ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியலைமைப்புச் சட்டநூலை வைத்து செய்த பிரச்சாரம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது அதைப் போல தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கடந்த தேர்தலில் பாஜக வென்றது போலி வாக்காளர்களை கோடிக்கணக்கில் உருவாக்கி ஓட்டுக்களைத் திருடியா என்று அவர் எழுப்பும் கேள்வி மக்களிடம் ஏற்கனவே உள்ள சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது. என்னைச் சுற்றிலும் பலரும் அதை விவாதிப்பதைக் காதால் கேட்கிறேன்.
ஏதோ ஒரு முறைகேடு நடந்துள்ளது என்பது நிச்சயம். ஆனால் அதன் பரப்பும் வீச்சும் என்ன என்பதை தேர்தல் ஆணையம் தரவுகளை பொதுவில் வைத்தால் மட்டுமே ஆய்வு பண்ணிக் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேன் செய்ய முடியாத காகிதங்களை பக்கம்பக்கமாக அலசி இந்த தரவுகளை ராகுலின் குழு எடுத்திருப்பதே இமாலய சாதனைதான். நியாயமாக இதை நம் ஊடகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் பாஜாவின் மசாஜ் பார்லர் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
எனக்கு ஒரே ஒரு விசயத்தில் மட்டுமே மாற்றுக் கருத்து உள்ளது: தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதை உறுதிபண்ண குற்றம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது எனக் கேட்க வேண்டும். குற்றத்தின் மூலம் ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரமே. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்தே ஒன்றிய அரசுகள் எந்த accountabilityயும் இல்லாத கிட்டத்தட்ட சர்வாதிகாரங்களாகவே உள்ளன. எதிர்காலத்தில் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையத்தைத் தம் கைப்பாவைகளாக நடத்தமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?