டொனால்ட் டிரம்புக்கும் நமது சினிமா இயக்குநர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. டிரம்புக்கு பெட்ரோல் கொடுக்காவிட்டால் அவர் அந்நாட்டுப் பிரதமரை / அதிபரைக் கடத்தி வைத்து மிரட்டி ஆட்சியை மாற்றுவார், குண்டுகள் போடுவார், அதைக் குறித்துப் பெருமை பேசி நோபல் பரிசு கோருவார். நம் இயக்குநர்களின் படம் ஓடாது, ஓடவில்லை என்று தெரிந்தால் பட்ஜெட்டின் 10-20% எடுத்து யுடியூபர்கள், சேனல்களிடம் கொடுத்து புரொமோட் செய்து நம்மை மிரட்டிப் பார்ப்பார்கள். அப்போதும் நாம் அசையாவிட்டால் நேர்முகங்களாகக் கொடுத்து தம்மைப் பற்றிப் பீத்தி நம்மை மிரட்டுவார்கள். அப்போதும் நாம் அசையாவிட்டால் பிஹைண்ட் வுட்ஸை தொடர்புகொண்டு தமக்கென்று விருதுகளை வாங்கி அங்கும் பேசி பந்தா பண்ணி நம்மைக் கொடுமைப்படுத்துவார்கள். தமிழ் ரசிகர்கள் பயங்கர பொறுமைசாலிகள். அவர்களை அசைக்கவே முடியாது. சரக்கடித்துக் கொண்டு தூங்கப் போய் விடுவார்கள்.
இதற்கு நடுவே பலனடைபவர்கள் ஊடகக்காரர்கள்தாம். இவர்கள் புரொமோஷனுக்குச் செலவழிக்கும் பணத்தில் திரையரங்குக்கு வரும் மக்களுக்கு பரிசுச் சீட்டு, குண்டான், குடம், பைக், செல்போன், இலவச சமோசா, டீ கொடுக்கலாம். முதல் மூன்று நாட்களுக்கு வரும் ஆயிரம் பேருக்குச் சோறு போடலாம். படம் ஓடுகிறதோ இல்லையோ இதனால் நற்பெயர் கிடைக்கும். நாலு பேருக்கு வயிறு நிரம்பும்.
இன்னொரு ஐடியா உள்ளது - ஆட்களைக் கூட்டங்கூட்டமாக லாரியில் ஏற்றிக் கொண்டு வருவது. புரொமோஷனுக்கு ஆவதைவிட குறைவாகவே செலவு ஆகும். படம் நன்றாக இருந்தால் அவர்களே வாய்வழிப் புரொமோஷன் பண்ணுவார்கள். செலவுக்குப் பணமில்லாதவர்களுக்கு உதவும். அப்பணத்தை அவர்கள் மளிகை சாமான் வாங்க, சரக்கடிக்கச் செலவு பண்ணுவார்கள். இதனால் பொருளாதாரம் வளரும்.
இன்னொரு கொடூரமான ஐடியா உள்ளது - கே.ஜி.எப்பில் தொழிலாளிகளை அடிமைகளை ஒரு ஏரியாவில் அடைத்து வைத்து கட்டிப் போட்டு வேலை வாங்குவார்கள். அதைப் போல பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு சோறு போட்டு திரை ரசிகர் நகரம் ஒன்றை உருவாக்கி அவர்களை வரிசையாகத் திரையரங்குக்குக் கொண்டு வரலாம். தலைக்கு இவ்வளவு என்று தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் வாங்கலாம். தப்பிக்கவே முடியாது.
சில இரண்டாம், மூன்றாம் நிலை இயக்குநர்கள் "படம் வந்ததும் போனதும் யாருக்கும் தெரியலைங்க" என படம் ஓடாததற்குக் காரணம் சொல்வார்கள். தெரிந்தால் மட்டும் ஓடும் என எப்படி நம்புகிறார்கள்?
புரொமோஷன் பண்ணினால் படம் ஓடும் என்று யார் இவர்களை நம்ப வைத்தது?
எனக்கென்னவோ இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.கதான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வெறுமனே புரொமோஷன் பண்ணி (வாக்குகளைத் திருடியும்தான்) வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது (குஜராத் ஒளிர்கிறது). அதன்பிறகு அரசியலிலும் இது ஒரு டிரண்ட் ஆகிவிட்டது. துரதிஷ்டவசமாக, ஆட்சியில் அமர்வதை விட மக்களைத் திரையங்குக்கு வரழைப்பது கடினமாக உள்ளது.