நம்மூரில் தரப்படும் அடையாள அட்டைகளில் பெரும் வேடிக்கை பெயர் பதியப்படும் விதம். என் வாக்காளர் அட்டையில் முதற் பெயர், குடும்பப் பெயர் ஒட்டியிருக்கிறது, ஆதாரில் என் இனிஷியல் முன்னிலையில் இருந்தால் இன்னொரு அட்டையில் கடைசியில் இருக்கிறது. இதில் எந்த முறையையும் நம் அமைப்புகள் பின்பற்றுவதில்லை. கொடுப்பதை தோன்றினபடி பதிவு பண்ணி வைக்கிறார்கள். இவை ஒன்றுபோல இருக்காவிடில் பின்னர் நிராகரித்துவிடுகிறார்கள். MK Stalin என்பது Stalin MK என்றிருந்தால் என்ன தப்பு? அதனால் அவர் இன்னொருவர் ஆகிவிடுவாரா? ஆனால் நம்முர் ஆவணச் சரிபார்ப்பு மண்டைகளுக்கு இருவரும் ஒருவர் அல்லர். எல்லா அட்டைகளிலும் பெயரை ஒரே போல வரவழைத்தாலும் வேறு புதுப் பிரச்சினைகள் புற்றீசல் போல புறப்பட்டு வரும்.
நான் என் வருங்கால வைப்புநிதிக்காக ஆவணத்தை அளிக்கையில் ஆதாரமாக ஆதாரைக் கொடுத்தேன். அதில் மேற்சொன்ன காரணத்துக்காக என் பெயரை மாற்ற வேண்டி வந்தது - அதாவது இனிஷியலை முன்பிருந்து பின்பாக மாற்றினேன். ஆனால் இணையதளத்தைக் கட்டமைத்தவர்கள் மென்பொருளே தாமாகத் தேடி பெயர் மாற்றங்கள் இருப்பின் தடைசெய்யும்படி அமைத்திருக்கிறார்கள். எனக்கு இது ஆரம்பத்தில் தெரியாது. வைப்புநிதியைப் பணத்தேவையின் பொருட்டு எடுக்க முயன்றால் பயனர் அடையாளப பெயர் தப்பு எனக் கூறியது. அலுவலகங்களில் முன்னும்பின்னுமாகப் பந்தாடப்பட்ட பின்னர் இந்த உண்மை சொல்லப்பட்டது. இதைச் சரிசெய்ய இன்னொரு ஆவணத்தை - விண்ணப்படிவம், சான்றாதாரங்கள் - தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் சரியாகவில்லை.
அரசின் பொதுக் கணக்கில் நம் வைப்பு நிதியைச் சேமிப்பதன் பிரச்சினை இது. இதற்குப் பதிலாக ஊழியர்களின் ஒரு தனியான நிலை வைப்புக் கணக்கில் இந்நிதியை அரசும் (சம்பளத்தில் 1.16%) தனியார் நிறுவனங்களும் (12%) நாமும் (12%) போடும்படி வைத்தால், அதற்கு ஒரு லாக் இன் காலமும் இருக்கையில் இதைவிடச் சுலபமாக இருக்கும். நாம் அரசு நிறுவனங்களில் அலைய அவசியம் இருக்காது. ஆவணங்களின் சுழல்வட்டப் பாதையில் சிக்க வேண்டியிருக்காது. நம் பணத்தை யாரும் திருடவும் முடியாது. இவர்கள் கொடுக்கிற பிச்சைக்கார 1.16% ஏன் இவ்வளவு பாதுகாப்பு, தடையுத்தரவு, ஆவணத் தாக்கல் பந்தா எல்லாம்? நீங்க கொடுக்கிற ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அலுவகம், கணினி எல்லாம் எதற்குங்க? இது அநாவசிய செலவில்லையா? மேற்சொன்ன கேள்விகள் நமக்கு இயல்பாகவே எழும் - ஆனால் அரசுக்கு இது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள ஒரு வழி.
"வரவு எட்டணா செலவு பத்தணா" படத்தில் அப்பா தன் பிள்ளைகளின் பணத்தை வாங்கிவைத்து கராறாகச் செலவு பண்ணி இல்லாத பிள்ளைகளைப் பாதுகாத்து இருக்கிற பிள்ளைகளை அடக்கி வைப்பார். ஒரு கட்டத்தில் அவர்கள் என் காசை ஏன் உன்கிட்ட கொடுக்கணும் என கொடுப்பதை நிறுத்துவார்கள். அப்போது அப்பாவின் அதிகாரம் காலியாகும் (அதன்பிறகு பிள்ளைகளின் சீரழிவைக் காட்டி நம்மைப் பயமுறுத்துவது வேறு கதை). அரசின் அதிகாரமும் இப்படித்தான் - நம்மிடம் வாங்கி நம்மைக் கட்டுப்படுத்தி உருட்டி மிரட்டி அதிகாரம் பண்ணுவது, அதன் மீது இருப்பை நிறுவுவது. அதைத் தாண்டி (மத்திய வர்க்கத்தினருக்கு) அரசு எங்கு நிலைக்கிறது? தெரியவில்லை.