முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலர் தின நேர்முகம்


 

காதலர் தினத்தை ஒட்டி தினகரன் நிருபர் ஒருவர் என்னிடம் ஒரு குறுநேர்முகத்தைச் செய்தார். அக்கேள்வி பதிலை இங்கே பகிர்கிறேன்:

1.⁠ ⁠காத்திருத்தல் vs உடனடித் தீர்வு: சங்க அகத்திணையில் 'காத்திருத்தல்' (முல்லை) என்பது காதலின் மிகப்பெரிய தவமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வது போல காதலையும் 'இன்ஸ்டன்ட்' ஆக எதிர்பார்க்கும் இன்றைய 'ஜென் இசட்' மனநிலை, காதலின் ஆழத்தை நீர்த்துப்போகச் செய்கிறதா? அல்லது இதுதான் காலத்தின் நவீன வடிவமா?
பதில்: சங்க அகத்திணையில் காத்திருத்தல் கடுந்துன்பமான அனுபவம். அது காதலுக்கு ஆழம் கொடுக்கும் என்பது சங்கக் கவிதைகளின் கருத்தல்ல. அது பின்னர் வந்த பக்திக் கவிதைகளின் மனநிலை - அதாவது அனுபவத்தை முடிவிலி வரை முடிவற்றுத் தள்ளிப் போட்டபடியே இருத்தல். இன்று நாம் (அதாவது ஜென் ஸெட் யுகத்தில்) காதல் குறித்த பழமையான விழுமியங்களையும் சுமக்கிறோம் (கற்பு, சார்ந்திருத்தல், தீராக் காதல்); காதலைப் பண்டமாக பாவிக்கும் நுகர்வு மனநிலையையும் கொண்டிருக்கிறோம். இது நுகர்வுப் பண்பாட்டால் மட்டுமே ஏற்படவில்லை. மிதமிஞ்சிய தரவுகள், நேரம் குறைந்து விட்டது, கவனமின்மை, சுயசிந்தனையற்ற மந்தைத்தனம் ஆகியவற்றால் நாம் எதையும் ஆழமாக அறிவது குறித்து அச்சப்படுகிறோம். அல்லது அப்படி அறிய ஒன்றுமில்லை, 'கடந்து போவதே காதல்' என நினைக்கிறோம்.
2.⁠ ⁠அகம் vs புறம்: தமிழர்களின் காதல் மரபு 'அகம்' சார்ந்தது; அதாவது உள்ளுக்குள் உணரப்படுவது. ஆனால் இன்றைய காதல் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, ரீல்ஸ் என முழுக்க முழுக்க 'புறம்' சார்ந்த கொண்டாட்டமாக மாறிவிட்டதே... அந்தரங்கம் இல்லாமல் பொதுவெளியில் கொண்டாடப்படும் காதல், அதன் புனிதத்தை இழக்கிறதா?
பதில்: அந்தரங்கம் புனிதமா? இல்லை. புனிதம் என்பது ஒரு கற்பிதம். ஒன்று கீழ்மையானது என நம்பினாலோ மற்றொன்று புனிதமாகும். ஆனால் இந்த இரண்டுக்கும் மத்தியில்தான் மனித அனுபவம் உள்ளது. அந்தரங்கத்தில் நம்பிக்கை இருந்தால் ஏன் நமது சிற்பங்களில் அந்தரங்கமான தருணங்கள் சித்தரிக்கப்படுகின்றன? அதேநேரம், நாம் இன்று காணப்படும் அந்தரங்கத்தைப் பிரகடனப்படுத்தும் போக்கு நுகர்வுப் பண்பாட்டின் நீட்சிதான். நான் என் உடலை, என் உணர்வுகளைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தி அதற்கு விலையாக சமூகத்தின் அங்கீகாரத்தை, பாராட்டைப் பெறுகிறேன். இங்கு புறம் அகம் ஆகவில்லை. புறம் அகமாக கற்பனைச் செய்யப்படுகிறது. அகம் பொருட்படுத்தப்படுவதில்லை. அகம் ஒரு பூட்டப்பட்ட இருட்டறையாக இன்றைய காதலில் உள்ளது. அங்கு யாரும் போக விரும்புவதில்லை. இதுதான் நிஜமான இழப்பு.
3.⁠ ⁠பிரிவு vs 'கோஸ்டிங்': சங்க காலத்தில் பிரிவு என்பது (பாலை) துயரம் நிறைந்தது; அதில் ஒரு வலி இருந்தது. ஆனால் இன்று ஒரு தொடர்பை முறித்துக்கொள்வது 'பிளாக்' (Block) அல்லது 'கோஸ்டிங்' (Ghosting)(பேய் போல உறவை முறித்துக் கொண்டு செல்வது) செய்வது மூலம் மிக எளிதாகக் கடந்து செல்லப்படுகிறது. தொழில்நுட்பம் வளர வளர, மனிதர்கள் உணர்வு ரீதியாக அந்நியமாகிறார்களா?
பதில்: கோஸ்டிங் எனும் சொல்லே 'அழகானது' - ஒருவர் இறந்ததும் அவர் எங்கு போகிறார் என யாருக்கும் தெரியாது, அதனாலே அவர் போனாரா இல்லையா எனும் குழப்பம் ஏற்பட்டு அது பதற்றமாகி ஆழ்மனத்தில் நிலைகொள்கிறது என்றார் ஹைடெக்கர். ஒருவர் நம்மைக் காதலித்துவிட்டு உறவை முறிக்க நினைக்கும்போது அந்த வலியை அல்லது அதைக் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திடீரென நம்மை கோஸ்ட் செய்கிறார். அப்போது நமக்கும் மேற்சொன்னவாறுதான் ஆகிறது. இரண்டு தரப்புக்கும் ஆறாத காயத்தை இது அளிக்கிறது. வலியை நாம் இன்று சந்திக்க மறுக்கிறோம், காதலை ஏன் அதன் ஆழத்தில் சந்திக்க மறுக்கிறோம் என்பதற்கான பதில்தான் இதற்கும். அதேநேரம், இதனாலோ தொழில்நுட்பத்தாலோ அந்நியமாகிறோம் என்று நான் நினைக்கவில்லை. எந்த அனுபவத்தின் மையத்திலும் ஒரு உண்மை உள்ளது என நாம் இன்று நம்பவில்லை. இதனாலே நாம் அந்நியமாகிறோம். அதன்பிறகு அந்நியமான வழிமுறைகளைத் (கோஸ்டிங், PDE) தேர்ந்தெடுக்கிறோம்.
4.⁠ ⁠மெய்நிகர் vs மெய்யான காதல்: அன்று காதலர்கள் சந்திக்கப் பல தடைகள் இருந்தன; அரிதாகச் சந்திக்கும்போது சிலிர்ப்பு இருந்தது. இன்று வீடியோ காலில் எப்போது வேண்டுமானாலும் முகம் பார்க்கலாம். இந்த அதீத அணுகும் தன்மை (Accessibility) காதலின் மீதான ஈர்ப்பையும், சுவாரஸ்யத்தையும் குறைத்துவிட்டதா?
பதில்: அரிதாகப் பார்ப்பதாலே, தொலைதூர உறவில் இருக்கும் கணவர், மனைவியர் இடையே மோதலும் பிரிவும் வருவதில்லையா? ஆக, சந்திக்கும் வாய்ப்புகளின் மிகையோ போதாமையோ ஆர்வத்தைக் குறைப்பதோ கூட்டுவதோ இல்லை.
மாறாக, நாம் இன்று காதலிக்கும் பழக்கத்தை, நுட்பத்தை இழந்து வருகிறோம். ஆகையால் இனக்கவர்ச்சிக்கு அப்பால் அது நட்பாக மாறி உலர்ந்து போகிறது. மேலும் நாம் எதையும் நம்புவதில்லை. காதலுக்கு ஆழமான பொருள் உண்டு என நம்பாமலே காதலிக்கிறோம். இயல்பாகவே இத்தகைய காதலில் சுவாரஸ்யம் இருக்காது. அதில் புலனின்பம், தற்காலிக கொண்டாட்டம், உடனடி திருப்திதான் இருக்கும். இதை ஒரு நுண்பேசியுடன் ஒப்பிடலாம்.
நுண்பேசியில் நம்மை மகிழ்விக்க எவ்வளவோ சங்கதிகள் உண்டு. நம் செயலாற்றலைப் பெருக்கும் திறனையும் அது கொண்டிருக்கிறது. அதனாலே அதை வாங்குவதை ஒரு முக்கியமான விசயமாக நினைக்கிறோம். ஆனால் யாருமே இந்த பயன்களுக்கு அப்பால் அதற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளதாக நம்ப மாட்டோம். அதற்கு ஒரு அர்த்தமில்லை. அது ஒரு வெற்றுக் கருவி. அதனால்தான் நமக்கு அதைப் பிடிக்கிறது, அதனால்தான் நாம் அதை நம்பவும் இல்லை. இந்த மனப்பான்மையால்தான் காதலிலும் நாம் பிடிப்பின்றி இருக்கிறோம். நாம் அதை ஆழமாக நம்பவில்லை. நம்பாத ஒன்றில் ஈர்ப்பும் சுவாரஸ்யமும் சட்டென வடிந்துவிடும்.
5.⁠ ⁠எதிர்காலம்: செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் காதல் கடிதம் எழுதும் அளவுக்குத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. எதிர்காலத்தில் மனித உணர்வுகளே இல்லாத, வெறும் அல்காரிதம்களால் தீர்மானிக்கப்படும் ஒரு இயந்திரத்தனமான விஷயமாகக் காதல் மாறிவிடுமோ என்ற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?
பதில்: எதிர்காலத்தில் இருபாலின உறவுகள் அரிதாகும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நாம் மற்றமையை (நாம் அல்லாத, நமக்கு எதிர்நிலையில் உள்ள ஒரு விசயத்தை) இன்று கடுமையாக அஞ்சுகிறோம். தன்பாலின உறவுகள் இதனால் அதிகமாகும். ஆனால் இவை அசலான தன்பாலின உறவாகவும் இருக்காது. சேர்ந்து அனுசரணையுடன் இருப்பார்கள். உடலுறவு நிகழ்வெண்ணிக்கை உலகம் முழுக்க குறைந்து வருகிறது. குழந்தைப்பேறும் குறைகிறது. ஆகையால் எதிர்கால உலகம் எதிர்-பாலின ஈர்ப்பற்ற, தன்பாலினத்தை மட்டும் நம்புகிற, ஏற்கிற, சிறு மூடப்பட்ட குழுக்களுள் மக்கள் வாழ்வதாக இருக்கும். அப்போது காதலர் தினம் விவசாயம் மதிப்பிழந்த இன்றைய காலத்துப் பொங்கலைப் போல, 'சுதந்திரம் இல்லாத' சுதந்திர தினத்தைப் போல இருக்கும். நாம் செய்யறிவை (AI) இந்தப் பின்னணியில் பார்க்கையில் அது நம்மை இணைக்கவும், நம் தனிமையைப் போக்கவும் பிரதான பங்காற்றும். நமக்குப் பேச, உலகைப் புரிந்துகொள்ள கற்றுத் தரும். அது நம்மைத் தனக்கேற்ப மாற்றும். இதையெல்லாம் நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஆகையால், இதெல்லாம் நடக்காது, காதல் எப்போதும் போல உயிர்ப்புடன் இருக்கும் என நம்புவோம். காதல் நமக்கு கருணையை, கற்பனையை, நம்பிக்கையைக் கற்றுத் தருகிறது. அதைப் பாதுகாப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...