரும் மாணவரும் உரையாடுவதைப் போலத்தான் கௌரவமாகப் பேசுவார்கள் ('உலகின் சிறந்த பண்பு ஒழுக்கம், பொய் சொல்லாதிருத்தல், அன்பாகப் பேசுதல். தம்பி நீ சொல்லு, உலகின் சிறந்த பண்பென்ன?' 'அன்பா பொய் சொல்லாம இருக்கிறது சார்').
நமக்கு இன்னும் அதிகமாக ராஜசேகர்கள் தேவை