குல்தீப்பை ஏன் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் ஆட வைக்கவில்லை என்று கடந்த இரு டெஸ்ட் பயணங்களின்போதும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவருக்குப் பந்து வீச பின்னர் வாய்ப்புகள் அமைந்தபோது சோபிக்கவில்லை. கடந்த ஆண்டு அவரிடம் இருந்த ஒன்று இன்று இல்லை. 2024இல் அவருக்கு ஏற்பட்ட கவட்டுப் பகுதி காயம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் காயத்திற்குப் பிறகு ஆசியக் கோப்பையில் நன்றாக வீசி நிறைய விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த ஐ.பி.எப்பில் அவரது ரன் ரேட்டும் விக்கெட்டுகளும் எதிர்பார்த்தபடிக்கு இல்லை. டெஸ்டுகளில் மே.இ தீவுகளுக்கு எதிரான மலிவான விக்கெட்டுகள் உதவினாலும் நியுசிலாந்துக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் எதிராக அவர் திணறினார். எந்த விதத்தில்?
காயத்திற்கு முன்பு குல்தீப்பின் பந்துவீச்சில் வேகமும் திருப்பமும் இருந்தது. பந்து விர்ரென்று சுழன்றது. இதுவும் அவரது பந்துவீச்சில் இயல்பாகவே உள்ள மர்மத்தையும் கொண்டு அவர் கச்சிதமான சுழலராகத் தெரிந்தார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அவர் தன் பந்தை வீசாத வலது கையை (non-bowling arm) பயன்படுத்திய விதம், ஓடிவரும் பாணியில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாராட்டினார்கள். அதன்பிறகு காயம் ஏற்பட நாம் கண்ட குல்தீப்பால் பந்தை வேகமாகப் போட இயன்றது, ஆனால் திருப்ப இயலவில்லை. இதை அஷ்வின் தன் யுடியூப் சேனலில் ஒரு உரையாடலில் குறிப்பிட்டார் - குல்தீப்பின் பந்து பெரிதாகத் திரும்புவதில்லை, எந்தப் பக்கம் அது திரும்பும் எனும் மர்மமே அவரது பலம். அதையும் கணிக்க முடிந்தால் அவரால் விக்கெட் எடுக்க முடியாது என்றார். தென்னாப்பிரிக்க ஆப் சுழலர் ஹார்மரின் பந்துகள் 5 பாகைக்கு மேல் திரும்ப, இந்திய சுழலர்களோ சராசரியாக 3 பாகையே சுழற்றினார். அதுவும் குல்தீப் மட்டும்தான் 3.5 பாகை திருப்பினார். அதனாலே மற்றவர்களைவிட அதிக விக்கெட்டுகளும் எடுத்தார். ஆனால் மட்டையாளர்கள் அவரைப் பின்னங்காலுக்குச் சென்று ஆடி அவ்வப்போது ஸ்வீப்பும் செய்யும்போது அவர் தடுமாறினார். ஏனென்றால் பந்து அதிகமாகத் திரும்பினாலே பின்னங்காலில் போய் தடுத்தாடும்போதும் பந்து எகிறும் (ஹர்பஜன், அஷ்வினை நினைத்துப் பாருங்கள்).
குல்தீப்பை விடுத்தால் ஜடேஜாவும், வாஷிங்டனும் 2.5 பாகை மட்டுமே திருப்புகிறார்கள். இன்று ரஞ்சிக் கோப்பையிலும் பந்தை அதிகமாகத் திருப்புவோர் கிடையாது. ஆக இந்தியாவின் சுழல் எதிர்காலம் இப்போதைக்கு கவலைக்கிடமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் சற்று மேலான சுழலர்கள் உள்ளனர். இதை அஷ்வின் பலமுறைகள் குறிப்பிட்டு எச்சரித்து வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே (உத்தப்பா 18 ஆண்டுகளாக என்று சொல்கிறார்) நமது ஆடுதளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக மாற்றப்பட்டது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். இப்போது சுழல் பந்தைத் திருப்பவோ ஆடவோ ஆள் இல்லை.
இதைத் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க நாம் எடுத்த முயற்சியுடன் ஒப்பிடலாம். ஆங்கில வழிக் கல்வியால் நம் மாணவர்களுக்கு சரிவர ஆங்கிலம் பேசவும் வரவில்லை, தமிழும் தெரியவில்லை. கலந்துகட்டி ஏதோ பீகாரிகளைப் போலப் பேசுகிறார்கள். (அதுவும் மத்திய, கீழ்மத்திய மாணவர்களே ஓரளவுக்காவது வட்டார வழக்கிலாவது பேசுகிறார்கள். உயர்த்தட்டினர் ரொம்ப மட்டமாகப் பேசுகிறார்கள்.) ஒட்டுமொத்தமாக அவர்களுக்குத் தாம் நினைப்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தவே தெரியவில்லை. எழுதுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.
இதுதான் அதீதத் திருத்தத்தின் எதிர்-விளைவு.