மீதமுள்ள வரிகள்
ஒரு கண்ணாடி புட்டியின்
குடிக்கப்பட்ட
அவற்றை வெளியேற்ற முடியாது
அதற்கு
நீங்கள் அத்தனை வார்த்தைகளையும்
அழித்தாக வேண்டும்
ஆனால்
வேறு வழிகள் உள்ளன
என்றாவது பயன்படுத்தப் போவதாய்
உறுதி எடுத்துக் கொள்ளலாம்
மிச்சமான வரிகளைக் கொண்டு
ஒரு கவிதை எழுதலாம்
ஒரு உறவை ஆரம்பிக்கலாம்
புரியாத பரீட்சார்த்த கதையொன்றில்
எங்காவது இணைக்கலாம்
இது போன்ற வெவ்வேறு மிச்சமான் வரிகளை
இணைத்து
ஒரு கவிதை நூலுக்கான
விமர்சனக் கட்டுரை செய்யலாம்
மிச்சமான வரிகளுக்கு
புதிய அர்த்த தளங்களை
கண்டடையலாம்.
அவ்வரிகள்
தனித்தே
புகழ் தேடித் தந்து
நம் இடத்தை வரலாற்றில் நிறுவிடும்
என்று பெருமை கொள்ளலாம்
அவற்றைக் கொண்டு
ஒரு நாவலை துவக்கி
வாழ்நாளெல்லாம் எழுதலாம்
எங்குமே பொருள்பட சேர்க்க முடியாத
மிச்சமான
வரிகளைக்
கொண்டு நீங்கள் எவ்வளவோ செய்யலாம்
அழிப்பதை தவிர
அதற்கு,
நீங்கள்
பொருத்தமான
ஒரு பெயரை தந்து
தோலின் நிறம் தந்து
ஆடை அணிவித்து
நாற்காலியில் அமர்வித்து
ஒரு வரலாற்றை தந்து
வரலாற்றுக்கான விளக்கங்களும் தீர்ப்புகளும்
ஒட்டின ஊடக விவாதங்களும் தந்து
ஒவ்வொன்றாய் தர வேண்டும்.
