எது நம்மை அதிகாரத்தின் முன் சட்டெனப் பணிந்து வணக்கம் போட, முதுகு வளைய வைக்கிறது?
என்னுடைய பதில் நம் அதிகார ஆசை என்பதே. அதிகார ஆசை எப்போதும் ஆசையாக வெளிப்படாது. அது அச்சமாகவே முதலில் தோன்றும் எனத் 'தோன்றுகிறது'. நாம் எதையோ இழந்துவிடுவோம், மறுக்கப்படுவோம் எனும் அச்சம் கூட ஒன்றைப் பெற வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என்பதம் எதிர்மறையான வெளிப்பாடுதான்.
பழக்கம். இதுதான் ஆகச் சுவாரஸ்யமானது. அன்றாட உலகம் ஒருவித ராணுவப் பயிற்சி முகாம் போலச் செயல்படுகிறது. குடும்பம், வேலையிடம், வெளியிடங்கள் எல்லாமே. நாம் தொடர்ந்து உடன்பட்டும் இணங்கியும்தான் பிழைக்கிறோம். மொழியை எடுத்துக் கொள்வோம்.
மொழி கேள்விகளாலும் கோரல்களாலும் ஆனது. வெயில் பொளக்கிறது இல்லையா என்று கேட்டால் ஆமாம் என்போம். வெயில் பொளக்கிறது என்றாலும் தலையாட்டுவோம். இப்படி நம் அன்றாடப் பேச்சே நம்மை அதிகாரத்தின் முன் பணியப் பயிற்சியளிப்பதுதான். அடுத்து, எல்லாருக்கும் நைசாகப் போவதற்காக நாம் கேலி, கிண்டல், சுயகருத்து எல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டுப் பேசத் தொடங்குகிறோம். இடத்திற்கு ஏற்றாற்போல பேசுகிறோம். சிரிக்கத் தேவையில்லாதவற்றுக்கு எல்லாம் சிரிக்கிறோம்.
அடுத்து பணம். நாம் பணத்தைப் பயன்படுத்தும்போது பல்வேறு பொருளாதார நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உடன்பட்டே ஆக வேண்டி வருகிறது. அதிகாரம் அங்கு அரூபமான தளத்தில் இயங்கினாலும் நேரடிப் பிரயோகத்தில் நமக்கு அது இன்பம் அளிக்கிறது. காதலிக்குப் பரிசு வாங்கிக் கொடுத்து நைஸ் பண்ணுகிறோம். இனிப்புகளை வாங்கித் தின்கிறோம். கட்டணங்களைச் செலுத்துகிறோம். நாம் ஓய்வு கொள்வதற்குக் கூட உழைக்க வேண்டி இருக்கிறது. ஆக, நம் ஓய்வு என்பதும் பணத்தால் வாங்கப்படுவதே. இன்பம், நிம்மதி, ஓய்வு எல்லாமே இப்படி பணத்தால் செயல்படுத்தப்பட நமக்கு ஒரு சேதி உணர்த்தப்படுகிறது. பணம் அடிமைகளின் அடையாள அட்டையாக இருக்கிறது. இதனால்தான் கல்ட் அமைப்புகளோ எதிர்ப்பண்பாட்டுக் குழுக்களோ தனிச் சமூகமாக மாறும்போது பணத்தைப் பயன்படுத்தாமல் பண்ட மாற்றம், சுய-நாணயம் என மாறுகிறார்கள்.
அடுத்து, குடும்பம். இது அனைவரும் நன்கு அறிந்ததே. ஒருவரைக் காயடிக்க முதலில் அவரைக் குடும்பத்துக்குள் அடைத்துவிட்டால் போதும். இதற்கடுத்து, நிறுவனம். கடைசியாக வெகுஜன ஊடகம்.
இப்படி ஒவ்வொன்றிலாகப் பயின்று வந்துவிட்டால் ஆசை நம்மைப் பிடித்துக் கொள்கிறது. இன்னதெனத் தெரியாமல் அலைபாய வைக்கும் ஆசை அது. யாரைக் கண்டாலும் கூழைக் கும்பிடு போட வைக்கும் ஆசை. பயமென்று நாம் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆசை அது. இப்படி வளைகிறவர்கள் விரைவிலேயே அதிகாரம் பெற்று அடுத்தவர்களைக் கட்டுப்படுத்தும்போதே அது அச்சமல்ல என்று நமக்குப் புரிகிறது.
இந்தச் சிக்கலான அமைப்புக்குள் எழுத்தாளர்கள் தினசரி உழன்று தம் மூர்க்கத்தை, கூர்மையைத் தக்க வைக்க வேண்டி உள்ளது. அது சுலபம் அல்ல. நமது ஒரு உடல் எழுத்தில் கூர்முனைக் கத்தியைப் போல மிளிர்ந்தாலும் நமது இன்னொரு உடல் அதிகாரத்தைக் கண்டதும் ஐயா வணக்கம் எனக் கைகூப்பி குனிகிறது. பெரும் கலகக்காரர்கள், போராளிகளில் இருந்து நைசான படைப்பாளிகள் வரைப் பலருக்கும் இது நடந்துள்ளது. எழுத்தாளர்கள் இப்படித் தம் இரு உடல்களையும் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
இதில் பிரச்சினையே இல்லாதவர்கள், கொடுத்து வைத்தவர்கள், இரு உடல்களும் வளைகிறவர்கள்தாம். அவர்கள் எழுத வரும்போதே குனிந்து நெளிந்தபடியே வருவார்கள். என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதையே எழுதுவார்கள். சொல்வார்கள். செய்வார்கள். எழுத்திலும் வளைவார்கள், நடத்தையிலும் வளைவார்கள். தாம் இப்படித்தான் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தனிமையில் புழுங்குவார்களோ என்னமோ. இவர்களுக்கு வாழ்க்கையில் 'தோல்வியே' கிடையாது.