Skip to main content

தொழில்நுட்பம் ஏன் கதாசிரியர்களை வெளியேற்றுகிறது?



‘சாய் வித் சித்ரா’ எழுத்தாளர் வட்ட மேஜை விவாதத்தின் ஒரு அத்தியாயத்தில் பங்கேற்பாளர்கள் ஏன் தமிழ் சினிமாவில் திரைக்கதையாளர்களுக்கு இடம் குறைவாக உள்ளது எனும் தலைப்பில் பேசிய விசயங்கள் என் சிந்தனையைத் தூண்டின. தமிழ் சினிமாச் சூழலை வைத்து அவர்கள் அவதானித்தவை (தற்போதைய இயக்குநர்கள் ஹீரோவுக்குக் கதை சொல்லி ‘புரோஜெக்டை’ ஏற்க வைப்பதால் அங்கு கதாசிரியரின் இடம் இல்லாமல் போவது, இயக்குநர்களின் ஈகோ, அவர்கள் இலக்கியம் வாசிக்காதது, தயாரிப்பாளர்களுக்கு திரைக்கதை அறிவு குறைவாக இருப்பது) சரியாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் இன்னும் பரந்துபட்ட கோணத்தில் இதைப் பார்க்க முடியும். அடிப்படையில் நவீன சினிமா எப்படியான கதைகூறல் நிகழ்வு? அதில் எழுத்தாளருக்கோ அவரது கதைக்கோ இடமுண்டா? இதுதான் எனக்குள்ள கேள்வி. இல்லை என்பதுதான் என் பதில்.

சினிமா ஒரு தொழில்நுட்பக் கதை. கதாசிரியரின் சொற்கள், நடிகரின், கதைசொல்லியின் உடல், உணர்ச்சிகள், குரலின் அவசியமின்றி கதைசொல்ல உதவும் உபகரணத்தை நாம் தொழில்நுட்பம் என்று இங்கு புரிந்துகொள்ளலாம். ஒரு நாடகத்தில் வரும் ‘செட்’, தானியங்கி / ஊழியர்கள் இயக்கும் கருவிகள், சினிமாவில் ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் ஆகியவையும் தொழில்நுட்பம்தான். நான் என் கைகளின் நிழலைக் காட்டி ஒரு கதை சொன்னாலும் அது தொழில்நுட்பம்தான். இது கதையை வெளிமுகமாக்குகிறது. கதையை உள்வாங்கி என் கற்பனையால், அனுபவத்தால், உணர்ச்சிகளால் உருவேற்ற வேண்டிய அவசியத்தை ரத்து செய்கிறது. கதையில் இருந்து பார்வையாளனை வெளியேற்றுகிறது. வெளியேற்றப்படும் பார்வையாளன் அடையும் திகைப்பே சினிமாவின் அழகு, மதிப்பு, அதற்காகத்தான் மக்கள் திரைப்படத் துறையினருக்கு பணத்தை அள்ளித் தருகிறார்கள். தம்மைக் கதையில் இருந்தும், மொழியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஊதியம் அது. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் திரையரங்கில் காணொளியின் ஒளியளவைக் கூட்டினாலோ வசனம், இசையின் ஒலியளவைக் கூட்டினாலோ குறைத்தாலோ காணொளியை நிறுத்தி ஒலியை மட்டும் ஓட விட்டால் போதும் - பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு நாவலைப் படிக்கும்போது காகிதம் தரமாக இல்லையெனக் கோபப்பட மாட்டீர்கள். அதில் உள்ள ஓவியங்கள் தெளிவாக இல்லை என அதைக் கிழித்து எறிய மாட்டீர்கள். வாசகர்கள் எந்த வெளிமுகமான உதவியும் இன்றி கதைக்குள் உலவுவார்கள். பார்வையாளர்கள் வெளிமுகமான உதவியுடன் மட்டுமே உலவுவார்கள் என்பதன்றி உள்முகமான கதையம்சம் அவர்களைத் தொந்தரவு பண்ணவும் கூடும். அதாவது பார்வையாளர்கள் படத்தில் வரும் பிம்பங்கள், ஒலிக்கோர்வையைக் கொண்டும், கருத்துக்களை தம் அறிவாலும் ஆய்வாலும் பெருக்கியும் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நிபந்தனை இருந்தாலும் எதிர்ப்பார்கள். (மிகச்சில தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள், நிறைய வாசிப்பும் கற்பனையும் கொண்டவர்கள், மட்டுமே அத்தகைய படங்களைப் பார்க்க முடியும். அவர்களுக்கும் கூட வெளிமுகமான காட்சிமொழியும் இடையும் கைகொடுக்க வேண்டும்.) அதாவது திரைப்படம் உங்களைக் கற்பனை செய்யவும், ஊகிக்கவும், சிந்திக்கவும் வைக்க முடியாது. அது உங்களைக் காட்சிகளில் இருந்துகூட 'வெளியேற்றி' விடும். அதனாலே திரைப்படம் இயல்பாகவே ‘கதைக்கு’ எதிரானதாக உள்ளது.

ஆரம்பத்தில் கதையை ஒரு ஆசிரியர் முகமூடி அணிந்து நிகழ்த்திக் காட்டியதாக அரிஸ்டாட்டில் தன் “கவிதையியலில்” சொல்கிறார். அதன் நீட்சியாக நடிகர்கள் தோன்றி கதாசிரியர் பின்னுக்குப் போக நாடகம் தோன்றியது. நாடகத்தில் கருவிகளும் செட்டும் வந்ததும் அதில் தொழில்நுட்பம் வலுவாகத் தோன்றியது. படக்கருவியின் அறிமுகத்துடன் தொழில்நுட்பம் முழுமையாகக் கதையை ஆட்கொண்டது. நான் சின்ன வயதில் பார்த்த “அபூர்வ சகோதர்கள்” படத்தில் என் மனத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த காட்சி குள்ளனான அப்பு செய்யும் சாகசக் காட்சிகள். ஏனென்றால் நான் அவற்றை நடப்புலகில் கண்டதில்லை. ஏனென்றால் கதைக்கு அப்பால் என்னைத் தூக்கிச் செல்லும் சங்கதிகள் அக்காட்சிகளில் இருந்தன. மற்றொன்று “ஜுராஸிக் பார்க்” (தெ லாஸ்ட் வெர்ல்ட்). வனப்பகுதியில் ஒரு குழந்தை. பின்னால் புதரில் இருந்து கோழி அளவுக்கு உள்ள ஒரு குட்டி டினோசர் (கோம்ப்ஸோகெனெதெஸ்) எட்டிப் பார்க்கிறது. குழந்தை ஆர்வத்தால் தூண்டப்பட்டு அதை நெருங்கி பார்க்க, அதற்கு உணவளிக்க மேலும் பல குட்டி டினோசர்கள் தோன்றிச் சூழ்கின்றன. குழந்தையின் முகத்தில் பீதி. அவை அக்குழந்தையைக் கடிக்கத் தொடங்குகின்றன. இக்காட்சி எனக்கு கடும் பயத்தையும் பரவசத்தையும் ஒரே சமயம் அளித்தது. நீங்கள் இக்காட்சிகளை முழுக்க வெளிமுகமான பிம்பங்கள் என்று அழைக்கலாம். இவைத் திரைப்படத்தின் பகுதிதான். ஆனால் இவை ‘கதை’ அல்ல. இவற்றை நாம் கற்பனை மட்டும் செய்வதில்லை. நம் கற்பனையையும் தாண்டி நம்மை இவை ஆக்கிரமிக்கின்றன. ஏதோ பேயொன்று நம் முன் தோன்றி நம்மை உறைய வைப்பதைப் போலத் தொந்தரவு செய்கின்றன. மேற்சொன்ன காட்சியை நீங்கள் தமிழ் சினிமாவின் மிகப்பிரசித்தமான காட்சியான ‘பராசக்தி’ நீதிமன்றக் காட்சியுடன் ஒப்பிடுங்கள். அக்காட்சி நம் உணர்ச்சியைத் தூண்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஆனால் நமக்கு புலனின்பத்தை ‘ஜுராஸிக் பார்க்’ காட்சியைப் போல அளிப்பதில்லை. முதலாவது கதை, இரண்டாவது தொழில்நுட்பம்.

என்னதான் தொழில்நுட்பத்தால் செலுத்தப்படும் கதைக்கு அடிப்படைக் கட்டமைப்பை திரைக்கதையாளர்களே அளிக்கிறார்கள் என்றாலும் அது நமக்கு நேரடியாகக் கதையைத் தருவதில்லை. கதையில் இருந்து நம்மை வெளியேற்றி ஒரு புலனுணர்வு அனுபவத்தையே கொடுக்கிறது. இந்த வெளியேற்றம் தீவிரமாக ஆக நாம் சினிமாவின் பரவசத்துக்கு, திகைப்புக்கு அதிகமாக ஆளாகிறோம் (இதே காரணத்தால்தான் நடிகர்கள் நேரில் தோன்றும்போதும் நாம் பரவசத்துக்கு உள்ளாகிறோம்.). தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாக ஆக பார்வையாளர்களான நாம் சினிமாவை வெறும் பிம்பங்களாகப் பார்க்கும் மனநிலைக்கு ஆட்படுகிறோம். இன்று சினிமா குறித்த தெரியாத பார்வையாளர்கள் கூட அதிகமாக காட்சிமொழியைக் குறித்து உணர்வு கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் அந்த ‘அனுபவத்தைக்’ குறித்து திரையரங்கில் இருந்து வெளிவரும்போது பேசுகிறார்கள். காட்சி, வசனம் குறித்து பேசுவதில் இருந்து இது முழுக்க வேறுபட்டது.

மலையாளத்தில் இன்றும் திரைக்கதைக்கு ஓர் இடமிருப்பது அவர்கள் தொழில்நுட்ப அனுபவத்தை விட கதையனுபவத்தை நம்பியிருப்பதால்தான். அவர்களுடைய பட்ஜெட்டும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். கதையில் லயிக்க வைப்பதும், அடுத்து என்ன வரப்போகிறது எனும் ஆர்வத்தைத் தூண்டும் சின்னச்சின்ன தந்திரங்களால் பார்வையாளரைக் கட்டிப் போடுவதும் அவர்களுக்கு அவசியம். ஆனால் அங்கு முதலீடு பெருகும்போது அவர்கள் தொழில்நுட்ப சினிமாவாக அதிகம் மாறுவார்கள். மொபைல் விளையாட்டுகள் இதற்குச் சான்றாக உள்ளன. இதுதான் சினிமாவின் எதிர்காலம் - நாம் திரையரங்கில் அமர்ந்து காட்சிக்குள் நுழைகிற, காட்சியின் வளர்ச்சியில் பங்கெடுக்கிற (immersive) தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும். செய்யறிவைக் கொண்டு நம்மையே நாயகனாக / நாயகியாகத் திரையில் காணும் நிலை வரலாம். நாம் முழுமையாக ‘வெளியேற்றப்படுவோம்’. எதிர்காலத்தில் கதையின் இடத்தில் ‘விளையாட்டே’ இருக்கும். திரைக்கதையாளர்கள் ஒரு மொபைல் விளையாட்டைப் போல கட்டமைப்பை (பாத்திர அமைப்பு, பின்னணி விபரம், ஆக்‌ஷன், விளைவுகள்) மட்டுமே உருவாக்குவார்கள்.

இது சினிமாவின் சாபம். தொடர்ந்து உலகில் இருந்து, கற்பனையான உணர்வுகள், கருத்துக்களில் இருந்து வெளியேற்றப்படும் நாம் முழுக்க அந்நியப்படுவோம். இதனாலே சினிமா நம் ஆன்மாவை அரித்துத் தின்றுவிடும் என நினைக்கிறேன்.

‘கதையே’ நம்மை எப்போதும் காப்பாற்றும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...