பைக்கில் மைசூரில் இருந்து சென்னை வரைச் செல்ல வேண்டும் என்பதும் , அப்படியே குமரி மாவட்டம் வரை ஒரு நீண்ட பயணம் போக வேண்டும் என்பது என் கனவுகள். ஆனால் நண்பர்கள் சிலர் தொடர்ந்து அது கடினம், ஆபத்து என எச்சரித்தபடி இருந்தனர். நான் ஒரே நாளில் 200-250 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் ஓட்டியதில்லை என்பதால் எனக்கும் சிறிது தயக்கம் இருந்தது. உடல் சோர்ந்துவிடாதா, கவனம் பிசகாதா, முதுகு வலிக்குமா? ஆனால் இக்கேள்விகளுக்கு எல்லாம் துல்லியமான விடை தருவதைப் போல ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது.
டிசம்பர் 27 (2025) அன்று நான் ஈரோட்டுக்கு கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு விட்டேன். நானும் பல்லவியும் 26 காலை 5 மணிக்கு மைசூரில் இருந்து கிளம்பி அங்கு 12 மணிக்குள் சென்று சேர வேண்டும். பயணத்தின்போது மூன்று இடைவேளைகளை எடுக்க வேண்டும். 28ஆம் தேதி காலை 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பி அப்பகுதியில் உள்ள அணை உள்ளிட்ட இயற்கை அழகு மிளிரும் பகுதிகளில் சுற்றிவிட்டு மதியம் 12 மணி போல மைசூர் புறப்பட வேண்டும். மதியம் 4 மணிக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியைக் கடந்துவிட வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வளைகுடா இலக்கிய அமைப்பான பரணியில் இருந்து என்னை அழைத்திருந்தார்கள். அவர்களுடைய வருட இறுதி நிகழ்ச்சிக்குச் சென்று நான் பேச வேண்டும். ஒப்புக்கொண்டேன். எதிர்பாராத விதமாக அவர்கள் என்னை 28ஆம் தேதி வரக் கேட்டார்கள். அவகாசம் போதாது என்று மறுத்தேன். அவர்கள் வற்புறுத்தியதால் முயல்வதாகச் சொன்னேன். அவர்கள் தரப்பில் இருந்து விமானப் பயணம், விஸா ஆகியவற்றை தயார் செய்ய எனக்கும் அழுத்தம் அதிகரித்தது. எப்படியாவது 27ஆம் தேதி என் வேலையை மதியம் 3 மணிக்குள் முடித்துவிட்டு கிளம்பி 6 மணிக்குள் வனப்பகுதியைக் கடக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை.
பயணம் துவங்கும் முன்பே தடைகள் வரிசை கட்டிக்கொண்டு வந்தன. முந்தின தினமே வீட்டின் மீட்டர் பாக்ஸில் ஏதோ பழுது. அது எங்கள் பிரச்சினையா அல்லது குடியிருப்புச் சங்கத்தினரின் பிரச்சினையா என்று ஒரு குழப்பம். என்னதான் பிரச்சினை என்பதையும் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைச் சரி செய்வதிலே ஒருநாள் போய்விட்டதால் அடுத்த நாளுக்கான தயாரிப்புகள் தாமதாகிட நாங்கள் உறங்குவது மேலும் தாமதமாக திட்டமிட்டபடி காலையில் எழ முடியவில்லை. இது போக எனக்கு வயிற்று உபாதை வந்து அதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ரத்த சர்க்கரை குறைந்துவிட்டிருந்தது. பயண தினமன்றும் குறைவான ரத்த சர்க்கரையுடனே எழுந்தேப். இரண்டு மணிநேரம் தாமதமாக எழுந்து கிளம்பினால் கொஞ்ச தூரத்திலேயே டயர் பஞ்சராகிவிட்டது. பஞ்சர் கடைக்குப் போனால் அங்கு ஏற்கனவே இரண்டு வாகனங்கள் நின்றிருந்தன. மேலும் என் பைக்கில் உள்ள உபரிச் சக்கரங்களைக் கழற்றிவிட்டே ஓட்டையிட்டிருந்த அந்தப் படுபாவி ஆணியை நீக்கி டியூபை மாற்ற முடிந்தது. அதற்கு ஒன்றரை மணிநேரம் ஆனது. ஆனால் அதற்கு மேல் பயணம் உற்சாகமாகவே அமைந்தது.
26 ஆம் தேதி நான் போகும்போதே அந்தப் பாதையில் இரவில் பயணிப்பது கடினம் என்று புரிந்துகொண்டேன். குறிப்பாக, சத்தியமங்கலம் வனத்தை ஒட்டியுள்ள பன்னாரி அம்மன் கோயில் மதில்கள் மீது இரவில் புலிகள் படுத்துக்கிடக்கும், வாகன ஓட்டிகளைத் தாக்கும் என நண்பர்கள் சொன்னார்கள். இதை விடக் கொடுமையானது மைசூரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பில்லிகிரிரங்கா குன்றுகள். கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் உள்ள அக்குன்றுகள் ஈரோட்டின் எல்லையில் வருகின்றன. மொத்தமாக 29 கொண்டையூசி வளைவுகள் கொண்ட மிக அழகான அக்குன்றுகளில் பைக் ஓட்டுவது பிரமிப்பான அனுபவம். அந்த திகிலும் சவாலும் தரும் நிறைவுக்கு ஒப்பில்லை. கொஞ்சம் தவறினால் பள்ளத்தாக்கில் விழ வேண்டியதுதான் என்பதால் நல்ல ஒளியமைப்பு உள்ளபோது மட்டுமே பயணிக்க வேண்டும். பகலில் கூட பெரிய டிரக்குகள், லாரிகள், பேருந்துகள் ஒலிப்பானை தொடர்ச்சியாக முழக்கியபடி ஏதோ கர்ப்பிணிப் பெண் சரிவில் நடந்து ஏறுவதைப் போல சிரமப்பட்டு திருப்பங்களில் வளைந்து வரும். கூடவே கார்களும் சில பைக்குகளும். எல்லாருமே தவறி விழுந்துவிடக் கூடாது, விபத்து பண்ணக் கூடாது எனும் கவனத்துடனே ஓட்டுவார்கள். இருந்தாலும் கூட நாங்கள் செல்லும்போது வழியில் ஒரு கார் மரத்தில் மோதி முன்பகுதி நொறுங்கி பனியில் கைவிடப்பட்ட பிணத்தைப் போல நிற்பதைப் பார்த்தோம். அதில் வந்த ஒரு அம்மாவும் அவரது குழந்தையின் எதிரில் ஒரு சுற்றுமதிலில் அமர்ந்து காலை ஆட்டியபடி சாக்லேட் தின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்தாலும் ஐந்து மணிக்குள் அந்த குன்றுகளை ஏறிக் கடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அது சாத்தியமா?
27ஆம் தேதி எனக்கு இருந்த ஒரே கவலை வேலை மதியம் மூன்றுக்குள் முடிய வேண்டுமே என்பதுதான். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது 4: 45 வரை தள்ளிப் போனது. அதன் பிறகு நாங்கள் குன்றுகளையும் வனப்பாதையையும் எப்படித் தவிர்ப்பது என யோசித்தோம். பெங்களூர் சென்று அங்கிருந்து மைசூர் போக வேண்டும். பெங்களூருக்கு கூகிள் வரைபடம் காட்டிய பாதை போக்குவரத்து நெரிசல் மிகுந்திருந்தது. இரவு 12 மணிவரை சாலையில் சில பகுதிகளில் மட்டுமே 90-100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல இயன்றது. மற்ற பகுதிகளில் ஒன்று போக்குவரத்து அதிகம் அல்லது அங்கங்கே ஊர்களும் சிறுநகரங்களும் தோன்றி வேகத்தைக் குறைத்தன. சாலையில் போனில் பேசியபடி வாகனமோட்டி சாகசம் செய்வோர், எதையும் யோசிக்காமல் நெடுஞ்சாலையில் குறுக்கே சென்று கடப்பவர்கள், இருண்ட நெடுஞ்சாலை நடுவே பேசிக்கொண்டு நடந்துபோகும் ஊர்க்கார்கள் என ஏகப்பட்ட இடைஞ்சல்கள். உண்மையான சவால் கர்நாடக-தமிழ்நாட்டு எல்லைச் சாலைகளில்தான் தோன்றின. திடீரென ஒரு சாலை முடிந்து அங்கே ‘விலகிச் செல்க’ என அறிவிப்புப் பலகை இருக்கும். ஆனால் அதுவும் பல இடங்களில் இருக்காது. மிகக் கவனமாக எப்போது எங்கே சாலை முடியும் எனத் தெரியாத நிலையில் ஓட்ட வேண்டும். எங்கள் கண் முன்னால் ஒரு கார் வேகமாகப் போய் சட்டென ஒரு லாரியின் முன் நின்றுவிட்டது. அந்த லாரியை குறுக்கே நிறுத்தியிருந்தார்கள். ஏனென்றால் அங்கே சாலை முடிந்து ஏதோ மெட்ரோ அல்லது மேம்பால வேலை நடந்துகொண்டிருந்தது. அதனால் லாரியை பார்க் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த லாரி இல்லாவிட்டால் அந்த கார் நிச்சயமாக உடைந்த சாலையில் பறந்து போய் சொருகியிருக்கும் எனத் தோன்றியது. அவ்வளவு வேகமாக அது எங்கள் முன்னால் போய்க்கொண்டிருந்தது. இன்னொரு சாலை முடிந்த இடத்தில் இப்படித்தான் ஒரு மண்குன்றில் ஒரு கார் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம். சாலைகளை உடைக்கும் போது அங்கு சாலை விளக்குகளோ இல்லை, அறிவிப்பு பலகைகளும் இல்லை. வாகன ஓட்டிகளின் உயிரைப் பற்றி இவர்களுக்குக் கவலையும் இல்லை. இந்தியாவில் சில இடங்களில் வண்டி ஓட்டுவது மரணக்கிணறில் ஓட்டுவதற்குச் சமம். என்னிடம் கேட்டால் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மரணக் கிணறு அனுபவம் கட்டாயம் என ஒரு விதிமுறையை அரசு கொண்டு வரலாம்.
இந்த ‘போர்க்கள’ அனுபவங்களால் நாங்கள் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரைச் சென்றடைய 10: 30–11 மணியாகிவிட்டது. அதன்பிறகு உணவருந்திவிட்டு வாகனத்திற்கு பெட்ரோலை நிரப்பினோம். பெட்ரோல் பங்கில் கழிப்பறையை உபயோகித்தோம். அங்கிருந்து கிளம்பும் முன்பு துபாய் விமானத்தைப் பிடிக்க முடியுமா என நான் உன்னிப்பாக யோசித்தேன். பெங்களூரின் எலெக்டிரானிக் மேம்பாலத்தைக் கடந்ததும் நெடுஞ்சாலையை எடுக்காமல் கனகபுரா சாலை வழியாகப் போக முடிவெடுத்திருந்தோம். பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையில் சில விபத்துகள் நடந்ததால் அவ்வழியை பைக்கர்களுக்கு மூடிவிட்டார்கள். அது நம் ஊரில் நடக்கும் கொடுங்கனவுகளில் ஒன்று. முதலில் தாராளமாக எல்லாருக்கும் கண்காணிப்பின்றி அனுமதிப்பார்கள். விபத்துகள் நடந்ததும் ஒரேயடியாகத் தடை செய்வார்கள். விபத்துகள் நடந்த கதையைக் கேட்டால் சிரிக்கவா அழவா என்று தெரியாது. சில இளைஞர்கள் பைக்கில் டிரிபிள்ஸ் ஏறிக்கொண்டு மைசூரில் இருந்து பெங்களூர் போவதற்கான விரைவுச் சாலையின் குறுக்கே ஏறியிருக்கிறார்கள். அது ஒற்றை வழி. சரியான வழியை எடுக்க சுற்றிப் போக வேண்டும். இந்த அரைக்கிறுக்கு இளைஞர்களுக்கு அதற்கான பொறுமை இல்லை. நம் அரசுக்கு குறுக்குவழிகளைத் தடுக்கும் தைரியம் இல்லை. நெடுஞ்சாலையின் அங்கங்கே ஊர்க்காரர்கள் புகுவதற்குத் திறப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் அப்படிப் புகுந்து ஒற்றை வழியில் பறந்து போகும்போது ஒரு காரில் மோதி அந்த இடத்திலேயே மரணம். உடனே அப்பகுதி எம்.எல்.ஏ நிரந்தர தடையை அறிவித்துவிட்டார். இப்போதும் கூட அந்த விரைவுச் சாலையில் கண்காணிக்க நிரந்தர போக்குவரத்துக் காவலர்கள் இல்லை. அவ்வப்போது நெரிசலான தினங்களில் மட்டும் காவலுக்கு நிற்பார்கள். சாலையின் குறுக்கே வெளியே இருந்து வாகனங்கள் நுழைவதற்கும் திறப்புகளை மூடவில்லை. அதற்குப் பதிலாக கார்களுக்கும் 100 கிலோமீட்டருக்கு மேல் செல்லக் கூடாது எனத் தடைவிதித்து விட்டார்கள். சரி இந்த விரைவுச்சாலைக்குப் பதிலாக என்ன வழியென்றால் பக்கவாட்டுப் பயன்பாட்டுச் சாலைகள். அவற்றிலும் அங்கங்கே ஊர்க்காரர்கள் கடந்து போக திறப்புகளை வைத்திருக்கிறார்கள். ஊர் தோன்றும் இடங்களில் எல்லாம் வேகத்தடைகள். ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு வேகத்தடை. இது போக ஒற்றை வழியில் இரு சாரிகளும் கார்களும் லாரிகளும் வரும். திடீர் திடீரென பொந்துகளில் இருந்தெல்லாம் பைக்குகள் கிளம்பி வரும். அச்சாலையில் இரவில் ஓட்டுவது ஒரு கொடுங்கனவு. அதற்கு கனகபுரா சாலை மேல். அதில் வேகத்தடைகள் குறைவு. ஊர்க்காரர்கள் ஸோம்பிக்களைப் போல திடீர் திடீரென ஒற்றை வழியில் குறுக்கே வரவும் மாட்டார்கள். ஆனால் எங்குமே சாலை விளக்குகள் இல்லை. இரவு பத்து மணிக்கு மேல் கடுங்குளிரும் வாட்டியெடுக்கும். பனிப்புகையால் சாலை தெளிவாகத் தென்படாது. அதுவும் போக அச்சாலை வளைந்து வளைந்து வேறு செல்லும். (அங்கு மேம்பாலக் கட்டுமானப் பணிகள், திசை மாறிப் போகவும் தொல்லைகள் இல்லை என்பதே ஆறுதல்.) நான் ஒரு கணக்கிட்டுப் பார்த்தேன். விரைவுச் சாலையை விட தொலைவும் அதிகம் - 160 கிலோமீட்டர்கள். எங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர 180-190 கிலோமீட்டர்கள். ஆகையால் அவ்வழியில் இரவில் வேகமாகப் போக முடியாது. என்னதான் துணிந்து அச்சாலையில் கிளம்பினாலும் விடிகாலை 4-5 மணியாகி விடும். ஏற்கனவே முந்தினத் திட்டத்தின்படி நாங்கள் இரவு 11 மணிக்குள் போய்ச் சேர்ந்து காலையில் பெங்களூருக்குப் போய் விமானம் பிடிக்க உத்தேசித்திருந்ததால் அதற்காக காலை 5 மணிக்கு வாடகைக் காரை பதிவு பண்ணியிருந்தோம். முதல் வேலையாக அதை ரத்து பண்ணினோம். அடுத்து நான் பரணி அமைப்பினரிடம் போனில் நிலைமையைத் தெரிவித்தேன். ஏற்கனவே 8 மணிநேரம் வாகனம் ஓட்டிக் களைத்திருந்தேன். இன்னும் 4-5 மணிநேரங்கள் ஓட்ட வேண்டும். தாங்க முடியாத கடுங்குளிர். குளிர் உலோகக் கருவியாகி என் தசைகளையும் எலும்புகளையும் ஊடுருவும் உணர்வு. அந்த வதையைத் தாங்கிக் கொண்டு ஓட்ட வேண்டும். சாலையில் குற்றிருட்டு என்பதால் என் வாகன விளக்கொளியை நம்பியே ஓட்ட வேண்டும். அது மிகக் கடினம். பெரும்பாலும் என்னால் விமானத்தைப் பிடிக்க முடியாது. ஆனாலும் முயல்கிறேன் என்று சொன்னேன்.
மிகவும் சிரமப்பட்டு மூன்று மணிநேரங்கள் ஓட்டிய நிலையில் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது எனத் தோன்றியது. ஆனால் பைக்கையும் நிறுத்த முடியாது. பனிப்புகை பேயைப் போல முகத்தில் அறைந்தது. இருள் வேறு. என் அதிர்ஷ்டம் வழியில் ஒரு தேநீர்க் கடையில் ஆட்களைப் பார்த்தேன். நெடுஞ்சாலை வாகனங்களுக்கான கடை. நெருப்பு மூட்டி அதில் காய்ந்து கொண்டிருந்தார்கள். முதல் வேலையாக வண்டியை நிறுத்தி நெருப்பில் காய்ந்தோம். நாங்கள் இயல்பாகவே அரைமணி எடுத்தது. வெளிச்சம் வரும்வரைக்கும் காத்திருப்பதாக முடிவெடுத்து அதன்பிறகே புறப்பட்டேன்.
காலையில் பரணி அமைப்பினரிடம் நிலைமை எடுத்துரைத்தேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எனக்கு பயணம் ரத்தானதில் மிகுந்த வருத்தம்தான். பயணிக்கும் வாய்ப்பு போய்விட்டதே என்பதைவிட என்னால் அவர்களுக்குச் சிரமமாகி விட்டதே எனும் சங்கடம், கவலை. நான் இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்து விசாரித்து இப்பயணத்தைத் திட்டமிட்டிருக்க வேண்டும். மாலையில் குன்றுகள் மீது ஏறி இறங்க வேண்டியிருக்கும், இருட்டினால் அது அசாத்தியம் என நான் கணித்திருக்கவில்லை. ஏனென்றால் அந்த ஒரு மாதமும் எனக்கு யோசிக்க முடியாத அளவுக்கு பணிகள் குவிந்திருந்தன. காலையில் ஆரம்பித்தால் இரவு 2-3 மணிவரைக்கும் வேலை. நான் சரிவரத் தூங்கிய இரண்டு மாதங்கள் ஆகின்றன. எதையும் தீர விசாரித்து யோசித்து முடிவெடுக்கும் என்னால் இம்முறை அது முடியவில்லை. நியாயமாக நான் பெங்களூரில் இரவில் தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து சுலபமாக விமானம் ஏற முடிவெடுத்திருக்க வேண்டும். அதற்கு கடவுச்சீட்டு, விமானச் சீட்டு, விஸா உள்ளிட்ட ஆவணங்களையும் பொருட்களையும் பொதிந்து பயணப் பையைக் கூடவே கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வளவு முக்கியமான வேலை இந்த வெளிநாட்டுப் பயணத்திற்கு முந்தின நாள் வராவிட்டால், அதற்காக நான் தொடர்ச்சியாக பல வாரங்கள் உழைக்க வேண்டியிருக்காவிடில் சரியாகத் திட்டமிட்டுப் போயிருப்பேன்.
இந்த கொடுங்கனவுப் பயணத்தில் ஒரே நல்ல பயன் என்னால் ஒரே நாளில் தொடர்ச்சியாக 12-13 மணிநேரங்கள் ஓட்ட முடியும், 400 கிலோமீட்டர்களைச் சுலபமாகக் கடக்க முடியும் எனத் தெரிந்ததுதான். அடுத்த முறை காலை 5 மணிக்குக் கிளம்பினால் பைக்கிலேயே மாலைக்குள் சென்னைக்குப் போக முடியும் என நம்பிக்கை ஏற்படுகிறது. இரவில் சிக்கிக் கொண்டால் சமாளிக்க ஜாக்கெட்டும், மூடுபனி விளக்குகளும், எல்.ஈ.டி முகப்பு விளக்கும் ஏற்பாடு பண்ணப் போகிறேன். அடுத்த நெடும்பயணம் அதிரிபுதிரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.