எனக்கு ஒரு விசயத்தில் சினிமாக்காரர்கள் மீது பொறாமை உண்டு - நாம் ஒரு நாவலை எழுதிவிட்டு அதைச் சநதைப்படுத்த தனியாக போராடிக்கொண்டு இருக்க வேண்டும். எதாவது இலக்கிய அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சிறிய வட்டத்துக்குள்தான் அது நிகழும். ஆனால் ஒரு சிறிய படமென்றாலும் அதற்கான புரொமோஷனுக்கு 30-50 லட்சங்களையாவது அவர்கள் செலவிட்டு கலாட்டா, சன் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் தொடர்ச்சியாக பேட்டியளிக்கிறார்கள். அனேகமாக எல்லா பத்திரிகைகளும் அதைச் சந்தைப்படுத்த உதவுகின்றன. கூடுதலாகச் சமூகவலைதளங்களிலும் சினிமா செய்திகளுக்கு கவனம் அதிகமாகக் கிடைக்கும். கூடுதலாக சொச்சம் பணமிருந்தால் யுடியூப் வாயர்களையும் விலைக்கு வாங்கலாம். இந்தச் சந்தைப்படுத்தல் செலவை பட்ஜெட்டில் இன்று உட்படுத்துவதால் பி.ஆர்.ஓ மூலம் அடுத்தடுத்து ஒருங்கிணைத்து விடுகிறார்கள். கூடுதலாக, இசை வெளியீடும், பாடல்களும் பெரிய விளம்பரம் - எப்படியெல்லாம் எல்லார் காதிலும் நுழைந்துவிடும். இதெல்லாம் நடந்து படம் ஓடினால் இலக்கிய பத்திரிகைகளும் பாராட்டி எழுதுவார்கள். இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தி மாலை சூட்டுவார்கள். படம் ஓடினாலும் இல்லாவிட்டாலும் இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கும். ஒருவர் தினமும் தனியாரில் போய் ஆடுமாடு மேய்த்து 5-10 ஆண்டுகளில் சம்பாதிக்கும் பணத்தை இவர்கள் நாற்பது நாட்களில் சம்பாதிப்பார்கள். (புகழெல்லாம் சொல்லவே வேண்டாம்.) என்னதான் படமெடுப்பதும், முதலீடு பெறுவதும் சவால்தான் என்றாலும் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.
ஒரு எழுத்தாளர் புத்தகத்தை எழுதி அது நன்றாக விற்று அவர் கையில் பணம் வரவே சில ஆண்டுகள் ஆகும். அதை வைத்து ஒரு பயணம் போகவோ நாலு நாள் நன்றாகச் சாப்பிடவோ முடியாது (சுதந்திரமாக விருப்பப்படி எழுத முடியும் என்பதைத்தாண்டி எதுவுமே இல்லை.) அதுவும் தமிழ்நாட்டில்.
ஒரு இயக்குநரோ நடிகரோ நினைத்தால் துணை முதல்வரையோ முதல்வரையோ நேரில் சந்திக்கலாம். வேண்டுகோள் வைக்கலாம். ஒரு எழுத்தாளர் நினைத்தால் - டிரம்ப் அளவுக்கு பயங்கரமான தொடர்புவலைகள் இல்லாதபட்சத்தில் - ஒரு அமைச்சரைக் கூட சுலபத்தில் பார்க்க முடியாது.
எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாக்காரர்களுக்கு பயங்கரமாக டப் கொடுப்பவர்கள் யுடியூப், இன்ஸ்டா பிரபலங்களே. எதிர்காலத்தில் அவர்கள் சினிமா பிரபலங்களின் இடத்தை எடுத்துக்கொள்ளவும், கட்சி ஆரம்பித்து எம்.பி ஆகவும் கூடும். தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இப்படித்தான் இருப்பார்கள்.
நேற்று மெக்ஸிக எழுத்தாளர் அக்டாவியோ பாஸ் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் அவரது கட்டுரை நூல் ஒன்று வெளியான போது பத்து மில்லியன் பிரதிகள் விற்றது என்கிறார்கள். ஸ்பானிய மொழிக்காரர்கள் எவ்வளவு அறிவுக் காதல் கொண்டவர்கள் எனில் இவ்வளவு பெரும் தொகையில் ஒரு கட்டுரை நூல் அங்கு விற்க வேண்டும். நம் ஊரில் கோபிநாத்தாலும் திரைநட்சத்திரங்களாலும் மட்டுமே அது இயலும். இலக்கிய வாசிப்பு, பண்பாட்டு நாட்டத்தைப் பொறுத்தமட்டில் நமக்கு ஏதோ மரபணுக் கோளாறு உள்ளது.
எனக்கென்னமோ போன ஜென்மத்தில் நல்வினைகள் நிறைய செய்தவர்கள் இப்பிறவியில் சினிமாக்காரர்களாகிப் படமெடுக்கிறார்கள் என நினைக்கிறார்கள். போன ஜென்மத்தில் கேடு கெட்டவர்களாக இருந்தவர்களோ இலக்கிய வெறியுடன் தமிழ்நாட்டில் பிறந்து ...