ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது.
தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன. தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார். அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார்.
அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது.
சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது.
எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும்.