பெருநகரங்களின் தோற்றத்திற்கும் பாசிசத்துக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான மற்றொரு உண்மைதான் பண்பாட்டில் வேரற்று, வாழ்வில் அர்த்தத்தை இழந்து தவிக்கும் நவீனத் தனிமனிதர்கள் தம் பதற்றத்தில் இருந்து தப்பிக்க பெருந்திரளை நோக்கி வருவார்கள், அவர்கள் கிடைக்கும் வெளிகளில் எல்லாம் திரள்வார்கள், அவர்களைப் பயன்படுத்தி தம் அதிகாரத்தை நிரூபிக்க ஆளும் அரசுகள் விரும்பும் என்பதும்.
புத்தாண்டுக்கான பெருந்திரள் கொண்டாட்டங்கள் உண்மையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல, நோய்மையின் வெளிப்பாடுதான். அதாவது புத்தாண்டைக் கொண்டாடுவது அல்ல பிரச்சினை. திடீரென தனியர்களும் சிறுகுழுக்களுமான மக்கள் பெருங்கூட்டத்தை நாடுவதுதான். மக்கள் பெருங்கூட்டமாவதில்லை. மக்கள் தம் கற்பனையில் உள்ள பெருந்திரளை நாடுகிறார்கள். அவர்கள் அவ்வடிவத்திற்கும் தாமாகவே வந்து இணைகிறார்கள். இடம், வசதி, சூழல் இவை மட்டும் இருந்தால் போதும்.
ஆனால் இந்தியாவைப் போன்ற நாட்டில் இடம் குறைவு, ஜனங்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.
அரசு நினைத்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பார்கள்.
ஏனென்றால் அரசுக்கு எப்போதுமே தன் இருப்பை நியாயப்படுத்த திரள் எனும் குறியீட்டைக் காட்டுவது அவசியம். இந்தியாவில் முதல் கூட்ட நெரிசல் விபத்து நடந்ததே வெள்ளைக்காரர்களின் அரசு இங்கு கும்ப மேளாவை அனுமதித்தபோதுதான். வெள்ளையர் அரசும் தம்மை அரசென அங்கீகரிக்க இந்தியத் தேசம் என ஒரு கருத்தமைவை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். தேசத்தைக் கட்டமைக்க சிறந்த வழி கூட்டத்தைத் திரட்டுவதே. அதற்கு அவர்கள் மதச் செண்டிமெண்டைப் பயன்படுத்தினார்கள். சமஸ்கிருத வைதீக ஆய்வுக்கு, பரப்புரைக்கு நிதியளித்தார்கள். இன்னொரு பக்கம் இஸ்லாமியரை தனித்தேசமாகக் கட்டமைக்கும் பணியையும் செய்தார்கள். அதன் பிறகு சுதந்திரம் கிடைக்க இந்திய அரசுகள் தோன்றின. இந்திய ஆட்சியாளர்களும் வெள்ளையர்களைப் போன்றே மக்களை நடத்தினார்கள். அவர்களும் தவறாமல் கும்ப மேளாக்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் சாவதற்கு வழிவகுத்தார்கள். இந்திய ஆட்சியாளர்களுக்கு கூடுதலாக இப்போது மக்களைத் திரட்டி தம் வலிமையைக் காட்ட மதத்தைத் தாண்டி இசை அரங்கு, நடன அரங்கு, கொண்டாட்ட மைதானங்கள், மது போதை, சமூக வலைதளங்கள் வந்துவிட்டன.
மக்கள் திரள்வதன் மிகப்பெரிய சிக்கல் கூட்ட நெரிசல் விபத்துகள் கூட அல்ல. அது உள்ளார்ந்த ஒரு பாசிச மனநிலையின் நோய்க்குறியாக வளர்க்கிறது என்பதே. 'எனது திரள் என்பது சிறியது, அது என் உடனடி குழு, என் குடும்பம், என் நண்பர்கள்' என்று ஒருவர் நினைக்கும்போது மட்டுமே அவர் பாசிசத்துக்கு எதிராகச் செயல்படத் தொடங்குகிறார். நான் என்பவர் என் சாதி, என் மதம், என் ஊர், என் மொழி, என் அடையாளம், என்னவர்களை நான் எனக்கு வெளியே பெருந்திரளில் அடையாளம் கண்டு, அதில் என்னை மறைக்க வேண்டும், கட்டற்ற அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என ஒருவர் நினைக்கும்போது அவரிடம் இருந்து பாசிசம் புறப்பட்டுச் சென்று மக்களாட்சி உணர்வை எரித்து பெருநெருப்பாகத் தோன்றி கொழுந்துவிட்டு எரிகிறது.
எல்லா விதமான கூட்டங்கள், பேரணிகள், திரட்சியையும் நாம் இதனாலே எதிர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எவருடனும் உடன்படாத தனிமனிதர்கள், அடையாளமற்ற சிறுகுழுக்களில் தம்மைக் காணும், அமைதி கொள்ளும் மனிதர்கள் மேலானவர்கள். சுயமாகச் சிந்தித்து விமர்சிக்கிறவர்களால் திரளில் போய் ஒளிய முடியாது. திரள் நம் மூளையை மழுங்கடித்து மக்களாட்சியை அழித்துவிடும்.