மரணத்துக்கு காத்திருக்கிறேன்
படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்
என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப
இரக்கப்படுகிறேன்
இந்த விறைத்த
வெளுத்த
உடலை
அவள் காண்பாள்
ஒருமுறை உலுக்குவாள், பிறகு
ஒருவேளை
மீண்டும்
"ஹேங்க்"
ஹேங்க் பதிலளிக்க
மாட்டான்
என்னை வருத்துவது
என் மரணமல்ல, என் மனைவிக்கு
இந்த இன்மைக் குவியலை
விட்டுப் போகிறேன் என்பதுதான்.
ஆனாலும்,
அவள் அருகே
உறங்கிய
அத்தனை இரவுகளும்
பயனற்ற அந்த
சர்ச்சைகளும்
கூட
எப்போதுமே அற்புதமான
விஷயங்கள்
என்பதை
அவள் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்
அத்தோடு அந்த
நான் எப்போதும்
சொல்ல பயந்த
கடின வார்த்தைகளையும்
இப்போது
சொல்லி விடலாம்:
உன்னை
காதலிக்கிறேன்.
