நாவல் எழுதுவது கடும் நெருக்கடிக்கு ஆளாக்கும் ஒரு சவாலும் தான். அதாவது எழுதும் அனுபவம் அல்ல, எழுதுவதற்கு முன்பும் பின்புமான நேரம் நாவலைக் குறித்து கவலையுறுவது, யோசிப்பது, பரிசீலிப்பது, அஞ்சுவது என. சிலர் இந்த நெருக்கடி தாளாமலே எழுதுவதை தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பார்கள். Writer’s block எனப்படும் மனத்தடைகள் ஏற்படும் போது இன்னும் அவஸ்தையாகி விடும். நான் ஒரு நாவலை எழுதும் போது பகல் வேளைகளில் மோசமான மனநிலையில் இருப்பேன். யார் மாட்டினாலும் கடித்து துப்பலாம் என நினைப்பேன். வேலைக்கு செல்லும் போது அங்கு கவனம் சிதற, வேறு விசயங்களில் ஈடுபட முடியும் என்பதால் உணர்ச்சி வடிகால்கள் இருக்கும். ஆனால் வீட்டிலோ என்னருகே இருப்பவர்கள் பாடு திண்டாட்டமே. இரவில் ஒன்றிரண்டு மணிநேரங்கள் நாவலில் வேலை பார்த்த பின் நிம்மதியாகி இனிமை திரும்பி விடும். அடுத்த நாள் விடிந்ததும் நாவல் குறித்த கவலைகள் ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு நாவலாசிரியனுக்கும் அவனுக்கான மனச்சிக்கல்கள் எழுத்து சார்ந்து இருக்கும். ஆகையால் எந்தளவுக்கு இது மகத்தான அனுபவமோ அந்தளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிக்கும் அனுபவமும் தான். நான் பல்கலையில் நாவல் கலையை ஒரு மாலை நேர வகுப்பாக எடுத்த போது என் வகுப்பில் இருந்த நாற்பது சொச்சம் மாணவர்களில் தீவிரமாக நாவல் எழுதத் தொடங்கியவர்களில் சிலர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் பயங்கள், கவலைகளை என்னிடம் கொட்டித் தீர்க்க வந்து விடுவார்கள். அவை எழுத்துக்கு புறம்பான அவஸ்தைகள் என அறிவேன். ஆனால் அவற்றைக் கையாளாமல் தினமும் எழுதவும் முடியாது. ஒரு இளைஞன் ஒரு நாயைப் பற்றின சிறிய நாவல் ஒன்றை எழுதி வந்தான். வாரத்துக்கு மூன்று நாட்களாவது நாங்கள் அந்த கற்பனையான நாயைப் பற்றி சில மணிநேரங்கள் உயிர்போகும் பிரச்சனை எனும் கணக்கில் விவாதிப்போம். நான் சில நேரங்களில் இவ்விவாதத்தை தொழில்நுட்பம் நோக்கித் திருப்புவேன் - நாவலின் களம், காட்சிகளின் தொகுப்பு பற்றி பேசக் கேட்பேன். ஆனால் இவற்றின் அடியாழத்தில் அவர்களை அலைகழிப்பது எழுதும் போது நிகழும் நிலையாமை குறித்த கவலைகளே என அறிவேன்.
நாவலை எழுதி முடிப்பதில் சிரமப்படுபவரா நீங்கள்? என் ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.
