“அன்பான பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே,
என்னுடைய மனப்போக்கையும் செயல்பாட்டையும் அந்தக் காலகட்டத்து உளவியலில் இருந்தும், லோகோஸில் நடந்த மாற்றங்களில் இருந்தும் பிரித்துப் பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், லோகோஸுக்கு நடந்த உருமாற்றத்தை நீங்கள் அப்போதைய ஒன்றிய, மாநில அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அன்றைய தேசிய அரசியலை நீங்கள் அப்போதைய சமூகப் பொருளாதார சிக்கல்களில் இருந்து விலக்கி வைக்க முடியாது. நான் என்னை எவ்வாறு பார்த்தேன் என்பது எந்தளவுக்கு என்னுடைய அனுபவங்களும் சூழலும் இருந்தன என்பதற்கு இணையாக என்னைப் போன்ற மக்கள் எப்படி தம்மைப் பார்த்தார்கள் என்பதுடனும் சம்பந்தப்பட்டது. இதை நான் என்னை நியாயப்படுத்தவோ, மதிப்பீட்டில் இருந்து தப்பிக்கவோ சொல்லவில்லை. அன்றைய ஒவ்வொரு மாற்றமும் என்னைப் பாதிப்பதை நான் “நேரடியாகவே உணர்ந்தேன்.
அரசியலை செய்தித்தாள், டிவி செய்தித்தொகுப்பு வழியாக அறியும் காலம் முடிந்துவிட்டது, இனி நானே அரசியல் என உணர்ந்தேன். என்ன பிரச்சினை எனில் நானே அரசியல் ஆகும்போதும் அதன் மீது நான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறேன் என உணர்த்தப்படுகிறேன். இதற்கும் என் வழக்கு விசாரணைக்கும் நுட்பமானத் தொடர்பு உள்ளதால் இந்த எதிர் உறுதிமொழி ஆவணத்தில் நான் அன்றைய அரசியல் சமூக நிகழ்வுகள் சிலவற்றையும் லோகோஸுக்கு வந்த மாற்றங்களையும் ஒரு அத்தியாயமாக எழுதி சேர்த்திருக்கிறேன். ”
