தீபாவளி என்றால் ஓய்வு தினம், கொண்டாட்டம். நான் என் குழந்தைப் பருவத்தில் அப்படித்தான் மகிழ்ச்சியாக இந்நாளைப் பார்த்தேன். இந்த நாளில் எவ்வளவோ பேசலாம், படிக்கலாம், எழுதலாம், நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கலாம். உறவினர்களைச் சந்திக்கலாம். பட்டாசு வெடித்து சூழலை ஓரளவுக்கு மாசுபடுத்தி ஊரையே கதறடிக்கலாம். இதைப் பற்றி பிறரிடம் பகிரலாம். நம் வாழ்க்கை மீது உள்ள நம் கட்டுப்பாடு புலனாகும். நாம் இங்கே இவர்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் உறுதி ஒரு நம்பிக்கையை அளிக்கும். பொங்கலும், கிறித்துமஸும் கூட அப்படித்தான் (இஸ்லாமிய பண்டிகைகளை இவர்கள் இன்னும் பண்டமாக்கல் செய்யாததால் அதற்குள் நான் வரவில்லை.) ஆனால் நம் ஊடக வியாபாரிகள் தீபாவளி என்றால் தீபாவளி சிறப்பிதழ் படியுங்கள் என்று ஆரம்பித்து படம் பாருங்கள், படம் மட்டுமே பாருங்கள் என்று அதைப் பற்றி மட்டுமே யோசிக்கிற வைபவம் ஆக்கிவிட்டார்கள்.
ஏன் தீபாவளி என்றாலே படம் பார்த்துவிட்டு அதைப்.பற்றி புலம்ப வேண்டும் என ஒரு கும்பல் திரிகிறார்கள்? அதிலேயே ஒருநாள் முடிந்துவிடுகிறதே. நீங்கள் ஒன்றை செய்யக் கூடியவராக இருக்கையில் அங்கு செயலை நிகழ்த்துபவர். நீங்கள் சினிமா பார்க்கும்போது ஒரு காய்கறி. உங்களுக்கு எந்த முகமையும் இல்லை. அதனாலே அது உங்கள் வாழ்க்கையை அடிப்படையில் கொன்று விடுகிறது. அது மேலும் மேலும் உங்களை எதிலும் பங்கெடுக்க விடாமல் பண்ணி அரங்கில் அமர்ந்து பொம்மைகளைப் போலக் கைத்தட்டி சத்தம் எழுப்புபவர்கள் ஆக்குகிறது.
வெகுஜன சினிமா அடிப்படையில் நுண்ணுணர்வற்ற மந்தையை மந்தையாகவே வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எந்த நாட்டிலும் சினிமாவால் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதாக வரலாறில்லை. ஆனால் இலக்கியத்தால், எழுத்தால் ஏற்பட்டிருக்கிறது. சினிமா தரும் உடனடிப் புகழை அரசியல்வாதிகள் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லலாம். ஆனால் எதிர்த்து அடிக்கிற உணர்வு அது தராது, அது ஒருவரைப் போராடவோ செயல்படவோ வைக்காது. அப்படி எண்ணி மயங்க மட்டும் வைக்கும்..அது அறிவையும் நுண்ணுணர்வையும் தராது, அவை இல்லாமல் இருப்பதைக் குறித்து கும்பல் மனநிலையில் சிலிர்க்க வைக்கும். இதனாலே வெகுமக்கள் சினிமாக்காரர்கள் அரசுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். நூல்கள் தடை செய்யப்படுவதில் நூறில் ஒரு மடங்கு கூட வெகுஜன சினிமாக்கள் தடைசெய்யப்படுவதோ, இலக்கியவாதிகள் அளவுக்கு அவர்கள் கைதாவதோ உலகம் முழுக்க இல்லை. அரசு எப்போதுமே சினிமா கலைஞர்களைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் படைப்பாளிகளை அஞ்சுகிறது - நீங்கள் இப்போதுகூட பயங்கரவாத ஆதரவு நூல்களை வைத்திருந்ததாகச் சொல்லி போராளிகள் மீது அரசு பொய் தேசத்துரோக பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்க்குகள் போடுவதைப் பார்க்கலாம் - ஆனால் விஜய், அஜித், ரஜினி, கமல், சினிமாப் படத்தை போனில் வைத்ததற்காக கைது பண்ண மாட்டார்கள் - இத்தனைக்கும் இவர்கள் படங்களில்தாம் நிமிடத்துக்கு நூறு புரட்சிக் கருத்துக்கள் பேசப்படும், ஆபாசத்துக்கு வெகு அருகில் செல்லக்கூடிய விசயங்கள், சாதி வெறுப்பைத் தூண்டும் சங்கதிகள் ஏராளமாக இருக்கும்.
பெருமாள் முருகனைத் தடை செய்யப் போராடினார்களே, ஏன் ஊர்ச்சடங்குகளை வைத்து என்னென்னமோ படமெடுத்தவர்களை இம்மக்கள் எதிர்க்கவில்லை? சல்மான் ருஷ்டிக்கு பத்வா விதித்து அவரைக் கத்தியாலும் குத்தியவர்கள் மணிரத்னத்தை சும்மா மிரட்டியதுடன் ஏன் விட்டார்கள்? ஏனென்றால் சினிமா ஒருபோதும் status quoவை (இயல்பெனக் கருதப்படும் அதிகார நிலையை) எதிர்க்காது. இம்மியும் விலகிப் பேசாது. ஆனால் அவ்வாறு செய்வதாக பாவனை செய்து யாரையும் அதைச் செய்யவிடாமல் பண்ணும். அதனாலே ஊடக முதலாளிகளும் அரசும் சினிமாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் - சில எழுத்தாளர்களைப் பணத்தையும் அதிகாரத்தையும் காட்டிப் பணிய வைக்கலாம். அப்போது ஒரு சிலராவது உண்மையைப் பேசுவார்கள். சினிமாக்காரர்கள் ஒருபோதும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். எப்போதும் அதிகாரமும் பணமும் பாயும் திசையிலே சாய்வார்கள் (காலனிய அடிமைக்காலத்தில் நாடகக் கம்பனிகள் அப்படித்தான் இருந்தார்கள் என்பது வரலாறு.) இந்தியா முழ்க்க இத்தனை மொழிகளும் அதில் பல லட்சம் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதுவரை மோடியை எதிர்த்து, விமர்சித்து ஒரு படமாவது எடுக்க முடிகிறதா? ஆனால் எத்தனை கவிதைகள், கதைகள், கட்டுரை நூல்கள் வந்துவிட்டன. இதுதான் வித்தியாசம் - சினிமாக்காரர்களுக்கு சமூக முன்னேற்றச் சிந்தனை, சுரணை, கவலை, அக்கறை, உயர்பண்பாட்டு விழுமியம், வாசிப்பு, கறனை, ஆய்வுத்திறன் ஒன்றும் கிடையாது. வீட்டுக்குள் எலிகள் ஓடுவதைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் சினிமாவை ஏதோ கடவுள் அவதரித்து பூமிக்கு வந்ததைப் போல புல்லரித்துப் பார்க்கிறோம் - அதற்காக நம் சிறந்த நாட்களை வீணடிக்கிறோம், அதில் நம் வாழ்க்கை, சிந்தனை, உணர்வு வந்துவிடாதா என ஏங்குகிறோம். ஆனால் அது மக்களை ஜடமாக்கிக் கொண்டே வருகிறது.
ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் வெகுமக்கள் பண்பாட்டு செயல்பாடு சார்ந்ததாக இருக்கும், செயலைப் பார்த்துத் திளைப்பதாக இருக்காது. நோய்மைச் சமூகத்திலே சினிமா இவ்வளவு பெரும் இடத்தைப் பெறும். வெகுமக்கள் சினிமாவும் அடுத்து வருகிற யுடுயூப், இன்ஸ்டா பொழுதுபோக்காளர்களும் ஒழியாதவரைக்கும் நாம் ஒரு விலங்குப் பண்ணையாகவே இருப்போம். சினிமாக்காரர்கள் நம் பண்ணையை நிர்வகித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.