தென்னாப்பிரிக்காவின் யான்சன் மட்டையாடும்போது கவனியுங்கள் - அவர் தனக்குத் தடுத்தாடும் திறன் இல்லாததால் குச்சிகளை விட்டு ஆடுகிறார் - அதனால் அவர் பந்துகளை அவற்றின் நீளத்தைப் பார்த்தே அடிக்கிறார், திசையை நோக்கி அல்ல. அதாவது அவர் திசையைத் தன் கணக்கில் இருந்தே எடுத்து விடுகிறார். நடுக்குச்சியில் விழும்பந்து அவருக்கு ஆப் குச்சியாகவும், கால் குச்சியில் விழுவது நடுக்குச்சியாகவும் இருக்கும். இது பந்துகளை நேராகவும் மிட்விக்கெட் மேலும் தூக்கி அடிக்க சுலபமாகும். ஓரளவுக்கு கண்-கை ஒருங்கிணைப்பு கொண்ட மட்டையாளர்களுக்கு அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆட இது வெகுவாக உதவும் பாணி. எல்.பி.டபிள்யு, வைடை வெளியே எடுத்துவிடலாம். இப்படியான மட்டையாளர்களுக்குப் பந்து வீசுவதன் பால பாடமே பந்தை 5-6வது குச்சிகளில், குறைநீளத்திலோ யார்க்கர் நீளத்திலோ வீச வேண்டும் என்பதுதான். இந்தப் பாணி ஆட்டத்தைச் செறிவாகப் பயன்படுத்தியவர்கள் தோனியும், டிவில்லியர்ஸும். அவர்கள் இருவரும்கூட கேட்ச் கொடுத்தே அதிகமான முறைகள் அவுட் ஆனார்கள். இன்று அந்த இடத்தில் இருப்பவர் குட்டி ஏ.பி என அழைக்கப்படும் தெவால்ட் பிரெக்ஸிஸ். அடுத்துதான் யான்சன், போஷ் போன்ற ஆல்ரவுண்டர்கள் வருகிறார்கள். அவர்களும் இதையேதான் செய்ய முயல்கிறார்கள். தென்னாப்பிரிக்க மட்டையாளர்கள் பொதுவாகவே சுழல் பந்து முழுநீளமாக விழும்போது எ.பி.டபிள்யூவைத் தவிர்க்கும் நோக்கில் குச்சிகளைக் காட்டி நடுக்குச்சியில் இருந்தே ஸ்வீப் செய்கிறார்கள். இதை ஒரு தடுப்பாட்ட பாணியென்றே அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்றைய அதிரடி மட்டையாளர்களும் கீழ்வரிசை மட்டையாளர்களும் தோனி, ஏ.பி டிவில்லியர்ஸ், பொலார்ட் பாணியில்தான் பயிற்சியெடுக்கிறார்கள்.
ஆக, எண் 5இல் இருந்து 8 வரை தென்னாப்பிரிக்க மட்டையாளர்களுக்கு வைடாக குறைநீளத்தில் வீசுவதும் அதற்கேற்ப வைடாகத் தடுப்பாட்ட களம் அமைப்பதும் முக்கியம். இன்று இந்திய அணி தொடர்ச்சியாக மிட்விக்கெட், லாங் ஆன், பைன் லெக் வைத்தே நடுக்குச்சியில் வீசி அடி வாங்கிக்கொண்டேஇருந்தார்கள். ஹர்ஷித் ரானா வந்ததும்தான் அவர் களத்தை மாற்றி வைடாக ஒரு பந்தை வீசி பிரெவிஸைத் தூக்கினார். அதன்பிறகும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. யான்சனுக்கும் இப்படியே வீசினார்கள்.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகவே பெரும்பாலான மட்டையாளர்கள் குச்சிகளைத் தடுத்தே பந்தை ஆப் பக்கத்தில் விரட்டினார்கள். ஆகையால் பந்துகளை நேராக உள்ளே வீசுவது அவசியப்பட்டது. அப்படியான நிலையில் தோனி, டிவில்லீயர்ஸ், இப்போது பிரெவிஸ், யான்சன் போன்றோர் வந்து நேராக விளாசும்போது அவர்களுடைய வியூகம் அவர்களுக்கே விரோதமாகி விடுகிறது. இப்படியான மட்டையாளர்களின் ஆட்டத்தைப் பார்த்து ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தயாரக வருவது அவசியம். ஆனால் நம் வீச்சாளர்களால் இப்படி மட்டையாளருக்கு ஏற்ப தங்கள் திசையை மாற்ற முடிவதில்லை.
இதனால் 220க்கு ஆல் அவுட் ஆக வேண்டிய தென்னாப்பிரிக்கா கிட்டத்தட்ட 300ஐ நெருங்கிவிட்டது.
அடுத்த ஆட்டதிலாவது கற்றுக்கொண்டு வருவார்கள் என எதிர்பார்ப்போம்.