தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும்.
ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார்.
இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார்.
இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை.
நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.