கர்நாடகாவிற்கு வந்து பெங்களூர், மைசூர் என்று அவதிப்படுகையில் இங்கிருந்து எப்படிடா தப்பிப்பது என்று சில நாட்களுக்கு முன் யோசித்துக் கொண்டிருந்தேன். சில உத்திகள் தோன்றின:
2) கன்னடர்களைப் பற்றிக் கேவலமாக எதையாவது எழுதி அதனால் உள்ளூர்க்காரர்கள் கடுப்பாகி என்னை ஊரில் இருந்தே துரத்த வேண்டும். ஆனால் அது என் இயல்பு அல்ல. இந்த நல்ல மனிதர்களை எப்படித் திட்டுவது?
3) வேலையிலோ வெளியிலோ அறத்தை மீறி எதையும் செய்ய என்னால் முடியாது. பிளேட்டோ சொன்னதைப் போல எந்தத் தவறையும் நாம் நமக்கே முதலில் செய்கிறோம். அது நமக்குத் துன்பத்தையே தருகிறது. நம்மைத் துன்புறுத்துவதை நம்மால் செய்ய இயலாது. அதனால் அறிவு படைத்தவர்களால் தவறு செய்ய இயலாது.
4) அது மட்டுமல்ல தவறு செய்வதற்கு ஒரு முகராசி வேண்டும். நானாகச் செய்தாலும் யாருக்கும் அது தவறாகத் தெரியாது என்பதே இந்த ஊருக்கு வந்தபின் அனுபவம். நான் பயங்கரக் கேவலமானவன் என்றாலும் நம்ப மாட்டார்கள். மேலும் நான் சதா எழுத்து, வாசிப்பு, வேலை என்று இருப்பதால் அதற்கான 'பயிற்சியில்' இல்லை.
5) வேலையை உதறிவிட்டு வரலாம். ஆனால் பிரச்சினை என்னால் அதர்க்கமாக ஒன்றைச் செய்ய முடியாது என்பதே. ஒரு நியாயமான காரணம் இல்லாமல் போகிற போக்கில் வேலையை விட முடியாது. இந்த ஊரும் பெங்களூரும் என்னை நன்றாகவே நடத்துகிறது, நடத்தியது. மறுப்பில்லை. வேலையிடத்திலும் அதிகமும் நல்லவர்களே. என் ஒரே பிரச்சினை நான் ஒவ்வொரு வருடமும் நாம் இருக்கும் சூழலில் இருந்து அந்நியமாகிக் கொண்டே போகிறேன் என்பது. பெங்களூரிலாவது ஒன்றிரண்டு எழுத்தாளர்களையாவது பார்க்க முடிந்தது. இங்கும் இருப்பார்கள். ஆனால் அவர்களைப் பார்த்தால் என்ன சொல்கிறார்கள் என்றே புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்காது. ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம். கடிக்க மாட்டார்கள்.
6) இணையத்தைப் பயன்படுத்தி மொழியுடனும் இலக்கியத்துடனும் கூடுதல் பிணைப்புடன் இருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.
மேலும் புலம்பல்கள்:
1) அண்டார்டிக்கா, ஆப்பிரிக்கா எல்லாம் போய் தமிழ் எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிகிறது?
2) நான் பிறந்த ஊரே எழுத்தாளர்கள் சூழ் பிரதேசம்தான் (இப்போது எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை). வயநாடு போன்ற சிறிய ஊருக்கு நான் போயிருந்தபோதே நூறு எழுத்தாளர்களுக்கு மேல் இரண்டு நாட்களில் பார்த்தேன். கர்நாடகாவில் ஏன் அப்படி ஒரு சூழல் என் கண்ணுக்குப் புலப்படவில்லை? குறைந்தது எனக்குப் புரியாத மொழியிலாவது கவியரங்கம் நடத்தலாம் இல்லையா? நானும் செய்தித்தாளில் மேய்கிறேன். எதுவுமே தென்படுவதில்லை. அவ்வப்போது முதல்வர் இந்த ஊர் படைப்பாளிகளை அழைத்துப் பாராட்டுகிறார். அவர்களும் தலைகாட்டிவிட்டு சட்டென வயற்காட்டு பொந்துகளுக்குள் பதுங்கி விடுகிறார்கள். நான் அதிகமாக கர்நாடக எழுத்தாளர்களைப் பார்ப்பது தமிழ்நாட்டில்தான். சில நேரங்களில் கேரளாவிலும் பார்த்திருக்கிறேன். இந்த ஊரில் என்னதான் பண்ணுகிறார்கள்? "காதல் கோட்டையில்" அஜித், தேவயானியைப் போல பயங்கர மர்மமாக வாழ்கிறார்கள். நான் மட்டும்தான் இப்படி நினைக்கிறேனா என்றால் சிட்டிசன் மேட்டர்ஸ் எனும் இணைய இதழில் இப்படி எழுதியிருக்கிறார்கள்: //There are not enough cultural spaces in Bengaluru that create interest among new readers or new learners to read Kannada and to inculcate love for the language. As a result, the new crowd in their twenties is not reading serious Kannada literature.// உயர்குடி இளைஞர்களின் குடி, பப்புக்கு கொடுக்கும் வெளிகளை இலக்கியத்துக்கும் பண்பாட்டுக்கும் இவர்கள் அளிப்பதில்லை எனும் என் எண்ணம் சரிதான் போல. நான் கொல்கொத்தாவில் வேலை கிடைத்துச் சென்றிருந்தால் கூட இவ்வளவு வறட்சியாக உணர்ந்திருக்க மாட்டேன் போல. நான் அங்கிருந்த மூன்று நாட்களில் சுமார் பத்து பேரையாவது தெருவில் பார்த்து இலக்கியம், அரசியல் என உரையாடி இருப்பேன். வங்காளிகள் என்னைப் போல. ஒருநாளில் 20 மணிநேரம் கூட இடைவிடாமல் இலக்கியம் பேசுவார்கள். சமூகம், அரசியல், வரலாறு என்றால் வாடகைக் கார் ஓட்டுபவர் கூட ஆர்வமாகப் பேசுவார். குறைந்தது சினிமா குறித்த தீவிர சர்ச்சைகளாவது நடக்க வேண்டும். பெங்களூரில் திரைப்பட விழா நடந்தால் அங்கும் கன்னடர் அல்லாதோரே அதிகம் வருகிறார்கள். சென்னையில் வாழ்ந்த 18 ஆண்டுகளே பொற்காலம். ஒவ்வொரு வாரமும் நான் இரண்டு புதிய மனிதர்களையாவது சந்திப்பேன். அவர்களே தேடி வருவார்கள். என்னைப் போல இலக்கியம், கலை ஆர்வம் கொண்டவர்கள்.
3) இன்னொரு பிரச்சினை - நான் இதுவரைச் சென்றுள்ள ஊர்களில் மக்களுக்குப் பரவலாக உடைந்த ஆங்கிலமாவது தெரிந்திருக்கிறது. தில்லியில் கூட இந்தி தெரியாமல் சிரமப்படுவேன் என நினைத்தேன். ஆனால் அங்கும் ஆங்கிலம் பேசினார்கள். கர்நாடகாவில் ஏன் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லை எனத் தெரியவில்லை? ஏன் அதற்கான முயற்சி கூட செய்வதில்லை? இந்தி தெரிந்தால் சுலபமாக இங்கு உரையாட முடியும். எங்கு பார்த்தாலும் இந்திக்காரர்களால் இங்கு சுலபத்தில் புழங்க முடிகிறது. வேலையிடங்களிலும் நாம் அதிகமாகக் கேட்பது இந்திதான். இந்தி விசயத்தில் கர்நாடகா தில்லி, வங்காளத்தைவிட மோசம். பூர்வ இந்திக்காரர்களை விட பயங்கரமாகப் புகுந்து புகுந்தெல்லாம் இந்தி பேசுகிறார்கள். சிலநேரங்களில் இந்திக்காரர்களைக் கூட "உங்க இந்தி தப்புங்க" என்று திருத்துகிறார்கள். இதற்குப் பதிலாக ஆங்கிலத்தில் பேசி, எழுதலாமே! வாழ்க்கைத் தரமும் பண்பாடும் உயருமே!
இந்த ஊரில் இன்னும் சில ஆண்டுகள் நான் இருந்தால் கன்னடத்தை விட இந்தியைக் கற்றுக் கொண்டு நேரே பீகார், ராஜஸ்தான் போய் நெற்றில் பெரிதாக குங்குமமும், முண்டாசும் கட்டிக்கொண்டு பீடா போட்டுத் துப்பும் நிலை வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது!