வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது.
வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல).
தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் பெரும்பகுதியினர் வாசிப்பதில்லை. இதற்கு ஓய்வோ, வசதியின்மையோ காரணமல்ல. நாம் இன்று இந்தியாவில் உள்ள செல்வச்செழிப்பான மாநிலங்களில் ஒன்று. அரசே வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் முயற்சி எடுக்கிறது. ஆனால் நாம் அகத்தில் இன்னும் ஆழமாக நம்மை உணர பயிற்சி எடுக்கவில்லை. துரத்தப்படும் விலங்கைப் போன்றே எப்போதும் உணர்கிறோம். குடும்பத்தில், வீட்டில், வேலையிடத்தில், வெளியே.
வாசிப்பு ஒரு ஆன்மீகப் பயிற்சி என வரவர எனக்குத் தீவிரமாகவே தோன்றுகிறது. ஆலயம் தொழுவது, மத ஊர்வலங்களில் பங்கெடுப்பது, கடவுள் சிலை முன் கண்ணீர் உகுப்பதை நான் சொல்லவில்லை. தயங்காமல் கலங்காமல் ஒன்றினுள் இருப்பதைச் சொல்கிறேன். அதற்குச் சிறந்த புத்தகங்களைப் படிக்க அவசியமில்லை என்றாலும் சிறந்த புத்தகங்கள் நாம் வாசிப்புக்குள் நுழைய அதிகமாகவே உதவுகின்றன.
இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு அறிமுகமாகிறவர்கள் நேரமின்மையைக் குறித்துப் பேசுகிறார்கள். நமக்கு ஆழமாகப் படிக்க பத்து நிமிடங்கள் கூடப் போதும். அது இல்லாமல் இல்லை. வாசிப்பை நாம் ஒரு நுகர்வாகப் பார்க்கும் வழக்கம் அதிகரித்து விட்டதால் 'நேரமில்லை', 'புத்தகம் அலுப்பூட்டுகிறது' போன்ற கருத்துக்களைச் சொல்கிறோம். நுகர்வு நிலையில் இருந்து நகரும்போதே நல்ல வாசிப்புக் கலாச்சாரம் உருவாகிறது.
அதற்கான பயிற்சியை பள்ளியில் இருந்து, வீட்டில் இருந்து துவங்கலாம். சமூக வலைத்தளத்தில் கூடப் பயிற்சி அளிக்கலாம். ஆனால் மதத்தை விட, தெய்வத்தை விட வாசிப்பு முக்கியம் எனும் மனப்பான்மை வர வேண்டும். வாசிப்பில் இருந்து அனைவரும் தாம் நினைப்பதைச் சொல்லில் வடிக்கும் கலையைப் பழக வேண்டும். அதுவும் ஆன்மீகப் பயிற்சிதான். மகிழ்ந்திருப்பது என்பது இங்கிருந்தே வருகிறது. நாம் மகிழ்ச்சியற்று, நிம்மதியற்று இருக்கும்போது ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட நிம்மதியாகப் படிக்க முடியாது என்பதை உணர்ந்திருப்போம். வாசிக்கையில் நம்முடன் இருக்கும், வாசிக்க நம்மை அனுமதிக்கும் இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் உள்ளிருந்து ஊறி வருவதே. இதை நாம் வெளியே இருந்து பெறத் தேவையில்லை. அது புத்தகத்தில் இருந்து வருவதும் அல்ல. புத்தகம் அதைத் தன்னுடன் இருக்க அனுமதிக்கிறது. அதுவும் புத்தகத்தின் அணுக்கத்தை விரும்புகிறது.
வாசிப்புக்கான நேரமில்லை என்பதை விட வாசிப்புக்கான 'நிம்மதி' இல்லை என்பதே சரியான விளக்கம்.
நாம் ஏன் நிம்மதியற்ற சமூகமாக இருக்கிறோம்?