அண்மையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு மிகவும் பிடித்த பெண் என்று பெண்ணின் ரீல்ஸைக் காட்டினார். மிகையான சிரிப்புடன் படு கவர்ச்சியாக அப்பெண் நடப்பது, குனிவது, கோலமிடுவது, ஜாகிங் போவது என பல காணொளிகள். அவரிடம் இது செய்யறிவால் உருவாக்கப்பட்டது, இப்பெண்ணே இல்லை என்று சொன்னதும் அவர் அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு என்னிடம் சிறிது நேரம் பேசவே இல்லை. இன்று இன்னொரு பக்கத்தை பேஸ்புக்கில் பார்த்தேன். இதே செய்யறிவு படைப்புகள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் நடத்துகிறார்கள். அப்பெண் பேசுவது, பாடுவது, ஆடுவது என காணொளிகள். வேறேதோ பக்கத்தில் இருந்து எடுத்த இளம்பெண்ணின், வயதான பெண்ணின் படங்களுடன் இதையும் இணைத்து குடும்பச் சித்திரங்களையும் பதிவேற்றியிருந்தார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள், காணொளிகளுக்கு அதைவிட அதிகம். மென்பொருளுக்கு சந்தா கட்டி இப்படியான காணொளிகளையும் பக்கங்களையும் உருவாக்கி பேஸ்புக்கில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். சில நிமிடங்களில் முடிகிற காரியம். அதில் ஒரு வருமானம். இதை உண்மையென நம்பி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா, இதுதான் என் எண், என்னை அழைக்க மாட்டாயா, இன்னும் ஒழுங்காக ஆடையணியலாமே, அண்ணன் சொல்கிறேன் கேள் பாணி கமெண்டுகள். இவர்கள் பைத்தியமா இல்லை இதுவும் ஒருவித பொழுதுபோக்கா எனத் தெரியவில்லை.
இப்படித்தான் முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படங்களைத் தரவிறக்கி அவருக்கு அம்புஜா சிமி எனப் பெயரிட்டு ஒரு பேக் ஐடியை நடத்தினார் நெல்லையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். இப்பெண் கேரளாவில் ஒரு சேனலில் பணிபுரிந்ததாக தொனிக்கும்படி படங்களும் குறிப்புகளும் அவரது எழுத்தில் இருக்கும். ரொம்ப முற்போக்காக, பெண்ணியமாக சட்டையபடிப் பதிவுகள். அவருக்கு நிறைய ரசிகர்கள். கடைசியில் ஒருவர் அந்தக் குறிப்பிட்ட சேனலில் உள்ளவரிடம் விசாரித்து அது பேக் ஐடி எனக் கண்டுபிடித்தார். இன்று பேக் ஐடியை உருவாக்க அந்தளவுக்கெல்லாம் யாரும் மெனக்கெடுவது இல்லை. அதை விசாரிக்கவும் முனைய மாட்டார்கள். எதெல்லாம் அப்பட்டமாயப் பொய்யெனத் தெரிகிறதோ அதையே முதல் ஆளாக நம்பி கிளர்ச்சி அடைந்தால் போதுமென இருக்கிறார்கள்.
இந்த செய்யறிவு வரும் சில ஆண்டுகளில் இன்னும் துல்லியமான நகல் காணொளிகளை உற்பத்தி பண்ணும். அச்சுஅசலாக இருக்கும். அப்போது என்னவெல்லாம் நடக்குமோ?