பம்பரத்தைச் சுற்றிவிட்டதைப் போல விர்ரென நின்றபடி ஓடும் திரைக்கதைதான் இப்படத்தின் வலிமை. இடைவேளைக்குப் பிறகு தண்ணீர் குடிக்கணும், பாத்ரூம் போகணும் எனும் நினைப்பை ஒவ்வொரு கணமும் மறக்கடித்து ஒட்டுமொத்தமாக ஒண்ணும் வேணாம் போ என உட்கார வைத்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த பரபரப்பான திகிலான திருப்பங்கள், பதற்றத்தின் எல்லைக்கே கொண்டு போகும்படி இழுத்துப்போகும் காட்சியமைப்புகள்.
அதன்பிறகு நிமிஷா சஜயனின் அபாரமான நடிப்பு. நிமிஷா இதன் துவக்கத்தில் மனநலப்பிறழ்வை கோமாளித்தனமாகக் காட்டும்போது ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை காணாமல் போனபிறகு அவரது நடிப்பு இன்னொரு தளத்துக்குப் போகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒரு பெண்ணின் உடல்மொழியில் வரும் மாற்றங்களை அபாரமாக கண்ணாடிபோலப் பிரதிபலிக்கிறார். அவரது கண்கள், பளிச்சென்று சிரிப்புக்கு மலரும் முகம், சட்டென்ற சோர்வில் வாடும் மலரைப் போன்ற பாவனைகள், சின்னச்சின்ன மாற்றங்களை அடுத்தடுத்து காட்டும் பாங்கு - அசத்துகிறார். ஆனால் அதேநேரத்தில் "பார்ரா நான் நடிக்கிறேன்" எனும் மிகையும் உள்ளது. "உணர்ச்சிவசத்த அடக்கு, அது பக்கத்து தெருவில ஒரு தங்கச்சி தன் அண்ணனைக் கூப்பிடுற சத்தம்" என வடிவேலு சொல்வாரே அதைப் போல அடிக்கடி சொல்கிற ஒரு இயக்குநர் இவருக்குத் தேவை. ஆனாலும் மனதைக் கொள்ளையடித்துவிடுகிறார்.
இப்படத்தின் துவக்கத்தையும் - அதர்வாவின், நிமிஷாவின் பாத்திர வார்ப்பு - நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அதர்வாவின் பாத்திரமான ஆனந்த் தன் காதலியின் மரணத்தில் இருந்து மீளத் தெரியாமல் போதையில் ஆழ்ந்து அதிலிருந்து பயிற்சி வழியாக மீண்டுவருகிறார். நிமிஷாவின் பாத்திரமான திவ்யா யாராலும் நம்பவோ ஏற்கவோ படாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இருவருக்கும் அன்பும் ஏற்பும் தேவைப்படுகிறது. குழந்தை காணாமல் போகிற, அதைத் தேடி ஆனந்த் திரிகிற, போராடுகிற பகுதிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை ஆரம்பக் கதையுடன் - பிரதான பாத்திரத்தின் உடனடித் தேவையுடன் (want), ஆழமான அக நிறைவுக்கான தேடலுடன் (need) - பொருந்தவில்லை. குழந்தையை அவர்களுடன் வாழ்வுடன் சரியாகப் பிணைத்து முன்னெடுக்க முடியாதபடி கதையின் அமைப்பும் உள்ளது - பிறந்தவுடனே குழந்தை காணாமல் போகிறது. சொல்லப்போனால் ஆனந்தின், திவ்யாவின் கதை திருமணத்துடன் முடிந்துவிடுகிறது. இரண்டாவது கதையான குழந்தைக்கான தேடல் துண்டாகத் தனியாக நிற்கிறது. அதனாலே இப்படம் முடிகையில் சாக்லேட் சாப்பிட்டு முடித்துவிட்டு அதை இதைப் போய் ஏன் தின்றோம், இதில் உடம்புக்குத் தேவையான ஒன்றுமே இல்லையே என ஏமாற்றமடைவதைப் போல இருகிறது. ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்துவிட்டு என்னதான் படித்தோம், என்னதான் நடந்துச்சு, என்னவோ ஜாலியா டைம் பாஸாச்சு என்று பஸ் இருக்கையில் நைசாக வைத்துவிட்டு நகர்வதைப் போல உள்ளது. நெல்சன் வெங்கடேசனின் "மான்ஸ்டர்" படம் இன்னும் நன்றாக எழுதப்பட்டது. அதில் கதாபாத்திரத்தின் அகப்பயணம், நிறைவு இன்னும் சரியாகக் கொண்டு வரப்பட்டிருந்தது. எலியும் நாயகனும் பல சாகசங்களுக்குப் பிறகு கிளைமேக்ஸில் இன்னொரு இடத்திற்கு நகர்ந்து புதிய உயரத்தை எட்டுவார்கள். இரண்டு உயிர்களுமே ஒன்றுதானே எனும் விழுமியமும் (ராபர்ட் மெக்கீ சொல்கிற value) இருக்கும். அப்படி எந்த விழுமியமும் இக்கதையில் இல்லை.
சாலையில் ஒருமுறை பார்த்து ரசித்து மறந்துவிடுகிற பெண்ணைத் திரும்பப் பார்க்க நேர்ந்தால் ஏன் முதற்பார்வையில் மட்டும் அவ்வளவு அசத்தலாக இருந்தாள் என நினைக்க வைப்பதைப் போன்ற படம்.
திரைக்கதையிலும் மூலகதை உருவாக்கத்திலும் அதிஷாவின் பங்பளிப்பு எவ்வளவு எனத் தெரியவில்லை. இணை-எழுத்தாளராக கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டால் அவர் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கச்சிதமான திகில் கதைக்கான வேலையைப் பிரமாதமாகச் செய்திருக்கிறார். இதற்காக அவரும் நெல்சன் வெங்கடேசனும் எவ்வளவு மெனெக்கெட்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. அடுத்தடுத்து நல்ல படங்கள் அவருக்கு அமையட்டும்.