நான் என் பதின்பருவத்திலும், பின்னர் இருபதுகளிலும் வெகுவாக ரசித்தவை ஶ்ரீனிவாசன் இயக்கிய, நடித்த நகைச்சுவை, பகடிப் படங்கள். சத்தியன் அந்திக்காடு எனும் இயக்குநருடன் இணைந்து அவர் உருவாக்கிய / நடித்த "சந்தேஷம்", "நாடோடிக் காற்று", "பட்டணப் பிரவேசம்", "வரவேல்பு", "பொன் முட்டை இடுந்ந தாறாவு", "சன்மனசு உள்ளவர்க்கு சமாதானம்", ப்ரியதர்ஷனுடன் இணைந்து உருவாக்கி நடித்த "மிதுனம்", தானே எழுதி இயக்கி நடித்த "சிந்தா விஷிஷ்டயாய ஷ்யாமளா" ஆகய படங்கள் முக்கியமானவை எனக் கருதினேன். இப்போதும் மனம் களைத்திருக்கும் போது நான் அப்படக் காட்சிகளைப் பார்த்து மனம் விட்டுச் சிரிப்பதுண்டு. ஆனால் நகைச்சுவையுடன் மட்டும் அவர் நிற்கவில்லை. கொஞ்சம் ஆபத்தான இடத்துக்கு நகர்ந்து சமூக அரசியல், சமூகப் பொருளாதார பகடிகளையும் எழுதி இயக்கினார்.
நம்மூரில் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒன்று கலந்துள்ளதைப் போலத்தான் அங்கு அவரது வரிகளும். வடிவேலுவைப் போலவே அவரும் வேலை, சுய-அமைவுக்கான போராட்டங்கள், அவமானங்களை படியாக்கி, குரூரமான அனுபவவங்களை நகைத்தக்கவை ஆக்கினார். ஐக்கிய அரபு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சிறுவேலைகள் பார்த்து சம்பாதிக்கத் தவிக்கும் மக்களில் சிலரைத் தவறாக வழிநடத்தும் முகவர்கள், அவர்களால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். அவர் தம் கண்ணீர்க் கதைகளை கடிதங்களில் எழுதி அனுப்பியதை நான் படித்திருக்கிறேன். "நாடோடிக் காற்று" படத்தில் இதை ஶ்ரீனிவாசன் பகடியாக்கினார் - ஒரு முகவர் ஶ்ரீனிவாசன், மோகன்லாலிடம் சொல்வார்: படகில் ஏறி கரை தெரிந்ததும் குதித்து நீந்த வேண்டும். இல்லாவிட்டால் போலீஸ் பிடித்துவிடுவார்கள். கரை சேர்ந்ததும் அரபு உடையான அங்கியை அணிந்துகொண்டு நடந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இருவரையும் இப்படிச் சொல்லி அவர் சென்னை மெரீனா கடைக்கரையில் விட்டுவிடுவார் (இதைப் பின்னர் தமிழிலும் படமாக எடுத்தார்கள் - "கதாநாயகன்"). இதே போலத்தான் கனடாவுக்கு செவிலியாகப் போகும் பெண்களை மணம் புரிய விரும்பும் ஆண்களின் கதையும். இதையும் அவர் படமாக்கினார். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் சமூகப் பொருளாதார நிலையில் கேரள மக்கள் எதிர்கொள்ளும் பரிதவிப்புகள், அவர்களுடைய பரிதாப முயற்சிகளைப் பகடி செய்து அதை அவர்களையே ரசிக்க வைத்தார். இது குரூரம் அல்லவா?
அவர் இதைப் புரிந்துகொண்டு இப்பாத்திரங்களின் மிகையான சில கருத்துக்களை, நம்பிக்கைகளை மட்டுமே பகடி செய்தார். அதாவது எளிய மனிதர்களாக மட்டும் இவர்களை அவர் வைக்கவில்லை - பேராசை, குழப்பம், சோம்பல், அகந்தை போன்ற துர்சுபாவங்கள் கொண்டவர்களாகச் சித்தரித்து இதனால் அவர்கள் அபத்தங்களில் மாட்டித் துன்புறுவதாகக் காட்டி மக்களைச் சிரிக்க வைத்தார். அதாவது இதே கஷ்டங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை தமக்குள் மற்றமையாக்கி தம்மை நோக்கியே சிரிக்க வைத்தார். இதைப் பார்க்கும் மக்களை 'இங்கு நாம் பார்த்துச் சிரித்து நம்மை நோக்கியல்ல' என (பொய்யாகத்தான்) 'உணர' வைத்தார். அதற்காக இப்பாத்திரங்களை அவர் மனித உணர்வுகளும் சிக்கல்களும் மிகுந்த மனிதராக அல்லாமல் ஒற்றை உணர்வால், நம்பிக்கையால் நடத்தப்படும் தட்டையான பாத்திரங்களாக்கினார். இதைப் பற்றி மேலும் உரையாட ஶ்ரீனிவாசனே எழுதி நடித்த சில பாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.
"நாடோடிக் காற்றில்" வரும் தாஸன் எனும் பாத்திரம் உழைக்காமல், சீக்கிரமே வெற்றி பெற்று சுகமாக வாழ வேண்டும் என நினைப்பவர். இந்த இலக்கை நோக்கியே படம் முழுக்க அவ்ர சென்றுகொண்டிருப்பார். அவரிடம் எந்த ஒரு மாற்றமும் இராது. "வடக்குநோக்கி எந்திரம்" படத்தில் அவர் தன் தோற்றம், திறமையின்மை குறித்த தன்னிரக்கம் மிகுந்த ஒரு அச்சக உரிமையாளர். பெண்களுக்குத் தன்னைப் பிடிக்குமா, கல்யாணத்திற்குப் பிறகு தன்னை தன் மனைவி மதிப்பாளா, ஏற்றுக்கொள்வாளா எனும் கவலையால் ஆட்படும் இவர் செய்யும் பல வேடிக்கையான முயற்சிகளும், இந்தப் போதாமை ஏற்படுத்தும் மனச்சிக்கலால் அவதியுற்று, பிரமைகள் சூழ்ந்து அவர் மனநல சிகிச்சை எடுத்து மீண்டு வருகிறார், ஆனாலும் அந்த சந்தேகத்தாலே கடைசி வரைப் பீடிக்கப்பட்டிருகிறார். இப்பாத்திரத்திற்கும் மனிதத்தன்மையை ஶ்ரீனிவாசன் அளிக்கவில்லை. ஒற்றைப் புள்ளியில் ஆணியடித்து நிறுத்தினார். நாம் வடிவேலுவின் "கைப்புள்ள", "நாய் சேகர்", "நாய் சேகர்", "என்கவுண்டர் ஏகாம்பரம்" போன்றவர்களைக் காணும் போது சிரிப்புடன் சிறிது இரக்கமும் வரும். அவர்களது மானுடத்தன்மை, அவர்கள் தட்டையானவர்கள் அல்லர் எனும் எண்ணம் வரும். "வெற்றிக் கொடி கட்டு" படத்தில் வடிவேலுவின் சுடலைமுத்து பாத்திரத்துக்கு "நாடோடிக் காற்று" தாஸனை விட ஆழம் அதிகம். சுடலையின் அகந்தையானது அவரது ஆழமான தாழ்வுணர்வில் இருந்து தோன்றுகிறது, தாம் கழிப்பறையைக் கழுவி சம்பாதித்தோம் எனும் அவமான உணர்வை மறைக்கவே அவ்வளவு அலப்பறைகளையும் செய்கிறார். இந்தக் காரணத்தை வடிவேலுவின் பாத்திரங்களை எழுதியோர் வலியுறுத்தியதைப் போல ஶ்ரீனிவாசன் செய்ததில்லை.
அதே நேரம், வடிவேலுவின் பாத்திரங்களை நாம் சார்லி சாப்ளினின் படங்களுடன் ஒப்பிடுகையில் முன்னவற்றின் போதாமையைப் புரிந்துகொள்கிறோம் - சாப்ளின் நமது மிகையான சுயபோதம், கற்பிதங்கள், தான் யார் எனும் கேள்விகள், எந்திரமயமாக்கல், நகரமயமாக்கல் கொண்டு வந்த சமூகப் பொருளாதார மாற்றங்கள் நம் நடத்தையை, தன்னிலையை மாற்றும் அபத்தங்களைக் கேள்வி கேட்டார். அவரது படங்கள் ஆழமாக சமூக எதார்த்தமாகவும் ஆன்மீக வேள்வியாகவும் அமைந்தன. இதை நாம் நமது சினிமாவிலோ மலையாள சினிமாவிலோ காண்பதில்லை. நமது ரசிகர்களின், திரை எழுத்தாளர்கள், இயக்குநர்களின் வாசிப்புப் போதாமை, சிந்தனைப் போதாமை இதற்குக் காரணம் என நினைக்கிறேன். சினிமாவை மக்களை ஏமாற்றும் கலை என்றே நினைக்கிறோம். சினிமாவை மக்களின் ஆன்மாவைச் சுத்திகரிக்கும், சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசும் வடிவம் என அவர்கள் நினைப்பதோ, அப்படி நினைப்பதற்கான நுண்ணுணர்வோ அவர்களுக்கு இருப்பதில்லை.
இப்படி ஏமாற்றும் புத்திசாலித்தனம் தான் ஶ்ரீனிவாசனின் வணிக வெற்றி.
இதனால்தான் இன்று ஶ்ரீனிவாசனின் சிறந்த படங்களைப் பற்றி யோசிக்கையில் அவை மேலோட்டமான எளிய நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட 'நல்ல' நகைச்சுவை படங்கள் மட்டுமே எனும் தெளிவு கிடைக்கிறது. இதை மேலும் புரிந்துகொள்ள ஒரே ஒரு விசயத்தை எடுத்துக் கொள்வோம் -
தமிழ் சினிமாவில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் சமூகக் கோபத்தைப் பேசும் படங்களை எண்பதுகளில் எடுத்தார்கள். இதே கோபம் பின்னர் தொண்ணூறுகளில் ராபின்ஹுட் பாணி படங்களிலும், முரளி போன்றோர் நடித்த தன்னிரக்கப் படங்களிலும் இருவிதங்களில் வெளிப்பட்டது (சமூகக் கோபம் - புரட்சி - குற்றத்தைப் போற்றுதல்; தன்வெறுப்பு-ஒருதலைக்காதல்-தியாகத்தைப் போற்றுதல்). இதே காலகட்டத்தில்தான் ஶ்ரீனிவாசன் இப்பிரச்சினைகள் தன் படங்களில் மத்திய வர்க்கத்தினரின் அரசியல் விசுவாசம், இரண்டாம், மூன்றாம் கட்ட அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை, சோம்பல், அகந்தை காரணமாக விளைகின்றன என்று பேசினார். தொழில் அளவில் முதலீட்டாளர்களும், தலைவர்களுமாக எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் ஏற்படுத்தின மாற்றங்களுக்கும் மக்களின் நடத்தைக்கும் என்ன தொடர்பு, மக்கள் தம் ஆன்மாவை எப்படி எங்கு தொலைத்தார்கள் என்று அவர் பேச முயலவில்லை. (நம் காந்தியவாதிகளைப் போல) தனிமனித ஒழுக்கமே எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் என அவர் நம்பினார் என்பதை அவர் அவரது நேர்முகங்களில் காண்கிறோம். அற்பத் தேவைகளுக்காக எப்படி கூட்டுக் குடும்பம் உடைந்து அதனால் நுண்குடும்பங்கள் தோன்றி மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று அவரது படங்களில் திரும்பத் திரும்பக் காட்டினார். ஆனால் நகரமயமாக்கல்க்கும் இதற்குமான தொடர்பு, கல்விக்கும், அரசு விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததற்கும் இதற்குமான தொடர்பு, நவீன தனிமனிதவாதத்துக்கும் இதற்குமான தொடர்பு என்ன என்று அவர் சிந்திக்கவில்லை. குடும்பம் உடைவதன் நன்மையைப் பற்றியும் யோசிக்கவில்லை (அதுவும் முக்கியம்தானே). குழந்தைகள் ஒரு அபூர்வமான பொருளை எடுத்து சேற்றி இட்டு விளையாடுவதைப் போலத்தான் ஶ்ரீனிவாசன் பல முக்கியமான விசயங்களை எடுத்துப் பேசி பயனற்றதாக்கினார். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல கடந்த பத்தாண்டில் தோன்றிய சில நல்ல இளம் இயக்குநர்களின் கருத்தும்தான்.
முதிரா காலத்தின் காதலைப் போன்றவர்தான் ஶ்ரீனிவாசன். அவரை நினைத்து ரசிக்கலாம், ஆனால் முழுமையாக ஏற்கவோ ரசிக்கவோ இயலாது. அவரை நேசித்தபடியே மறுக்கிறேன்.
என் முதிரா காலத்துக் காதலான ஶ்ரீனிவாசனுக்கு அஞ்சலி.
படம்: ஓவியர், வடிவமைப்பாளர் சந்தோஷின் பக்கத்தில் இருந்து எடுத்தது.