இந்தக் கடைசி டெஸ்டில் இந்தியா வெல்லுமோ தோற்குமோ பிரமாதமாகப் போராடியிருக்கிறார்கள். ரோஹித், கோலி விடைபெற்ற பின்னர் வெளிநாட்டுக்குப் போய் ஆடும் இளம் அணி. இளம் தலைவர். பும்ராவின் உடற்தகுதியின்மையால் அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சு அணி. காம்பிருக்கும் மூத்த வீரர்களுக்குமான மோதலால் உருக்குலைந்த அணி. இந்தத் தொடரில் மீண்டு வந்து ஒருமையான நோக்கத்துடன், லட்சத்துடன் ஆடுகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் கற்றுக்கொண்டு போராடி மேலே வருகிறார்கள், தோற்கிறார்கள், திரும்ப வருகிறார்கள். கடைசிவரையிலும் ஆட்டத்தில் இருப்போம் என்கிற இந்த ராக்கி ஸ்டைல் இந்த குத்துச்சண்டை அணுகுமுறை பாராட்டத்தக்கது. விமர்சகர்கள் தொடர்ந்து செய்யும் ஒரே அங்கலாய்ப்பு ஏன் அணித்தேர்வு இவ்வளவு சமனற்று இருக்கிறது என்பதே. இந்தக் கடைசிப் போட்டியில் கூட கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை எடுத்திருக்க வேண்டும். அது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையையும் சமநிலையையும் கொடுத்திருக்கும். ஆனாலும் ஏன் இத்தவறை தொடர் முழுக்கச் செய்திருக்கிறார்கள்?
முழுமுதற் காரணமாக எனக்குப் படுவது மட்டையாட்டத்தின் மீதுள்ள அவநம்பிக்கை. ஆனால் இங்கிலாந்தை விட அதிக ரன்களைக் குவித்தவரக்ள் நம் மட்டையாளர்கள் அல்லவா? ஆம், ஆனால் இங்கிலாந்தின் துவக்க வீரர்களும், எண் 4இலிலும் 5இலும் ஆடும் ரூட், புரூக் போன்றவர்கள் தொடர்ச்சியாக அடிக்கிறார்கள். அவர்கள் இந்தத் தொடரில் அல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ரன் அடிக்கிறார்கள். இந்த தொடர்ச்சி தரும் நம்பிக்கை இந்தியாவின் மட்டையாட்டத்தில் இல்லை. அம்மாவும் அப்பாவும் இல்லாதபோது சிறுகுழந்தைகள் வீட்டைப் பெருக்கு, சமைத்துப் பார்த்துக் கொள்வதைப் போலத்தான் அவர்கள் மட்டையாடுகிறார்கள். இன்று ஜெய்ஸ்வாலும் ராகுலும் அடிப்பார்கள், ஆனால் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சொதப்புவார்கள், எண் 3இல் இன்னும் ஒரு சரியான மட்டையாளர் அமையவில்லை. பண்ட் நன்றாக ஆடிவந்தாலும் அவரது காயம் ஒரு பின்னடைவு. ஆகையால்தான் அவர்கள் ஆட்டவரிசையை 8வது எண் வரை நீட்டிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்தியா 8 மட்டையாளர்களை ஆடுவது 5 பேர்களை ஆடுவதற்குச் சமம். இங்கிலாந்து 7 மட்டையாளர்களை ஆடுவது 6 பேர்களை ஆடுவதற்குச் சமம். ஸ்டோக்ஸ் இல்லாதபோது கூட அவர்களது மட்டையாட்டத்தில் ஒரு திடத்தன்மை உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் நாம் லாக் டவுனுக்கு சற்று முன்பிருந்தே மத்திய வரிசையில் குடிகாரர் நடுரோட்டில் நடப்பதைப் போலத்தான் ஆடி வருகிறோம். ரஹானே, புஜாரா, கோலியின் ஆட்டநிலைக் கோளாறு நாம் 5-7 வரையிலான மட்டையாளர்களை நம்பியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது. அதைச் சரிசெய்ய இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனாலே 4 வேகவீச்சாளர்களை கோலி ஆடியபோதும் அஷ்வினை அவர் ஆடவில்லை, ஜடேஜாவையே தொடர்ந்து தேர்ந்தார். அதன்பிறகு ரோஹித்தும் இப்பிரச்சினையை எதிர்கொண்டார். இளம் மட்டையாளர்களால் மத்திய வரிசையில் சோபிக்க முடியவில்லை. இப்போதுதான் ஜடேஜா, வாஷிங்டன் சதங்களுக்குப்பிறகு, பண்டும் மீண்டு வந்த நிலையில் நமது 5-7 எனும் பின்வரிசை தொடர்ச்சியான நம்பத்தகுந்ததாக மாறிவருகிறது. கில் இத்தொடரில் நன்றாக மட்டையாடியுள்ளதைப் பார்க்கையில் 4வது எண்ணும் நம்பிக்கையளிக்கிறது. 3வது எண்ணும் துவக்க மட்டையாளர்களுமே பிரச்சினை. என்னதான் ராகுலும் ஜெய்ஸ்வாலும் நன்றாக ஆடுவதாகத் தோன்றினாலும் பழைய சேவாக்-கம்பீர் போல ஆபத்தான துவக்க வீரர்கள் அவர்கள் அல்லர். முரளி விஜய்யைப் போலக்கூட இல்லை. ஷிவாங்கி பாட்டுப் பாடுவதைப் போலத்தான் அவர்களின் மட்டையாட்டம் - ஆடுகிறார்கள், ஆனால் அது ஆட்டமா என்றால் இல்லை. ரன் அடிக்கிறார்கள், ஆனால் நிச்சயமாக வெளுத்து வாங்குவார்களா என்றால் இல்லை. திடீரென 0-2 என்று பொலபொலவெனப் போய்விடுவார்கள். இந்தியாவின் மட்டையாட்டம் ஒழுங்காக ரன் அடிக்கும்வரை இந்தியாவால் வெளிநாட்டில் 5 பந்துவீச்சாளர்களை ஆட முடியாது.
ஏனென்றால் மட்டையாட்டம் சொதப்பினால் நம்மால் 4-5வது நாட்களுக்கு ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது.
அடுத்து நம் வேகவீச்சாளர்களிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் 4வது வேகவீச்சாளர் யாருமில்லை. அதாவது பும்ரா ஆடவில்லை எனில். இங்கிலாந்திடம் இவ்வளவு வேகவீச்சாளர்களைக் காயம் காரணமாக விடுவித்த (ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், கார்ஸ், வோக்ஸ்) பின்னரும் 2 நல்ல வேகவீச்சாளர்கள் தெரிகிறார்கள் - டங் மற்றும் ஆட்கின்ஸன். ஆனால் இந்திய அணியில் சிராஜ், ஆகாஷ் தீப் காயம் காரணமாக மேலும் விலகினால் யார் இருக்கிறார்கள்?
எங்கள் ஊரில் ஒரு சிறிய ஓலைக்கூரை ஓட்டல் உண்டு. முன்பு அங்கொரு வினோதமான சம்பவம் நடந்தது. காலையில் எல்லாரும் அங்கு புட்டும் பழமும் சாப்பிடப் போவார்கள். பழைய சமையற்காரர் விலகி புதிய சமையற்காரர் வந்தார். அவருக்கு புட்டு மாவில் எவ்வளவு ஈரப்பதம் வேண்டும் என்று தெரியவில்லை. அல்லது வேறாதாவது கோளாறா என்று தெரியவில்லை. பரிசோதனைகள் பண்ணிக்கொண்டே இருப்பார் என்பதால் அவரது புட்டு ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். சில நாட்களில் எப்படியோ நன்றாக இருந்துவிடும். ஒருநாள் அங்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்க மிஸைல் வேவப்பட்டதைப் போலச் சத்தம் பின்பக்கமிருந்து வந்தது வந்தது. ஆவி வெளிவராமல் வெடித்து புட்டுக் குழல் பறந்து மேலே போய்விட்டது. ஊரே இதை வேடிக்கை பார்த்தது. ஆனாலும் சமையற்காரர் கவலைப்படவில்லை. அடுத்தடுத்து புட்டுக்களாக இறக்கிக்கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் "எவம்பிலே யெவன்?"என்று வியந்தார்கள். இந்திய டெஸ்ட் அணியின் மட்டையாட்டம், பந்துவீச்சு எல்லாம் இப்படித்தான். சிலநேரங்களில் ஒழுங்காக தட்டுக்கு வரும், சிலநாட்களில் புஸ்வாணம் போல பறந்துவிடும்.
மீண்டும் சொல்கிறேன்: இப்போட்டியில் இந்தியா வென்றாலும் தோன்றாலும் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அபாரமாக ஆடியிருக்கிறார்கள்.