ச. தமிழ்ச்செல்வன் என் பிரியத்துக்குரிய படைப்பாளி அல்லர். அவரைக் குறித்துச் சிந்திக்கையில் எல்லாம் அவரது பலமும் பலவீனமும் மானுடவாதமும் மிகையான எளிமையும்தான் எனத் தோன்றும்.
ச. தமிழ்ச்செல்வன் முதன்மையாக ஒரு மானுடவாத எழுத்தாளர். சிறுகதையாளர். 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டு வருகிறார்.ஆனால் நிறைய எழுதிக் குவித்தவரோ தமிழில் சிறுகதைகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை செரித்தோ மறுத்தோ தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அல்லர். அதனாலே அவர் முழுமையாகத் தன்னை எழுத்தாளர் என்று மட்டுமே கருதி வாழ்ந்தார் என்று கருத முடியாது. இடதுசாரி முற்போக்கு செயல்பாட்டாளர், ஆனாலும் தன் கதைகளில் அவர் மார்க்ஸிய பொருளாதார நோக்கில் சமூக அவலங்களைக் கண்டதில்லை என்பது என் பார்வை. அவர் மானுடவாத நோக்கிலேயே கொஞ்சம் கற்பனாவாதத்துடன் மனிதர்களைச் சித்தரித்தார். இது என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்திய ஒன்று.
வண்ணதாசனின் கதையுலகை எளிய மக்களிடம் வைத்து மென்னுணர்வுகளை தழைதழைப்பு இன்றி நேரடியாகச் சொன்னால் தமிழ்ச்செல்வனின் கதையுலகம் தோன்றிவிடும் என எனக்குத் தோன்றும்.
ச. தமிழ்ச்செல்வன் ராணுவத்தில் இருந்திருக்கிறார் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் - தமிழ் நவீன எழுத்தாளர்கள் பொதுவாக மென்மையான, அலுவலக நாற்காலிகளில் சமையும் பணிகளிலே இருப்பார்கள். ஆனால் ராணுவம், தேசியம், யுத்தங்களின் குரூரம், அபத்தம் குறித்தெல்லாம் கெர்ட் வெனெகெட், ஹெமிங்வேயைப் போல இவர் பேச மாட்டார்.
பெண்கள், பெண்ணுரிமை என்று வந்துவிட்டால் ச. தமிழ்ச்செல்வன் பயங்கர woke ஆகப் பேசுவார் என்பதைக் கவனித்திருக்கிறேன். உதாரணமாக ஆண்கள் நன்றாக சமைக்க ஆரம்பித்தால் குடும்பத்துக்குள் சமத்துவம் வந்துவிடும் எனும் தோரணையில் அவர் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதேநேரம் நம் இளம்தலைமுறைப் பெண்களில் சிலரோ ஒன்று சமைக்கத் தெரிந்த கணவர் கிடைத்துவிட்டால் அவரை அடிமையாக்கித் துன்புறுத்துகிறார்கள் அல்லது கணவருக்கும் சமையலுக்கும் தொலைவு என்றால் அவருக்குச் சோறே போடாமல் ஸ்விக்கியில் ஆர்டர் போட்டே கொல்கிறார்கள் என்பதும் எதார்த்தம்தான்.
ச. தமிழ்ச்செல்வனின் முக்கியத்துவம் அவர் மானுடவாதச் சிறுகதைகளுக்கு அளித்த பங்களிப்புதான். அதனாலே வரலாற்றளவில் அவர் தவிர்க்க முடியாதவர். அவருக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.