என்னுடைய புதிய நூலான "படித்துதான் ஆகணுமா?"விற்கு செந்தமிழ் எழுதியுள்ள அருமையான மதிப்புரை இது. நூலின் சாராம்சத்தை தன் எழுத்தில் அவர் கொண்டு வந்துவிட்டார். படித்துப் பாருங்கள்:
"கல்வித்துறையில் இருக்கும் பிரச்சனைகளை பொதுவாகச் சொல்லாமல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தகுதித்தேர்வு, சமூகம் என்று நான்கு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். கல்வியில் மதத்தின் பங்கு, ஆசிரியர் மாணவர் உறவு, மாணவர்களுக்கான அரசியல், வாசிப்பு பழக்கம், ஆசிரியர்களின் பணிச்சுமை என்று ஆசிரியர், மாணவர், சமூகம் ஆகிய மூன்று தரப்பினரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அலசியுள்ளார். உயர்கல்வி பகுதியில், கல்வித்துறை தனியார்மயமாதலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தகுதித்தேர்வு பகுதியில், மற்ற துறை தேர்வுகளிலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வு எப்படி வேறுபட்டிருக்க வேண்டும், தற்போதைய முறையால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்று கூறுவதில் ஒரு பேராசிரியராய் அவரின் அக்கறை கூடுதலாய் வெளிப்பட்டுள்ளது.
வாசிப்பாக இந்நூல் நம்மை தொய்வடைய விடுவதில்லை. கல்வியை அதீதமாக மகத்துவப்படுத்தியோ நிராகரித்தோ செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு இடையில், நிதானமாக நம்மை அதன் தற்போதைய நிலை குறித்தும் அதற்கான தீர்வுகளை நோக்கியும் சிந்திக்கச் செய்யும் இந்நூலை, படித்துதான் ஆகணுமா? என்று கேட்டால் நிச்சயம் 'ஆம்' என்பேன். ஆசிரியர்கள், கல்வித்துறையில் முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்களின் கண்களின் இந்நூல் சென்றடைய வேண்டும். அபிலாஷின் பரிந்துரைகளை ஒருவர் ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் கல்வி குறித்து சமூகம் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிச்சயம் பரவலான விவாதங்களுக்கு இந்நூல் இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை."
