ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள விழைகிறார். சாகித்ய அகாடெமி, ஞான பீடம் ஆகியவற்றில் தீர்மானிக்கும் சக்தியாக தானே இருக்க வேண்டும் எனச் சொல்வதிலும், இவற்றைவிட உயர்ந்த விருதை அளிக்கும் அதிகாரம் மிக்கவர் தாம் எனக் காட்டிக் கொள்வதிலும் அவருக்கு ஒரு சந்தோஷம்.
ஆனால் இதில் என்ன பெருமை உள்ளது? குருமூர்த்திக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அதிகாரத்தை அதிகாரத்தால் வெல்ல வேண்டும் என்பதே கீழ்மையான பார்வை. இது ஒரு எழுத்தாளரின் வேலை அல்ல. இதனாலே ஜெயமோகனின் அறச்சீற்றம் போலியானது என நினைக்கிறேன். ஒருவர் தான் நம்புகிற ஒன்றுக்காகவோ அதற்கு எதிராகவோ லாபி செய்யும்போது அவர் அந்த ஜனநாயகமான கட்டமைப்பை சிதைக்கிறார். வைரமுத்து வாங்கிவிடக் கூடாது தங்கமுத்து வாங்க வேண்டும், அதற்காக நான் காய் நகர்த்துவேன் என முயல்வதே ஜனநாயக விரோதமான நடவடிக்கைதான். ஏனென்றால் அதன் பிறகு அப்படைப்பாளியே ஒரு தனிநபரின் முயற்சிகளின், ஆளுமையின் செல்வாக்கினால் மதிப்புறுகிறவர் ஆகிறார்; அவர் தன்மதிப்பை இழக்கிறார். ஒருவர் லாபி செய்து ஒன்றைப் பெறுவதைவிட அதை வாங்கித் தருவதைத் தகுதியாக மற்றொருவர் கருதுவது இன்னும் ஆபத்தானது.
தனியார் விருதோ அரசு விருதோ ஒரு படைப்பு தன் தகுதியால், தேர்வுக்குழுவின் மதிப்பீட்டால் வெல்ல வேண்டும். அதற்கான இடைஞ்சலற்ற, நியாயமான நடைமுறையை உருவாக்கவே முயல வேண்டும். நம் அதிகார விளையாட்டுக்கு, உட்கட்சி மோதலுக்கு அதை இரையாக்கப் பார்க்கக் கூடாது.
Comments