வெறுமனே மத்திய வரிசை மட்டையாட்டத் திறமை என்று எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்க அணி நம்மைவிட பலமடங்கு மேல். இன்று பல அணிகளிடமும் ஓரளவுக்கு நல்ல துவக்க வீரர்கள் உண்டு. ஆனால் மத்திய வரிசையின் பலமே ஒரு அணியின் வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. பிரீட்ஸ்கி பார்க்க அந்த காலத்து டிவில்லியர்ஸைப் போல இருக்கிறார். அடுத்து குட்டி ஏ.பி பிரெவிஸ். அடுத்து இரண்டு பிரமாதமான ஆல்ரவுண்டர்கள் - யான்ஸனும் போஷும் - இருவருமே 25-60 சராசரி வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார்கள். இது போக மார்க்ரமும் டிகாக்கும். கிட்டத்தட்ட எந்த இடத்தில் இருந்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறம் படைத்த வீரர்கள். இந்தியாவின் மட்டையாட்ட வரிசையை ஒப்பிட்டுப் பாருங்கள் - நம்மிடம் யாருமே இல்லை. ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என எடுத்துக்கொண்டாலும் இந்த மட்டையாட்ட ஆற்றல் இல்லை. மேலும் வயதும் அவர்கள் வசமே (இந்திய மட்டையாளர்களுக்கு ஒன்று திறமை இல்லை அல்லது கோலி, ரோஹித்தைப் போல வயதில்லை). ஆக, இதுதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் பொற்காலம். வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்ப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் அவர்கள் வராவிட்டால் ஆச்சரியப்படுவேன். டி20யில் அவர்களுடைய அணி இன்னமும் செட்டில் ஆகவில்லை என நினைக்கிறேன். ஆனால் விரைவில் இந்த அணியை வைத்தே அதிலும் மேலே வருவார்கள்.
தென்னாப்பிரிக்கா செய்கிற உருப்படியான விசயம் டெஸ்டுக்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் தனித்தனியான வீரர்களை வைத்திருக்கிறார்கள் (ஒருசிலர் இரண்டிலும் ஆடுகிறார்கள் என்றாலும்). அவர்களுடைய டெஸ்ட் மட்டையாளர்கள் டெஸ்ட் போட்டிக்காகவே ஆடுகிறார்கள் (டி20யில் இடம்பிடிக்கும் பயிற்சியாகக் காண்பதில்லை.) அவர்கள் தம் தடுப்பாட்டத்தை நம்பிப் போராடுகிறார்கள் (நெருக்கடியில் சொதப்புவதில்லை.) அடுத்து, அவர்கள் தம் பழைய இனத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொஞ்சம் நெகிழ்வாகக் கையாள்கிறார்கள். இப்போதைய அணியிலேயே மூன்று கறுப்பு / பழுப்பு நிறத்தவர்கள் தாம் (பவுமா வந்ததும் அது நான்காகிவிடும்). ஒரு போட்டியில் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தாலே அது போட்டியுணர்வு ஊக்கப்படுத்தும். இதன் நல்விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்.