
எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வரும்போது தான் கொண்டாடுகிறவற்றின் (இலக்கியம், காதல், நட்பு, லட்சியம்) நிகழாத எதிர்மறைக்குள் நம்மைக் கொண்டு போவார். காதல் காதல் என்று மருகுவோர் அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதை அவர் பகடி செய்வதை எடுத்துக் கொள்வோம். அங்கு அவர் காதலைப் பகடி செய்யவில்லை, காதல் குறித்த அணுகுமுறையையும் பகடி செய்யவில்லை - ஒருவித பாசாங்கை, முரணைப் பகடி செய்கிறார் என்றும் கொள்ள முடியாது. ஏனென்றால் அடுத்த சில பக்கங்களிலேயே அவர் அதே பாசாங்கைத் தானும் நிகழ்த்தத் தொடங்குவார். அதிலும் அவர் தீவிரமான நம்பிக்கையை வைக்கிறாரா அல்லது அதுவும் ஒருவித விளையாட்டா என்று அறிய முடியாது. இப்படி அவரது பகடி எதிர்மறையை ஊடுருவி அதே எதிர்மறைக்குள் போய் நம்மை நிறுத்துகிறது. அது ஒன்றுமில்லாத இடத்துக்குப் போகிறது. எதிர்மறைக் கடப்புநிலைப் பொருள் எனும் பதமே சற்று கடுமையாகத் தெரியலாம். நிகழாத இன்மை என்பது இன்னும் பக்கத்தில் வருமென நினைக்கிறேன்.
சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை எனக்குப் பக்தி கவிதைகளுக்குவெகு நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி தோன்றும். அதனாலே அவரது பகடியை நாம் தனித்துப் படிக்கலாகாது - அதை அவரது காதல் வரிகள், கொண்டாட்ட விவரணைகளுக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அப்போதே அது ஏன் நம்மை அகத்தே அவ்வளவு சுத்தப்படுத்துகிறது என விளங்கும்.
கெர்ட் வொனெகட்டின் பகடியும் நகைச்சுவை உணர்வும் நிச்சயமாக சாருவை நினைவுபடுத்துகிறது. எதையும் விட்டுவைக்காத முழுமையான அம்மண விளையாட்டாக அவர் பகடியை மாற்றுகிறார். உதாரணமாக Breakfast for Champions நாவலில் தன் மனைவியை இழந்த ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு முழுமையான பைத்திய நிலையில் சரிவதைச் சித்தரிக்கும்போது அவர் எதார்த்தவாத எழுத்தில் வீழ்ச்சியை கசப்புடன் சுய-இரக்கத்துடன் காட்டுவதற்கு நேரெதிராகச் செல்கிறார். முழுக்க முழுக்க கேலி, கிண்டல், பகடிதான், ஆனால் அந்த எள்ளலிலும் கசப்பு இருக்காது. அதே போலத்தான் அவர் பதிப்பு வணிகம் எப்படி இலக்கியத்தையும் போர்னோகிரபிக்கு பக்கத்தில் கொண்டு போகிறது எனக் காட்டும் இடங்கள்.
ஆனால் ஒப்பீட்டளவில் சாருவின் எழுத்து னெகெட்டை விட பலமடங்கு மேலானது - ஏனென்றால் சாரு இந்த பகடியைக் கொண்டு நம்மை இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்று நம்மை சுத்திகரிக்கிறார். இதை வெனெகெட்டால் செய்ய முடிவதில்லை. அவர் மறுப்புநிலைவாதத்துடன் நின்றுகொள்கிறார். தன்னுடைய அரசியல் தரப்பையும் (இடதுசாரி, சர்வாதிகார எதிர்ப்பு) அவரால் கடக்க முடிவதில்லை.