80 பக்க சுமாருக்கு வரும் ஒரு திரைக்கதையை செதுக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாக விவாதிக்கிறார்கள். ஒரு வருடம் போல எடுத்துக் கொண்டு திருத்தித் திருத்தி எழுதுகிறவர்கள் உண்டு. எனில் 300 பக்க நாவலுக்கு எவ்வளவு தயாரிப்புகள், உள்-விவாதங்கள் தேவைப்படும்? அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலில் சில பக்கங்களே வரும் ஒரு மாமியின் எளிய பத்திரம் கூட நாவலின் கிளைமேக்ஸுக்கு அவசியம் - சாயா எடுக்கப் போகும் முடிவென்ன எனும் கேள்விக்கு செறிவு கூட்டுவதாக இருக்கும் - எனும் போது சின்னச்சின்ன விசயங்களைக் கூட அவ்வளவு கவனமாய் சிந்தித்து உள்ளே பொருத்த வேண்டும். இந்த நேர்த்தி சிலருக்கு இயல்பாகவும் சிலருக்கு அனுபவரீதியாகவும் அமைகிறது எனப் பார்க்கிறேன். ஆனால் கதை எழுதியே பழகாத ஒருவருக்கு இது எப்படி சாத்தியமாகும்? எல்லாராலும் ஒரு நாவலாவது எழுத முடியும் என்பது சரியா? சரி தான் - சில முதல் நாவல்களில் வடிவ ரீதியாகவே பல விசயங்கள் சரியாக அமைந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கிரியேட்டிவ் எடிட்டர் இருந்தால் சில எளிய பிழைகளைக் கண்டுகொண்டு திருத்தி எழுதி இன்னும் செறிவுபடுத்த முடியும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share